Published : 13 Nov 2022 07:53 AM
Last Updated : 13 Nov 2022 07:53 AM

யசோதா: திரை விமர்சனம்

பணத்துக்காக வாடகைத் தாயாகிறார் யசோதா (சமந்தா). வயிற்றில் வளரும் குழந்தை பணக்கார வீட்டுக்குச் சொந்தமானது என்பதால், மருத்துவ வசதிகளுடன் கூடிய ‘ஹைடெக்’ இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள் அவரை. குழந்தை பிறக்கும்வரை அங்கேயே இருக்க வேண்டும் என்கிறார்கள். அங்கு அவரைப் போலவே ஏராளமான வாடகைத் தாய்கள். அந்த இடத்தில் சில விஷயங்கள் சந்தேகப்படும்படியாக நடப்பதைக் கவனிக்கிறார், யசோதா. பிறகு அவர் என்ன செய்கிறார்? அவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் படம்.

வாடகைத் தாயாகும் ஏழை பெண்கள் ஏமாற்றப்படுவதையும் அழகு சாதனப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குப் பின் இருக்கும் இரக்கமற்ற வியாபாரத்தையும் அதிர்ச்சியோடு சொல்கிறது, ‘யசோதா’. இந்த சமூக அக்கறை கொண்ட விஷயங்களை கையில் எடுத்ததற்காகவே ஹரி - ஹரிஷ் என்ற இரட்டை இயக்குநர்களைப் பாராட்டலாம்.
ஹாலிவுட் நடிகை மற்றும் மிஸ் இந்தியா போட்டியாளரின் மர்ம மரணங்களை ஒருபுறம் விசாரிக்கும் போலீஸ், மறுபுறம் வாடகைத் தாய் விஷயங்களில் நடக்கும் மோசடிகள் என இரண்டு ‘டிராக்’கை இணைத்துச் செல்கிறது திரைக்கதை. மாறி மாறி வரும் இந்தக் காட்சிகள்,முதல் பாதி வரை பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கின்றன. ஆனால், லாஜிக் இல்லாத இரண்டாம் பாதி, அதைக் குபுக்கென்று குப்புறத்தள்ளி விடுவதுதான் படத்தின் ஆகப் பெரும் பலவீனம்.

மொத்தப் படத்தையும் தன் நடிப்பால், ஒற்றை ஆளாய் தாங்கிப் பிடிக்கிறார் சமந்தா. வாடகைத் தாயாக அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே, வறுமைப் பெண்ணின் குழப்பமான முகம் காட்டி ‘யசோதா’வாகி விடுவதுதான் அவர் பலம். ‘ஹைடெக்’இடத்தில் நடக்கும் மர்மங்கள் பற்றி சந்தேகப்படும்போதும் சகத் தோழி காணாமல் போனது கண்டு தவிக்கும்போதும் சின்ன சின்ன குறும்புகளிலும் சமந்தா ரசிக்க வைக்கிறார். கர்ப்பிணியால் எப்படி ஆக்‌ஷனில் இப்படி அதிரடி காட்ட முடியும் என்ற கேள்வி எழுந்தாலும் அவருடைய உழைப்பு வியக்க வைக்கிறது.

பண ஆசை பிடித்தவராக வரலட்சுமி சரத்குமார், சாதாரணமாக நடித்துவிட்டுப் போகிறார். ஆனால், அவருடைய பிளாஷ்பேக் காட்சியில் வரும், அவர் கதாபாத்திர வடிவமைப்பில், திணிக்கப்பட்ட செயற்கைத்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது. கண்மூடித்தனமான ‘மூளைக்கார’ காதலனாகவும் அந்தக் காதலே, பிசினஸ் பார்ட்னராகவும் மாற்றி விடுகிற கேரக்டரில் உன்னி முகுந்தன் நம்ப வைக்கிறார்.

சம்பத் ராஜ், போலீஸ் அதிகாரி முரளி சர்மா, அமைச்சர் ராவ் ரமேஷ் ஆகியோரும் தங்கள் கேரக்டர் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மணிசர்மாவின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு உயிர்கொடுக்கின்றன. சுகுமாரின் ஒளிப்பதிவில் சமந்தாவின் ஆக்‌ஷன் காட்சிகள் ஆவேசம் கொள்கின்றன. முதல் பாதி திரைக்கதைக்கு கொடுத்த மெனக்கெடலை இரண்டாம் பாதிக்கும் கொடுத்திருந்தால், ‘யசோதா’ இன்னும் ஈர்த்திருப்பாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x