Published : 29 Oct 2022 08:23 AM
Last Updated : 29 Oct 2022 08:23 AM

பெரிய, சிறிய படம் என்பதை நாம் முடிவு பண்ணக் கூடாது - ‘செம்பி’ விழாவில் கமல்ஹாசன் பேச்சு

பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஸ்வின், தம்பிராமையா, குழந்தை நட்சத்திரம் நிலா, பழ கருப்பையா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘செம்பி’. டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசைஅமைத்துள்ளார். இதன் பாடல்கள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டன. விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:

இங்கே, என்னைப் பாராட்டி பேசினார்கள். இவர், பெரிய படங்களின் விழாவுக்கும் போகிறார், சிறிய படங்களின் விழாக்களுக்கும் செல்கிறார் என்று சொன்னார்கள். பெரிய படம், சிறிய படம் என்பதை நாம் முடிவு பண்ணக் கூடாது. பார்வையாளர்கள்தான் முடிவு பண்ண முடியும். ‘16 வயதினிலே’ படம் 40 வருடத்துக்கு முன் எடுக்கப்பட்டாலும் இன்றும் ஞாபகம் வைத்துப் பேசுகிறோம், அதுதான் பெரிய படம். ‘இத்தனை கோடியில எடுத்தோம், அது என்னபடம்?’ என்று கேட்டால் அதுதான் சின்னப்படம். ‘செம்பி’ படத்தின் கரு முக்கியமான ஒன்று. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். இங்கு, நாம் அமைதியாக இருப்பதுதான் பெரிய ஆபத்து. ‘இதை ஏன்இப்படி பண்றே?’ என்று கேட்பதற்கு ஆளே இல்லை என்றால், தொடர்ந்து தவறுகள் நடந்துகொண்டே இருக்கும். அதைச் சொல்லும் படம் இது.

என்னை விட திறமையானவர்கள் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருக்கிறார்கள். அதற்கு ரசனை வளர வேண்டும்.அதனால்தான் ரசனையை வளர்ப்பதைகடமையாக வைத்திருக்கிறேன். இவர் என்ன அதை வளர்ப்பது என்றால், யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். ஒரு விதை, ஒரு செடி வளர்ந்துவிடும். பறந்து போகிற பறவைக்குத் தெரியாது,ஒரு காட்டை விதைத்துக் கொண்டிருக்கிறோம் என்று. அது கடமையை செய்துகொண்டு போய்க் கொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு பறவை நான்.அதற்காகத்தான் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். நல்ல படங்களை எடுங்கள். ‘இவரைப் பார்த்து நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். அதை செய்யாதீர்கள். பெரும் திறமையானவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

விழாவில் பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாக்யராஜ், வசந்தபாலன், ஆர்.வி.உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x