Last Updated : 18 Nov, 2022 03:42 PM

3  

Published : 18 Nov 2022 03:42 PM
Last Updated : 18 Nov 2022 03:42 PM

கலகத் தலைவன் Review: கவனத்துக்கு உரியவன்தான்... எப்போது?

பெருநிறுவனத்தை எதிர்த்து களமாடும் ‘காமன் மேன்’ ஒருவனின் போராட்டம்தான் ‘கலகத் தலைவன்’. வஜ்ரா என்ற கார்பரேட் நிறுவனம் தன்னுடைய புதிய கனரக வாகனம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த வாகனம் உமிழும் மாசுபாட்டின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் இருக்கும் ரகசியம் வெளியில் கசிய, நிறுவனம் அதிர்ச்சியடைகிறது. இதுபோன்ற ரகசியங்களை கசியவிடும் ‘விசில் ப்ளோயர்கள்’ எனப்படும் உளவாளிகளை கண்டறிந்து அவர்களை தடயமின்றி அழிக்கும் பொறுப்பு அர்ஜூனுக்கு (ஆரவ்) கொடுக்கப்படுகிறது. அவர் தன் வேட்டையைத் தொடர, அது திருமாறன் (உதயநிதி ஸ்டாலின்) வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தை நிகழ்த்துகிறது? இந்த ‘விசில் ப்ளோயர்கள்’ யார்? அவர்களின் நோக்கம் என்ன? இதுதான் ‘கலகத் தலைவன்’ படத்தின் திரைக்கதை.

இம்முறை கார்ப்பரேட் அரசியலை கையிலெடுத்து திரையில் களமாடியிருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி. பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு, இந்தியாவின் ஏதோ ஒருபகுதியில் நடக்கும் தனியார் மயமாக்கல் கடைக்கோடி மனிதனை பாதிப்பது, சந்தைப் பொருளாதாரம், கார்ப்பரேட் உளவாளிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு விஷயங்களை பேச முயன்றிருக்கிறார் இயக்குநர். அதை வெறும் பிரச்சார பாணியில் இல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் திருப்பங்களுடன் கொண்டு சென்ற விதத்தில் படம் கவனம் பெறுகிறது.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் பயணிக்க, அதன் வேகத்தை காதல் காட்சிகளும், பாடல்களும் வேண்டுமென்றே தணிக்கிறது. மொத்த காதல் சீக்வன்சுகளை நீக்கியிருந்தால் இன்னும் அடர்த்தி கூடியிருக்கும். நாயகியிடம் உதயநிதி சொல்லும் ஹெண்ட்பேக் சைக்காலஜி மட்டும் பார்வையாளர்களிடையே எடுபடுகிறது. மற்றபடி காதல் காட்சிகளும், பாடல்களும் திணிப்பேயன்றி கதையோட்டத்திற்கு பலனிக்கவில்லை.

குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு நடக்கும் சம்பவங்களும், திருப்பமும், காட்சியின் சூடும் வெகுவாக ரசிக்க வைக்கிறது. மூன்று முக்கிய பாத்திரங்களின் வழி மொத்தப் படமும் நகர, அதை எழுதியிருக்கும் விதத்தால் திரைக்கதை கனக்கிறது.

மிகைத்தும்போகாமல், வறட்சியுமில்லாமல் கதாபாத்திரத்துக்கு தேவையான மீட்டரில் கச்சிதமாக அமர்கிறது உதயநிதியின் நடிப்பு. பெரிதாக அலட்டிக்கொள்ளாத உடல்மொழி, அளந்து பேசும் வார்த்தைகள் என திருமாறனாக தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார் உதயநிதி. அவரைவிட கூடுதல் வெயிட்டை ஏற்றி எதிர்மறை கதாபாத்திரத்தை எழுதியிருக்கும் விதம்தான் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. அந்த வகையில் கட்டுடல், கூரிய பார்வை, கருணையில்லா கண்கள் என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்துகிறார் ஆரவ்.

ஆடு - புலி ஆட்டத்துக்கான திரைக்கதைக்கான கதாபாத்திர வார்ப்பு கச்சிதமாக கைகொடுத்திருக்கிறது. திடீரென திரையில் தோன்றும் கலையரசன் அழுத்தமான நடிப்பை பதியவைக்கிறார். வழக்கமான திரைக்கதை டெம்ப்ளேட்டிலிருந்து தப்பிக்காத ‘கலகத் தலைவன்’ நிதி அகர்வாலையும் காதல், பாடல்களுக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறது. தவிர, ‘கிராமத்துல இருக்குறவங்களுக்கு இலவச மருத்துவ சேவை’ என்பதை க்ளிஷேவையும் சேர்த்து, மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கிறது நிதி அகர்வால் கதாபாத்திரம்.

ஸ்ரீகாந்த் தேவா, ஆரோல் கோரலி பின்னணி இசை சில இடங்களுக்கு ஓகே என்றாலும், ஒட்டுமொத்தமான படத்தின் பசிக்கு சோளப்பொறியாக எஞ்சி நிற்கிறது. பாடல்கள் எதுவும் மனதில் தேங்கவில்லை. தில்ராஜ் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் தொழில்நுட்ப ரீதியாக குறையை வைக்காமல் கதையை கடக்க உதவியிருக்கிறது.

‘ஒருத்தன் நாலு பேர அடிக்க முடியாது’ என சண்டையில் நியாயத்தை சேர்த்திருக்கும் இயக்குநர், அதற்காக புரூஸ் லீயின் வார்த்தைகளை பயன்படுத்தியது ஈர்ப்பு. இரண்டாம் பாதியிலும் விறுவிறுப்பை தக்கவைக்க முயன்றிருக்கும் திரைக்கையில், இறுதிக்காட்சிகள் இழுத்துக்கொண்டு போய் சேர்த்தது அயற்சி. அனைத்து சிசிடிவி காட்சிகளையும் அசால்ட்டாக கைப்பற்றுவது, போன் நம்பர்களை ஹேக் செய்வது, தகவல்களை பிங்கர் டிப்பில் வைத்திருப்பது போன்ற காட்சிகள் செயற்கைத்தனத்துடன் துருத்தி நிற்கின்றன.

மொத்தத்தில் காதல் காட்சிகளையும், பாடல்களையும், இறுதிக்காட்சியின் நீளத்தையும் கடக்க முடிந்தால் ‘கலகத் தலைவன்’ கவனம் பெறுவான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x