Published : 26 Nov 2022 06:32 PM
Last Updated : 26 Nov 2022 06:32 PM
காவல் துறை கண்டுகொள்ளாத குற்றத்தை தனியாளாக நின்று துப்பறியும் ஏஜென்ட் ஒருவரின் கதையே ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் ஒன்லைன்.
பிரைவேட் டிடெக்டிவாக இருக்கும் கண்ணாயிரம் (சந்தானம்) தனது தாயின் இறப்புச் செய்தி அறிந்து சொந்த ஊரான கோவைக்கு செல்கிறார். ஆனால், அவர் செல்வதற்க்குள்ளாகவே எல்லாம் முடிந்துவிட, இறுதியாக அம்மாவை காணமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறார். அப்போது சொத்து பிரச்சினை எழ, சில காலம் அந்த ஊரில் தங்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் ஊரில் அடையாளம் தெரியாத சடலங்கள் மர்மமான முறையில் ரயில்வே ட்ராக்குகள் பக்கத்தில் கிடக்கும் தகவல் காட்டுத்தீயாக பரவுகிறது. இதை துப்பறிய களமிறங்கும் சந்தானம், இதற்கான காரணத்தையும், அதற்கு பின்னால் உள்ள குற்றங்களையும் எப்படி கண்டுபிடித்தார் என்பதுடன், அவரையும் இந்த விவகாரம் தனிப்பட்ட முறையில் எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பைப்பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. அந்தப் படத்தை அப்படியே காட்சி மாறாமல் மறுஆக்கம் செய்வதற்கு பதிலாக பல மாற்றங்களை செய்திருக்கிறார் இயக்குநர்.
தொப்பி, கண்ணாடி, அதற்கேற்ற கோட், யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் பக்குவம், அம்மாவை எண்ணி உருகும் சென்டிமென்ட் காட்சிகள் என புதுமை காட்டியிருக்கும் சந்தானம், அவர் இறங்கியடிக்கும் ‘காமெடி’ ட்ராக்கில் சறுக்குகிறார்.
ஒருசில இடங்களில் வரும் புன்முறுவலைத் தாண்டி பெரிதாக நகைச்சுவை கைகொடுக்கவில்லை. ப்ளாக் காமெடி பாணியும் நழுவுகிறது. ரெடின் கிங்க்ஸ்லி, ‘குக் வித் கோமாளி’ புகழ், குரு சோமசுந்தரம் கதாபாத்திரங்கள் காட்சிகளில் திணித்து வீணடிக்கப்பட்டுள்ளன. போலீசிடம் புகழ் அறைவாங்கும் காட்சி மட்டும் சிரிப்புக்கான ஆறுதல். ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன் தங்களுக்கான பணியை செய்ய, முனிஷ்காந்து ஓரிடத்தில் நடிப்பில் கவனம் பெறுகிறார்.
ப்ளாக் காமெடியாக கொண்டு செல்வதா அல்லது சீரியஸ் கலந்த காமெடியில் கொண்டு செல்வதா என படத்தை எந்த பாணியில் நகர்த்திச் செல்வது என்ற குழப்பம் திரைக்கதையில் பளிச்சிடுகிறது. இதனால், காட்சிகளின் அடர்த்தி பார்வையாளர்களுக்கு முறையாக கடத்தப்படாமல் விலகி நிற்கிறது. உதாரணமாக, தனது தாய் குறித்து சந்தானம் சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும்போது அந்த தன்மையை மாற்றும் வகையில் புகழ் காமெடி என்ற பெயரில் முயற்சிப்பது ஒட்டுமொத்த காட்சியையும் பலியாக்கிவிடுகிறது. இப்படியாக ஒவ்வொரு காட்சியும் அதன் நோக்கத்திலிருந்து விலகி திசைமாறியிருப்பதும், அதற்கே உண்டான உணர்ச்சிகள் முறையாக கடத்தப்படாமலிருப்பதும் சிக்கல். சோதனை முயற்சியாக எடுத்துக்கொண்டாலும் அது பெரிதாக பலனளிக்கவில்லை.
‘ஏஜென்ட் கண்ணாயிரம் வாடகை 2 ஆயிரம்’ என மிகச் சில எதுகை மோனை வசனங்கள் எடுபட்டாலும், பெரும்பாலானவை செல்ஃப் எடுக்காமல் ஆஃப் மூடிலேயே இருக்கின்றன. இரண்டாம் பாதியில் துப்பறியும் காட்சிகள் ஓரளவு வேகமெடுத்தாலும், அதுவும் கூட முழுமையற்று திட்டு திட்டாக எஞ்சி நிற்கின்றன. மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல எல்லாவற்றையும் சந்தானம் வசனங்களின் வழி கூற, ‘அவர் அங்க போகவே இல்லையே எப்டி இது தெரிஞ்சது’ என கேள்விகளும் முளைக்கின்றன. படம் முழுக்க சஸ்பென்ஸை ஏற்றி வந்து க்ளைமாக்ஸில் அதை மொத்தமாக இறக்கும் காட்சியை அழுத்தமேயில்லாமல் தேமேவென கடத்தியிருப்பது முழுமையிலிருந்து மொத்த விலகல்.
தொய்வான திரைக்கதையில் யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை உற்சாகத்தை கூட்டுகிறது. படம் முழுவதும் ரெட்ரோ ட்யூனை பயன்படுத்தி இசையமைத்திருந்த விதம் ஈர்க்கிறது. தேனி ஈஸ்வர் - சரவணன் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் தனித்து நிற்கின்றன. படத்தொகுப்பில் சில இடங்கள் நான்லீனியராக கையாளப்பட்டபோதும் இன்னும் கச்சிதமாக்கியிருக்கலாமோ என தோன்றுகிறது.
மொத்தத்தில் காட்சிகளின் அடர்த்தியை கடத்துவதில் ஏற்பட்ட தடுமாற்றம், தொய்வான திரைக்கதை, பெரிதாக சுவாரஸ்யம் கூட்டாத துப்பறியும் காட்சி, கைக்கொடுக்காத காமெடியால் கண்ணாயிரம் பார்வையிழந்து நிற்கிறது. இதன் அசல் படைப்பான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. அசலைப் பார்த்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றம் கொடுத்தாலும், அதைப் பார்க்காதவர்களுக்கு புதிய கதை அனுபவத்தை கொடுக்கலாம். ஆனால், திருப்திப்படுத்துமா என்பது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT