Last Updated : 11 Nov, 2016 06:03 PM

 

Published : 11 Nov 2016 06:03 PM
Last Updated : 11 Nov 2016 06:03 PM

முதல் பார்வை: அச்சம் என்பது மடமையடா - காதல் பாதி ஆக்‌ஷன் மீதி!

ஒரு பைக் பயணத்தில் ஏற்படும் திடீர் திடுக் திருப்பங்களும், இழப்புகளுமே 'அச்சம் என்பது மடமையடா'.

எம்பிஏ முடித்துவிட்டு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட நினைக்கிறார் சிம்பு. அதற்கு முன் பைக்கில் நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தங்கையின் தோழி மஞ்சிமாவும் சிம்புவுடன் சேர்ந்து பைக்கில் பயணம் செய்கிறார். அந்த பயணத்தில் திடீர் விபத்து நிகழ்கிறது. அது விபத்தா, திட்டமிட்ட சதியா, ஏன் எப்படி யாரால் நிகழ்ந்தது? என இடம் சுட்டி பொருள் விளக்கம் தந்திருக்கிற படம் 'அச்சம் என்பது மடமையடா'.

காதல், ஆக்‌ஷன் இரண்டும் கைவரப்பெற்ற இயக்குநர் கௌதம் மேனன் இதில் அதை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்குப் பிறகு இணைந்திருக்கும் சிம்பு- கௌதம் மேனன் கூட்டணி என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியதாகவே ரசிகர்கள் தங்கள் கரவொலிகள் மூலமும், விசில் சத்தங்கள் மூலம் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால், சிம்பு நடிப்பில், ரசிகர்களை எங்கேஜ் செய்வதில் முழு எனர்ஜியோடு இருக்கிறார். உடல்மொழி, உச்சரிப்பு, முதிர்ச்சியான நடிப்பு, காதலில் தெளிவு என கதாபாத்திரத்துடன் முழுமையாகப் பொருந்துகிறார். என் காதல்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே என தன்னைத் தானே கலாய்த்துக் கொள்வதில் ஆரம்பித்து, தப்பான டைமிங்கில் சொன்னாலும் விஷயம் அதுதான் என காதலை சொல்வது,எமோஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்வது என படம் முழுக்க சிம்பு நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

கௌதம் மேனன் பட நாயகிக்கே உரிய அசல் முகம் மஞ்சிமா. கதை நகர்த்தலுக்கு உதவியாய் இருக்கும் மஞ்சிமா இலக்கணம் மீறாமல் இயல்பாக நடித்திருக்கிறார். கையறு நிலையிலும் நீ ஏன் இங்கே வந்த? போய்டு என காதலன் மீதான அக்கறையைக் காட்டும் போதும், உன் பேரு என்ன? என கேட்கும்போதும் கவனம் ஈர்க்கிறார்.

சதீஷ் ஆங்காங்கே சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். பாபா சேகல், டேனியல் பாலாஜி, நாகி நீடு ஆகியோர் பொருத்தமான தேர்வு.

டேன் மெக்தர் சென்னை, கன்னியாகுமரி, கர்நாடகா, மகாராஷ்டிரா என எல்லா இடங்களின் அழகையும் கேமராவில் அள்ளி வந்து கொடுத்திருக்கிறார். தேனி ஈஸ்வரின் கூடுதல் ஒளிப்பதிவும் ரசனை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஷோக்காளி, தள்ளிப் போகாதே, அவளும் நானும், இதுநாள் வரையில், ராசாளி என ஐந்து பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் காதல், ஆக்‌ஷன் என மாறி மாறி தெறிக்க விடுகிறார்.

முதல் பாதி முழுக்க காதல் வசனங்களில் மூலம் புத்துணர்வையும், உற்சாகத்தையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கௌதம் மேனன். வழக்கமான மேக்கிங், க்ளாஸிக் என தன் முத்திரையை அழுத்தமாகப் பதிக்கிறார். காதலைச் சொன்ன இடமும், தள்ளிப் போகாதே பாடலும் வைத்த விதம் இயக்குநரின் தைரியத்தையும், புத்திசாலித்தனத்தையும் காட்டுகிறது. முதல் பாதியில் சிம்பு சில காட்சிகளில் ஒல்லியாகவும், சில காட்சிகளில் குண்டாகவும் இருக்கிறார். அது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் ஆக்‌ஷனுக்கு மாறும்போது தொங்கலில் விட்டுவிடுகிறார். ஆக்‌ஷன் பாதையில் எந்த லாஜிக்கும் இல்லாததுதான் குறை. சிம்புவுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது? சர்வ சாதாரணமாக ஆம்புலன்ஸ் ஓட்டத் தெரியாது என்று கூறி கார், ஆம்புலன்ஸ் என சகலத்தையும் ஓட்டி சிம்பு மேனேஜ் செய்வது எப்படி? மாறி மாறி பயணம் செய்யும் அளவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? போன்ற கேள்விகள் நீள்கின்றன. அந்த ஃபிளாஷ்பேக் காட்சிகள், சிம்புவின் வேலை என எதுவும் நம்பும்படியாகவோ, ஏற்றுக்கொள்ளும்படியாகவோ இல்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கௌதம் மேனன் காதல் படம், ஆக்‌ஷன் படம் என இரண்டு ஜானரிலும் தனித்தனியாக எடுத்திருக்கிறார். இதில் அதை இரு பாதியாக பிரித்துக்கொண்டார்.

லாஜிக் தேவையில்லை கௌதம்- சிம்பு மேஜிக் போதும் என்று நினைத்தால் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை அஞ்சாமல் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x