Published : 17 Nov 2022 02:52 PM
Last Updated : 17 Nov 2022 02:52 PM
தனது கடந்த கால சமூக வலைதளப் பதிவுகள் குறித்து எழுந்த சர்ச்சைக்கு ‘லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி’. 90ஸ் கிட்ஸின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் 'லவ் டுடே'.
2கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக இவானா நடித்துள்ளார். தவிர, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்து முன்னேறி வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து பழைய பதிவுகள் திடீரென வைரலாகின. யாரோ ஒருவர், பிரதீப் 2010-ம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா குறித்து மலிவாக திட்டி எழுதியிருந்த பதிவுகளை கிளறிவிட்டிருந்தார். அதனடிப்படையில் அந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. இது நேற்று வைரலானதை அடுத்து இணையவாசிகளில் ஒரு தரப்பினர் பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தை டிஆக்டிவேட் செய்துவிட்டார்.
தற்போது தன் மீதான விமர்சனங்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள பிரதீப், “என் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து பகிரப்பட்ட சில பதிவுகள் உண்மைதான். ஆனால், தகாத வார்த்தையில் நான் யாரையும் பேசவில்லை. அதெல்லாம் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஃபேஸ்புக் பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துவிட்டேன். இதை சிலர் செய்ததற்காக அவர்கள் மீது கோபப்படவில்லை. எத்தனை பேர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் எனக் காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். வளரும் காலகட்டத்தில் தவறு செய்திருக்கிறேன். இப்போது ஒவ்வொரு நாளும் என்னை சிறந்த மனிதனாக மாற்றிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT