Last Updated : 05 Nov, 2016 11:32 AM

 

Published : 05 Nov 2016 11:32 AM
Last Updated : 05 Nov 2016 11:32 AM

‘சிலிக்கான் சிலையோ.. சிறுவாய் மலரோ’- கவிஞர் வைரமுத்து எழுதிய ‘பைரவா’ பாடல்

பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘பைரவா’. இப்படத்தில் 5 பாடல்களை எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில், கவிதைபோல ஒரு காதல் பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து. பாடல் உருவான விதம் குறித்து அவர் கூறியதாவது:

ஒரு திருமண மண்டபத்தில் முதன்முதலாக கதா நாயகி கீர்த்தி சுரேஷை பார்க்கிறார் நாயகன் விஜய். அவரது ஊர் தெரியாது; பேர் தெரியாது. ஆனால் அந்த அழகில் அவரது மனம் சொக்கிப்போகிறது. பசுவின் பின்னால் போகும் கன்றுபோல கீர்த்தி சுரேஷை பின்தொடர்ந்து சென்று விஜய் பாடும் பாடல் இது.

இப்பாடலைக் கவிதைபோல படமாக்க வேண்டும் என்று இயக்குநர் பரதனைக் கேட்டுக்கொண்டேன். பாடல் படமாக்கப்பட்டதும் என் வீட்டுக்கே வந்து போட்டுக் காட்டினார். ‘இது கேமராவில் எழுதிய கவிதை’ என்று அவரைப் பாராட்டினேன். அவ்வளவு சிறப்பாக படமாக்கியுள்ளார்.

இவ்வாறு வைரமுத்து கூறினார்.

விரைவில் இசை வெளியீட்டு விழாவுக்குத் தயாராகிவரும் ‘பைரவா’ படத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடல் வரிகள்…

மஞ்சள் மேகம் ஒரு

மஞ்சள் மேகம் சிறு

பெண்ணாகி முன்னே போகும்

பதறும் உடலும் என்

கதறும் உயிரும் அவள்

பேர்கேட்டுப் பின்னே போகும்

செல்லப் பூவே நான்

உன்னைக் கண்டேன்

சில்லுச் சில்லாய் உயிர்

சிதறக் கண்டேன்

நில்லாயோ நில்லாயோ

உன்பேர் என்ன

உன்னாலே மறந்தேனே

என்பேர் என்ன

கனவா கனவா நான்

காண்பது கனவா என்

கண்முன்னே கடவுள் துகளா

காற்றின் உடலா கம்பன்

கவிதை மடலா இவள்

தென்னாட்டின் நான்காம் கடலா

சிலிக்கான் சிலையோ

சிறுவாய் மலரோ

வெள்ளை நதியோ

வெளியூர் நிலவோ

நில்லாயோ நில்லாயோ

உன்பேர் என்ன

உன்னாலே மறந்தேனே

என்பேர் என்ன

செம்பொன் சிலையோ இவள்

ஐம்பொன் அழகோ

பிரம்மன் மகளோ இவள்

பெண்பால் வெயிலோ

நான் உன்னைப் போன்ற

பெண்ணைக் கண்டதில்லை

என் உயிரில் பாதி

யாரும் கொன்றதில்லை

முன்னழகால் முட்டி

மோட்சம் கொடு இல்லை

பின் முடியால்

என்னைத் தூக்கிலிடு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x