Last Updated : 23 Dec, 2016 06:34 PM

 

Published : 23 Dec 2016 06:34 PM
Last Updated : 23 Dec 2016 06:34 PM

முதல் பார்வை: கத்தி சண்டை- காற்றில் சுழற்றிய வாள்!

ஓர் உன்னத நோக்கத்துக்காக 'தில்லாலங்கடி' செய்யும் 'ஜென்டில்மேன்' கதை 'கத்தி சண்டை'.

கன்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்து கோடிக்கணக்கில் பணம் கடத்தும் குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அவரின் தங்கை தமன்னாவைக் காதலிக்கிறார் விஷால். இதைத் தெரிந்துகொண்ட ஜெகபதி பாபு விஷாலுக்கு கொஞ்சம் சோதனை கொடுக்கிறார். அதற்குப் பிறகு ஜெகபதி பாபு தமன்னா- விஷால் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். அதற்குப் பிறகு ஜெகபதி பாபு கடத்தப்படுகிறார். கடத்தலின் பின்னணி என்ன, விஷால் எப்படி ஜெகபதி பாபுவைக் காப்பாற்றுகிறார், விஷாலின் வரலாறு என்ன என்பதே 'கத்தி சண்டை'.

இயக்குநர் சுராஜின் 10-வது படம். 18 ஆண்டுகளில் 10 படங்கள் கொடுத்திருக்கும் சுராஜுக்கு வாழ்த்துகள். ஆனால், அந்த வாழ்த்தை அதற்கு மட்டுமே சொல்ல வேண்டியதாக உள்ளது.

ஒரு நோக்கத்துக்காக அடையாளம் அற்று இருப்பது, அதற்குப் பிறகு தன் வரலாறு கூறி நியாயம் கற்பிப்பது என முந்தைய படங்களில் இருந்த அதே சவால்தான் விஷாலுக்கு. அதை வழக்கம் போலவே சரியாக செய்கிறார். காதல், ஆக்ரோஷம், சோகம் என உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் எந்தக் குறையுமில்லை. சண்டையிடும் போது கூட பறந்து பறந்து அடிக்கிறார். அல்லது பறக்கவைத்து காலால் எட்டி உதைக்கிறார்.

சாகச ஹீரோவுக்கான பிரயத்தனங்களை செய்யும் விஷால் ஏன் கற்பனைக் கதையில் கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்? அது நெருடலாகவும், உறுத்தலாகவும் உள்ளது.

தமன்னா அழகுப் பதுமையாக வருகிறார். பாடல் காட்சிகளில் 'வெளி'ப்படைத் தன்மையை நிறுவுகிறார். மற்றபடி கதாநாயகிக்கான பங்களிப்பை நிறைவு செய்கிறார்.

சூரியின் பெண் வேடக் காட்சிகள் எந்த விதத்திலும் சவாலாக இல்லை. மாறாக. அருவருப்பை வரவழைக்கும் விதமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிரியாணி, லெக் பீஸ், அடிக்கத் தெரியாத ரவுடி என்று ஊசிப் போன உணவையே மறுபடியும் செய்ய வைத்திருக்கிறார்கள்.

வடிவேலுவின் மறுவருகை மகிழ்ச்சிக்குரியது. ஆனால், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் களத்தை அமைத்துத் தரவில்லை. அந்த சட்டகத்துக்குள் எந்த மாதிரியான நடிப்பை வழங்க வேண்டுமோ, அதை வடிவேலு குறையில்லாமல் கொடுத்திருக்கிறார்.

ஜெகபதி பாபு, தருண் அரோரா, சௌந்தர் ராஜா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு பொருத்தம். ஹிப் ஹாப் தமிழா இசையில் நான் கொஞ்சம் கறுப்புதான் பாடல் மட்டும் கவனம் ஈர்க்கிறது. ஆங்காங்கே திடீரென குதிக்கும் பாடல்களுக்கு கத்தரி போட்டிருக்கலாம்.

அடுத்தடுத்து திருப்பங்கள் தந்தால் அதுவே படத்தை விறுவிறுப்பாக்கிவிடும் என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். ஆனால், அது அதற்கான நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

விஷால் எப்படி சூரியைத் தேடி வருகிறார்? சூரியை எப்படித் தெரியும்? முதல் பாதியில் நெளிய வைக்கும் அந்த 40 நிமிடக் காட்சிகளுக்கான நோக்கம் என்ன? இரண்டாம் பாதியிலும் எப்படி சொல்லி வைத்தாற்போல யாருமே விஷாலை சந்தேகப்படாமல், கண்காணிக்காமல் இருக்கிறார்கள் என கேள்விகளின் பட்டியல் பெரிது.

வசனங்கள் கூட வலுவாக இல்லை. பலவீனமான திரைக்கதை, நம்பகத்தன்மை இல்லாத காட்சி அமைப்புகளால் 'கத்தி சண்டை' காற்றில் வாள் சுழற்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x