Published : 05 Oct 2022 10:36 PM
Last Updated : 05 Oct 2022 10:36 PM
பலரது விருப்பப் பட்டியல்களில் மழைக்கு எப்போதும் தனியிடம் இருப்பதுண்டு. எத்தனை தீவிரமாக இருந்தாலும், வெயிலை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் எவராலும், கொட்டித் தீர்க்கும் மழையின்போது அவ்வாறு செய்ய முடிவதில்லை. உடலை நடுங்கச் செய்திடும் மழை, மனதை எப்போதும் குளிர்விப்பவை. இளையராஜாவின் இசையும் பாடல்களும் இந்த மழைப் போலத்தான், நம் மனங்களில் ஈரத்தை சொட்டிக் கொண்டேயிருக்கச் செய்பவை.
இந்தப் பாடலும் அப்படித்தான், மழை ஓய்ந்த கணமொன்றில் எங்கோ தூரத்தில் கேட்பது போல் தொடங்கி நம் நெஞ்சோடு நெஞ்சாக ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்தப் பாடல் இல்லாத இளமைக்கால இரவுகள் சாத்தியமற்றது என்றாலும் அது மிகையாாகது. அந்தளவுக்கு இப்பாடல் எப்போதும் கேட்டாலும், அந்தப் படத்தின் கதைக்கும் நாயகனுக்கும் மத்தியில் நம்மைக் கூட்டிச் சென்றுவிடும்.
1986-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘மௌன ராகம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடல்தான் அது. ஒருபக்கம் இளையராஜா, இன்னொரு பக்கம் எஸ்.பி.பி, அந்தப் பக்கம் பி.சி.ஸ்ரீராம், அப்புறம் மணிரத்னம் இப்படி, எல்லோருமாய் சேர்ந்து, பாடல் கேட்பவரின் கண்களையும், மனங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வர். மிகைப்படுத்தப்படாத காட்சியமைப்புகள் இந்தப் பாடலின் மற்றொரு பலம். அதனால்தான் இப்பாடல் நம் மனங்களில் பசுமரத்தாணிப் போல பதிந்து கொள்கிறது.
எஸ்பிபி இந்தப் பாடலை ஒரு ஹம்மிங்குடன் தொடங்குவார். ஆழ்மனதை மயில் தோகைகளைக் கொண்டு வருடும் சுகத்துக்கு இணையானது அது. ஆளரவமற்ற டெல்லியின் ராஜபாதையில் நாயகனும், நாயகியும் காரில் கடக்கும்போது, "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ" என்று பாடல் தொடங்குமிடம் அற்புதங்களின் அதிசயம்.
விருப்பம் இல்லாத திருமண பந்தத்தின் சாதக, பாதகங்களை பேசும் இந்தப் படத்தின் கதையம்சத்துக்கு மணிமுடியாய் அமைந்திருக்கும் இந்தப் பாடல். இந்தப் பாடலை காவியக் கவிஞர் ஐயா வாலி எழுதியிருப்பார். ஒரு கவிதையை பாடலாக்குவதிலும் காட்சிப்படுத்துவதிலும் கைத்தேர்ந்த இந்தக் கூட்டணி, " பூபாளமே கூடாது எனும் வானம் உண்டோ சொல்" - இந்த வரிகள் வரும்போது, பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் நாயகியின் முகத்தை காரின் ஃப்ரன்ட் மிரரில் நாயகன் பார்த்து ரசிக்கும் காட்சி விவரிக்க இயலாதது.
இந்தப் பாடலின் சரணங்களை,
"தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன... சொல்...
மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன.. வா…" என்று எழுதியிருப்பார் வாலி.
ஆனால் இரண்டு சரணங்களுக்கு இடையில் வரும் சுபார்னோ சாக்ஸின் பின்னிசையும், ட்ரம்ஸின் தாளநடையும் கேட்பவர்களை கிறங்கடிக்கும். பாடலை ஆரம்பத்தில் மிருதுவாக தொடங்கும் எஸ்பிபியின் குரல், நாயகனின் வலி மிகுந்த கேள்விகளை பாடும் இடங்களில் எல்லாம் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்தோடும். மழை பொழிந்து ஈரமாகிய நிலத்திலும், மனத்திலும் வீசும் தென்றல் நாளையும் சுடும்...
மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் இணைப்பு இங்கே
முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 6 | ‘அடி ஆத்தாடி...’ - நம் மனம் முழுக்க வீசும் அலை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT