Published : 01 Oct 2022 10:16 PM
Last Updated : 01 Oct 2022 10:16 PM

இளையராஜாவுடன் இசையிரவு 5 | ‘துள்ளி எழுந்தது பாட்டு’ - வதைக்கும் காமன் கணை!

உலகம் தொடங்கியதில் இருந்து இருளும் ஒளியும் தொடர்ந்தே வருகின்றன. இதில் ஒளி கூட கால மாற்றத்துக்கேற்ப பல வழிகளில் பரிணமித்துக் கொண்டது. ஆனால், இருள் அதன் தன்மையில் இருந்து இன்றும் விலகாமலேயே இருந்து வருகிறது. இத்தன்மையால்தான் அதன் மீதான ஒருவித மெல்லிய அச்ச உணர்வு இருப்பு கொண்டேயிருக்கிறது. அதுபோலத்தான் இந்த கனத்த மவுனங்களும் மென் சோகங்களும் எளிதில் தேற்றமுடியாதவை.

அதிகம் கவனிக்கப்படாத, யாருடைய தேற்றலும் இல்லாத அந்த மெல்லிய உணர்வுகளை ஆற்றும் மகத்துவத்தை ஆய்ந்து தேர்ந்தவர் இளையராஜா. அதனால்தான் அவரது இசையும், பாடலும் ஆன்மாவுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது. இந்தப் பாடலில்கூட ஒரு மென் சோகத்தின் மவுனத்தை கம்பிக் கருவிகளையும், காற்றுக் கருவிகளையும் கொண்டு இப்படித்தான் இழைத்து குணப்படுத்தியிருப்பாரோ என்று எண்ணத் தூண்டும் வகையில் அமைந்த பாடல்.

1985-ம் ஆண்டு வெளிவந்த "கீதாஞ்சலி" திரைப்படத்தை இளையராஜாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் கே.ரங்கராஜ் இயக்கியிருப்பார். படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலியும், வைரமுத்துவும் எழுதியிருப்பா். 'துள்ளி எழுந்தது பாட்டு' பாடலை ஐயா வாலி எழுதியிருப்பார். இருள் கவிந்த அறைகளில், யாருமற்ற தனிமைகளில் இந்த பாடல் எத்தனையோ முறை பலருக்கு ஆறுதல் அளித்திருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

பாடல் தொடங்கிய சில விநாடிகள் மனதை வருடும் அந்த கிடார் இசை எத்தனை புனிதமாயிருக்கிறது. தொண்டைக் குழிக்குள் தொக்கி நின்று, யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டியிருக்கும் அத்தனை துக்கத்தையும் கொட்டித் தீர்த்துவிடுகிறது. துக்கத்தை பகிரந்த கணத்தில் இலகான மனதின் வெளிப்பாடாய் அத்தனை சன்னமாக இளையராஜாவின் குரலில் தொடங்கும் பாடல் நம்மை சலனமற்றவர்களாக மாற்றிவிடுகிறது. பாடலின் முதல் மற்றும் இரண்டாவது சரணத்தை,

"குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல்…
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை ?
காமன் கணை எனை வதைக்குது

அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
நான் தேடிடும்…
நான் தேடிடும் ராசாத்தியே
நீ போவதா ஏமாத்தியே ?
வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்" என்று மிக எளிமையான சொற்களைக் கொண்டு நெய்திருப்பார் காவியக் கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்த வரிகளை பாடும்போது, குறிப்பாக முதல் மற்றும் இரண்டாவது சரணங்களில் வரும் இந்த இடங்களைத் பாடும்போது,

"மாலை முதல்…
மாலை முதல் காலை வரை"

"நான் தேடிடும்…
நான் தேடிடும் ராசாத்தியே" இந்த வரிகளை அவர் பாடியிருக்கும் விதம், பாடலைக் கேட்பவர்களுக்கு அத்தேடலின் தீவிரத்தன்மையை உணர்த்துவதற்காகவே, அந்த இடங்களை மட்டும் நீட்டித்து பாடியிருப்பார்.

ஆழ்மனது சோகங்களை குணப்படுத்த இளையராஜாவின் ஒற்றை கிடார், ஒற்றை வயலின், தொடக்கம் முதல் பாடலின் இறுதிவரை செல்லும் ஒரே மாதிரியான தபேலாவின் தாளநடை மட்டும் போதுமானதாக இருக்கிறது. இத்தனை சொற்ப எண்ணிக்கையிலான கருவிகளைப் பயன்படுத்தி நம்மை ஆற்றுப்படுத்தி, மன இறுக்கங்களின் அத்தனைப் பிணைப்புகளில் இருந்தும் விடுதலை அளிக்கிறது அவரது இசை. மென் சோகத்தைக் கலைக்கும் பாடல் நாளையும் முளைக்கும்...

துள்ளி எழுந்தது பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 4 | ‘வெள்ளைப் புறா ஒன்று’ - கண்ணோரம் உண்டாகும் கார்கால சிலிர்ப்பு!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x