Published : 21 Nov 2022 08:33 PM
Last Updated : 21 Nov 2022 08:33 PM

“மீண்டும் படம் இயக்குகிறேன்” - நடிகர் சசிகுமார் தகவல்

“ஜல்லிக்கட்டு விளையாட்டை யாராலும் அழிக்க முடியாது; மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகிறேன்” என சசிகுமார் தெரிவித்துள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்‌ஷமன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி, “எனக்கு டூவீலரே சரியாக ஓட்டத்தெரியாது. ஆனால் இந்தப் படத்தில் என்னை ஆட்டோ ஓட்ட வைத்து விட்டார்கள். அதிலும் சசிகுமார், நாயகி பார்வதி அருண் இருவரையும் வைத்து நான் ஆட்டோ ஓட்ட வேண்டும்.. பயந்துகொண்டே தான் ஆட்டோ ஓட்டினேன்” என்றார்.

சசிகுமார் பேசும்போது, “இது எனக்கான கதை. என் மண்ணின் கதை. ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம் தான் பண்ணுவேன். அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்..? என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படம் பண்ண முயற்சித்தேன் அது முடியவில்லை. என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு, தயாரிப்பாளர் லக்‌ஷமண் குமார் இயக்குனர் ஹேமந்துக்கு பரிசாக கார் கொடுக்காமல், கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

படத்தில் என்னுடன் நடித்த நிஜமான ஜல்லிக்கட்டு வீரர்கள் எனக்கு பாதுகாப்பாக, பக்கபலமாக இருந்தனர். அவற்றையும் மீறி ஒரு சில சமயங்களில் ஜல்லிக்கட்டு காளை மோதலில் இருந்து மயிரிழையில் தப்பித்தேன். இதில் நடித்ததற்காக அவர்கள் கேட்ட ஒரே பரிசு இந்தப் படம் வெளியாகும்போது முதல்நாள் மதுரையில் அவர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பது தான். ரிலீஸ் நாளன்று அவர்களது ஆசையை நிறைவேற்ற போகிறேன்.

ஜல்லிக்கட்டு மீது தடை கேட்டு யார் எத்தனை வழக்கு போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாடுகளை நாங்கள் துன்புறுத்தவில்லை. எதிர்ப்பவர்கள்தான் அதன்மூலம் மாடுகளை அழிக்க நினைக்கிறார்கள். இந்தப் படத்தில் பதினெட்டு வகையான மாடுகள் பற்றி சொல்லி இருக்கிறோம். என்னுடைய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

முன்பெல்லாம் விஜயகாந்த் சார் படப்பிடிப்பிலும் அவரது அலுவலகத்திலும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சுவையான சாப்பாடு வழங்கப்படும். அதை கேள்விப்பட்டு நான் என்னுடைய தயாரிப்பில் படங்கள் தயாரித்தபோது அதேபோல பின்பற்றினேன். நீண்டநாளைக்கு பிறகு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் படப்பிடிப்பில் அதேபோன்று எல்லோருக்கும் சரிசமமான சிறப்பான சாப்பாடு வழங்கப்பட்டதை பார்த்தேன்.. காலம் கடந்தும் இது பேசப்படும்.. ஒரு படத்தில் நடித்தபோது சாப்பாடு சரியில்லை என்று அதன் தயாரிப்பாளரிடம் என் சம்பளத்தில் கூட கொஞ்சம் பிடித்துக்கொண்டு அதற்கு பதிலாக நல்ல சாப்பாடு போடுங்கள் என்று கூறினேன். அவர் நல்ல சாப்பாடும் போடவில்லை.. என்னுடைய சம்பளத்தையும் கொடுக்கவில்லை. அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டைரக்‌ஷனில் படம் இயக்குகிறேன். அதற்கான அறிவிப்பை இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x