Published : 26 Nov 2022 09:41 PM
Last Updated : 26 Nov 2022 09:41 PM

இளையராஜாவுடன் இசையிரவு 19 | ‘மெட்டி ஒலி காற்றோடு...’ - பார்வை பட்ட காயம் பாவை தொட்டு காயும்!

இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் பல வகை உண்டு. சிலருக்கு அவருடைய தனிப்பாடல்கள் அதிகம் பிடிக்கும், ஒரு சிலருக்கு அவரது இசையில் ஒரு குறிப்பிட்ட பாடகர் பாடியவை என்றால் பிடிக்கும், இன்னும் சிலருக்கு அவரது சோகப் பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம், பலருக்கு காதல் பாடல்கள், சிலருக்கு அவரது பக்திப் பாடல்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அனைத்து வகையான ரசிகர்களுக்கும் பிடிக்கும் பல பாடல்களை இளையராஜா தந்துள்ளார். அப்படி எப்போது கேட்டாலும் மனத்தின் அகம் நுழைந்து ஆட்சி செய்யும் ஒரு பாடல்தான் இது.

கடந்த 1982-ம் ஆண்டு இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மெட்டி திரைப்படத்தில் இடம்பெற்ற 'மெட்டி ஒலி காற்றோடு' என்ற பாடல்தான் அது. வாழ்வியல் யதார்த்தங்களை திரையில் செதுக்கிய இயக்குநர் மகேந்திரனின் திரைப்படங்களுக்கு இசைஞானியின் இசை அற்புதங்களைச் செய்திருக்கும். அந்த யதார்த்த மனிதர்களின் வலிகளை இசைவழி கடத்தியதில் அவரது இசை முக்கியப் பங்கு வகித்தவை. இந்தப் பாடலை இசைஞானி இளையராஜாவே பாடியிருப்பார், அவருடன் சேர்ந்து தனது மயக்கும் குரலால் கோரஸ் மட்டும் பாடியிருந்தாலும், பாடல் கேட்கும் போதெல்லாம் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தியிருப்பார் ஜானகி அம்மா. இந்தப் பாடலை இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியருமான கங்கை அமரன் எழுதியிருப்பார்.

இந்தப் பாடலை, எப்போது கேட்டாலும், தொடக்கத்தில் பழைய ரெக்கார்ட் பிளேயரில் இருந்து வரும் ஒருவிதமான ஒலி (Noise) இருந்து கொண்டேயிருக்கும். இப்பாடலின் தொடக்கத்தில் நா நநநநநநநநந என்று ஜானகி அம்மமா பாடத் தொடங்கும்போதே, சேர்ந்து இசைஞானியும் ஆஆஆஆஆஆ என்று ஆலாபனை செய்து கொண்டிருப்பார். மலையருவி ஒன்று நம் மனங்களில் முழுவதுமாய் கொட்டித் தீர்த்தற்கு இணையான சுகமது. ஹம்மிங் முடிந்த கனத்தில், கிடார், கீபோர்ட், பெல்ஸ் சேர்ந்து நம்மை ஒரு உன்னத நிலைக்குக் கொண்டு சென்றிருக்கும்.

விடியலுக்கு முன் கருத்துக்கிடந்த வானத்தின் மேகத்திட்டுக்களைப் போலத்தான், அவளது மனத்திலும் மூப்படைந்த மகள்கள் குறித்த கனவுகளும் கற்பனைகளும் தொக்கி நின்றன. ஒடுக்கி வைப்பதையே ஒழுக்கமென்ற கற்பிதங்களுக்குக் கட்டுப்படாமல் அலையலையாகப் படையெடுக்கிறது கடல். தூரக்கடலின் ஈர மணலில், மணல் வீடு கட்டி மகிழ்ச்சியைக் குழைத்துக் கொள்கிறது மனது. ஒரு தாயும், மண வயதை எட்டிய இரண்டு மகள்களும் கடற்கரைப் பரப்பில் குழந்தைகளாய் மாறிச் செல்ல சண்டையிட்டுக் கொள்வதைக் கண்டு ரசிக்க சூரியனை கைப்பிடித்துக் கூட்டி வருகிறது கடல். உலகின் சரிபாதி சமூகத்தின் சந்தோஷ சங்கமத்தில் சிவந்த சூரியன், இந்த மூவர் மீதும் பட்டதால் இன்னும் கொஞ்சம் கூடுதலாய் மஞ்சளாகிறதோ என்பது போன்ற உணர்வைத்தான் ராஜாவின் தொடக்க இசை பாடல் கேட்பவர்களுக்கு தந்திருக்கும். பாடலின் பல்லவியை,

"மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சை தாலாட்ட
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே" என்று கங்கை அமரன் தனக்கே உரிய எளிமையான வார்த்தைகளைக் கொண்டு கவியரங்கம் நடத்தியிருப்பார். காலம் கடந்து அவரது படைப்புகள் நிற்பதற்கு இந்த வார்த்தைத் தெரிவுகள் மிக முக்கியமானவை.

எதிர்ப்பாற்றல் மழுங்கடிக்கப்பட்டு தங்கள் மீது சுமத்தப்பட்ட பழிகளுக்கு முரணாக தலைகீழாக சுமக்கப்படுகிறது குடங்கள். முப்பெரும் பெண்மையின் முரண் எதிர்ப்பு முன்னெடுப்புக்கு பச்சைக் கொடிக்காட்டி பாசத்தை பகிர்ந்தன பசுஞ்செடிகள். பேசவும், சிரிக்கவும் விதிக்கப்பட்ட தடைகளை தகர்த்து, சத்தமாக இன்னும் சத்தமாக அவர்களோடு பேசி சிரித்து மகிழ்கின்றன தாவரங்கள். விரும்பியவற்றை உண்டு ரசித்து நடக்கும் அவர்களது பாதைதோறும் பச்சைப் புல்வெளி தழைத்தோங்கி செழிக்கிறது.
சுகமான சுமையான தங்கையை தூக்கி மகிழும் அக்காக்களின் அன்பு அளவற்றது. இந்தப் பாசப் பிணைப்பினத் தாங்கிக் கொள்ள முடியாத நிலமகள் அவர்களது காலடித் தடுக்கி, விழச்செய்து அழவைத்து ரசிக்கிறது என்பது போலத்தான் பாடலின் பல்லவிக்கான காட்சிகள் திரையில் விரிந்திருக்கும்.

பாடலின் முதல் சரணத்துக்கு முன் வரும் முதல் இடையிசை, ராகதேவனின் தனிமுத்திரைப் பதிக்கும் ஒற்றை வயலின்தான். மயிலிறகை விட மென்மையாக மெல்ல, மெல்ல பாடல் கேட்பவர்களின் மனங்களை வருடிச் சென்று, புல்லாங்குழலுடன் சேரும் இடத்தில் ஆத்ம திருப்தியை தரும். பின் இவைகள் இரண்டும் சேர்ந்தோடி கீபோர்ட், கிடார், வயலின்களோடு சேரும் இடத்தில் பெருந்தவத்தின் பேரானந்தத்தை எட்டும்.

வடக்கத்திய பெண் போன்ற ஒருத்தி அறுஞ்சுவை இசையை வெறுங்கையால் இசைத்து மகிழ வயலின் கம்பிகள் உயிர் பெறுகின்றன. மூன்று பெண்களைக் கொண்ட அக்குடும்பத்தின் கலப்படமற்ற அன்பு புன்னகையில் மீண்டும் மீண்டும் பூத்து பூரிக்கிறது ஒற்றை வயலின். ஒரு தாயும் இரு மகள்களும் பேசிக் கொள்வதைக் கேட்டு மகிழ்ந்ததால் விரவிக் கிடந்த புல்வெளிகள் மீண்டும் துளிர்த்தன. அக்காக்கள் உடனான சண்டையில் அடிவாங்கியும், அடிகொடுத்தும் திமிர் கொள்ளும் தங்கைகள் பாக்கியசாலிகள். நீளக்கடல் முழுவதும் ஓடிக்கடக்க எத்தனிக்கும் அவர்கள் ஓரிடத்தில் விளையாடி மகிழ, எல்லா அலைகளையும் அங்கேயே அனுப்பி வியக்கிறது கடல் என முதல் சரணத்துக்கு முன்வரும் இசைக்கான காட்சிகள் விவரிக்கப்பட்டிருக்கும்.

அங்கிருந்து ராஜா தொடங்குவார் பாடலின் முதல் சரணத்தை,

"வாழ் நாளெல்லாம் உன்னோடுதான்
வாழ்ந்தாலே போதும்
வாழ்வென்பதின் பாவங்களை
நான் காண வேண்டும்
நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை
பூவை வைத்த பூவாசம் போதை கொண்ட உன் நேசம்
தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் சேராதோ" என்று வரும் அந்த வரிகள் தோறும் பெண்மையை உன்னதமாய் பாவித்து உயர்வாக எழுதியிருப்பார் கங்கை அமரன்.

நடக்கும்பாதையில் சிறுமுள் தைத்ததை பகடி செய்யும் இளையவளின் கேலி, வலியை மறைத்து கோபம் கொள்ளச் செய்கிறது மூத்தவளை. வலிய திணிக்கப்பட்ட கண்மூடி பழக்கங்களின் மீது மெல்லிய காற்று நிரப்பிய சைக்கிளின் மீதமர்ந்து பயணிக்கும் அவளுடன் எதிர்ப்பாற்லும் சேர்ந்தே பயணிக்கத் தொடர்கிறது. அவளது துணிச்சல் குறித்த கவலையிலும், ஊர் என்ன சொல்லும் என்ற அச்சத்திலும், அவள் பயணிக்கும் பாதையின் திசைநோக்கி பார்த்திருக்கச் செய்கிறது அவளது தாயை. செல்லத்தை விடவும் மிகவும் செல்லமான சகோதர சண்டைகளின் சத்தத்தில், சவுக்கு காடுகளின் பேரமைதி இரைச்சலுக்கு உள்ளாகிறது. அங்கிருந்து தொடங்கும், பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன் இடையிசை.

ஜானகி அம்மாவின் குரலில் வரும் கோரஸ் இந்த இடத்தில் அதிஅற்புதமான ஆச்சரியங்களை நிகழ்த்தியிருக்கும். அதுவும் துருதுருத்து துத்துத்தூ என்று பாடும் இடங்களில் எல்லாம் ஜானகி அம்மா விவரிக்க இயலாத வண்ணம் மாயங்களை செய்திருப்பார்.

ஆதிக்கத்தின் கையிலிருந்து சாமான்யர்களின் கைக்கு மாறிய குடையும், வீட்டு வேலைகளின் நிரந்தரச் சின்னமான குடமும் காற்றில் பறந்து வருகின்றன. பாரபட்சம் இல்லாத தங்கள் அம்மாவின் மீது பூமழைத் தூவி மகிழ்கிறது மகள்களின் மனது. பூமழைத் தூவலை கண்கொத்திப் பார்க்கும் வானத்தின் பார்வையிலிருந்து மறைத்து முயன்று தோற்று சிரிக்கிறது குடை. தாயின் காலடி சுடுமணல்பட்டு நோகா வண்ணம் செயற்கை நிழலைக் கொண்டு வர முயற்சிக்கின்றன மகள்களின் கையிலிருந்து நீளும் குடைகள்.

வெள்ளிக் குடத்தின் பிரதிபலிப்பில் நெற்றிப் பொட்டை சரிசெய்து கொள்ளும் இளையவளின் முகம் பார்த்து மகிழ்வுகிறது வானம். எதையோ கொரித்தபடி நடந்து செல்லும் மூத்தவளின் முகம் பார்க்க முன் வந்த தலைமுடி, திரும்பிச் செல்ல மனமின்றி மயங்கி சரிந்து கிடக்கிறது அங்கேயே. குடும்பமாய் சேர்ந்து இறகுகள் முளைத்து கோழிகளுக்கு இரை ஊட்டி மகிழ, இனிதாய் கரைகிறது காலம் என்பது போல் அந்த இரண்டாவது இடையிசையை இசைமொழி பேசியிருக்கும். பாடலின் இரண்டாவது சரணத்தை,

"பெண் முல்லையே என் கண்மணி
ஊர்கோல நேரம்
பொன் காலடி படும் போதிலே
பூந்தென்றல் பாடும்
பார்வை பட்ட காயம்
பாவை தொட்டு காயும்
எண்ணம் தந்த முன்னோட்டம்
என்று அந்த வெள்ளோட்டம்
கண்ட பின்பு கொண்டாட்டம்
கண்டாடும் என் நெஞ்சம்" என்று எழுதப்பட்டிருக்கும்.

குழந்தைகன் சண்டையின்போது அம்மா மீது தெரியாமல் அடிபட்டுவிட்டதால் பதறி துடிக்கிறது மனது. கண்ணைக் கட்டிக் கொண்டு குடங்களைச் சுமந்து, கீழே இடறிய தருணங்கள் அம்மாவும், அக்காவும் பார்த்து சிரிப்பைதை அவளது வெட்கம் மறைத்துக் கொள்கிறது. பரந்த கிடந்த அந்த வெளி முழுவதும், வட்டமான பெரிய பொட்டுடனும், முகத்தில் சரிந்த முடியுடனும், வடக்கத்திய பெண் போல சேலை அணிந்த 3 பெண் தேவியரின் ஆனந்த சிரிப்பில் வானம் வசப்படுகிறது. அந்த வனம் முழுவதும் மனம் குளிர, தலைசூட வாங்கிய பூவை பெண் சிலையொன்றின் காதில் சூடிப்பார்த்து மகிழ்வுறுகிறது இளையவளின் மனது . இந்த மூவரையும் நாள் முழுவதும் பார்த்து பார்த்து ரசித்து, திரும்பிச் செல்ல மனமின்றி அங்கேயே தங்கிவிடுகிறது கடல். ராஜாவின் ஈர்ப்பிசை நாளும் ஈர்க்கும்...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x