Published : 15 Nov 2016 05:51 PM
Last Updated : 15 Nov 2016 05:51 PM
'பைரவா' படம் குறித்து தனியார் தொலைக்காட்சியின் அதிரடி நடவடிக்கையால், இசை வெளியீட்டு நிறுவனங்கள் அச்சம் கொண்டுள்ளன.
எப்போதுமே ஒரு படத்தின் உரிமைகளில், இசை உரிமையை அதற்கான நிறுவனங்கள் கைப்பற்றும். தொலைக்காட்சி உரிமையை பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியிட்டு அதைக் கைப்பற்றும். ஆனால், 'பைரவா' பட விஷயத்தில் முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால், இசை உரிமையைப் பெறும் நிறுவனங்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பைரவா'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஸ்ரீக்ரீன் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது.
பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் இப்படத்தின் உரிமைகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. இதில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் இசை இரண்டின் உரிமையையும் ஒரே சேரக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. தொலைக்காட்சி உரிமையே விற்காத இச்சூழலில் இரண்டு உரிமையும் ஒரே சேரக் கொடுக்கலாமே என்று தயாரிப்பு நிறுவனமும் ஆலோசனையில் இறங்கியிருக்கிறது.
அப்படி என்ன நடந்தது என்று சில இசை உரிமையைக் கைப்பற்றும் நிறுவனங்களில் பேசிய போது, "இசை உரிமையைக் கைப்பற்றி அதன் மூலம் பல்வேறு வகையில் பணம் ஈட்டி வந்தோம். ஆனால், 'பைரவா' விஷயத்தில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் இசை இரண்டையுமே கைப்பற்றப் பேசியிருக்கிறது. இது எங்களுக்கு மிகவும் ஆச்சரியம் தான்.
இதே போலத்தான் 'கொடி'யிலும் நடந்தது. ஆனால், அந்நிறுவனம் பேசும் முன்பே தயாரிப்பு நிறுவனம் இசை உரிமையைக் கொடுத்துவிட்டது. இதனால் தொலைக்காட்சி உரிமையை மட்டும் கைப்பற்றியது.
தான் தொலைக்காட்சி உரிமை பெறும் படங்கள் அனைத்துக்குமே இசை உரிமையையும் வாங்க அந்த முன்னணி தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனம்தான் முன்னணி தொலைக்காட்சி என்பதால் பல படங்களின் இசை உரிமைகளை கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது. இனிமேல் எங்களுடைய நிலைமை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது" என்று கவலையுடன் குறிப்பிட்டார்கள்.
முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் 'பைரவா' படத்தின் இசை உரிமையிலும் கால் பதிக்க இருப்பது தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷத்தை அளித்தாலும், இசை உரிமையைப் பெறும் நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT