Last Updated : 02 Oct, 2022 11:56 AM

 

Published : 02 Oct 2022 11:56 AM
Last Updated : 02 Oct 2022 11:56 AM

ஒற்றை நாயக பிம்பத்தில் இருந்து ‘மல்டி ஸ்டார்ஸ்’ நோக்கி நகர்வு - ஒரு பார்வை

தமிழ் சினிமா தற்போது மல்டி ஸ்டார் கேஸ்டிங்கை நோக்கி நகர்ந்து வருகிறது. கோலிவுட்டில் எதிர்காலத்தில் கூடுதல் வலுப்பெறும் இந்தப் போக்கு குறித்து பார்ப்போம்.

தன்னைச் சுற்றியிருக்கும் நவீனத்தை சுவீகரிக்கத் தவறும் கலை காலாவதியாகவிடுகிறது. போலவே, கால ஓட்டத்திற்கேற்ப பரிணாம வளர்ச்சி பெறும் ரசிகனின் ரசனை பட்டினிக்கு இணையான தீனி கிட்டாதபோது அது பலவீனமடைந்து தேங்கிவிடுகிறது. உதாரணமாக பாலிவுட் அப்படியான சவாலைத் தான் தற்போது எதிர்கொண்டு வருகிறது. கால ஓட்டத்திற்கேற்ப அந்த இயக்குநர்களின் கற்பனையும், ரசனையும் அப்டேட்டாகாதபோது 'சாம்ராட் பிருத்விராஜ்', 'தாகத்' போன்ற படங்கள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றன.

அதேசமயம் தென்னிந்தியாவிலிருந்து உருவாக்கப்படும் 'ஆர்ஆர்ஆர்' மாதிரியான படங்கள் வடக்கில் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அப்படிப் பார்க்கும்போது ஒரு ரசிகனுக்கு தனக்கான ரசனை மொழி எந்த பிராந்தியத்திலிருந்து கிட்டினாலும் அதனை நோக்கி ஓடவும், அதற்கான அங்கீகாரத்தை கொடுக்கவும் அவன் தவறியதில்லை. மலையாளப் படங்களையும் இங்கே உதாரணமாக்கி கொள்ளலாம்.

அப்படி தமிழ் சினிமா தன்னளவில் நவீனத்திலும் பரிணமித்தும், ரசிகனின் ரசனைக்கேற்ற தீனியை தவறாமல் வழங்கியும் வருவதால் தேக்கத்திலிருந்து விடுப்பட்டு நிற்கிறது. ஹீரோயிசம் இருந்த காலத்தில் அதை உடைத்து 'மங்கத்தா', 'பீட்சா', 'சூதுகவ்வும்' போன்ற படங்களில் புதிய பாணியை கையாண்டது. பின்னர், காலச்சக்கரங்களை முன்னும், பின்னுமாக உருட்டி வைத்து விளையாடியது. பிறகு, 'மேற்கு தொடர்ச்சி மலை', 'ஆடுகளம்', 'காக்கா முட்டை', 'கடைசி விவசாயி' போன்ற யதார்த்ததுக்கும் நெருக்கமான படைப்புகளை வழங்கியது.

காவல் துறையை புனித்தபடுத்தியன் விளைவை உணர்ந்து, மறுபுறம் காவல்துறை நிகழ்த்தும் குற்றங்களை 'விசாரணை', 'ஜெய்பீம்' போன்ற படங்களின் வழி பதிவு செய்தது. பின்னர் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான படங்கள் அணிவகுத்து வருகின்றன. இப்படியாக ரசிகர்களின் ரசனைக்கு ஏற்பட மாற்றத்தை நிகழ்த்தி வரும் தமிழ் சினிமா தற்போது 'மல்டி ஸ்டார்' கேஸ்டிங்கை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக கணிக்கப்படுகிறது.

'மாஸ்டர்', 'விக்ரம்', 'பொன்னியின் செல்வன்' படங்கள் தனிநபர் நாயக பிம்பத்திலிருந்து அப்டேட்டாக வேண்டிய தேவையையும், வசூல் ரீதியான வணிக மேம்பாட்டுக்கான வழியையும் வகுத்து கொடுத்துள்ளன. முன்னதாக, 'விக்ரம் வேதா', 'பேட்ட' இதற்கு பெரிய உதாரணங்களாக அமைந்தன. தமிழ் சினிமா முன்பே, 'தளபதி', 'ஹேராம்', 'அவன் இவன்’, ‘பிதாமகன்’, ‘ஆயுத எழுத்து’ என அவ்வப்போது அரிதான இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படங்களை வெளியிட்டிருந்தாலும், தற்போது அது தீவிரமடைந்திருப்பதை காணமுடிகிறது.

இந்த மல்டி ஸ்டார் கூட்டணியுடன் பான் இந்தியா பானியும் கைகொடுக்கும்போது வணிகத்தின் வீச்சும் பரந்த ரசிகர் பட்டாளத்தின் ரீச்சும் இதன் தேவையை அதிகரித்துள்ளன. முன்பே தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்கள் வந்தாலும் அவரை ஒற்றை மொழியுடன் குறிப்பிட்ட பிராந்திய ரசிகர்களுக்கான படமாக சுருங்கியிருந்தது.

தற்போது இந்த போக்கை, 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப்', 'பிரம்மாஸ்திரா' போன்ற படங்கள் வேகப்படுத்தியிருப்பதையும், அதன் மூலம் அசுர வசூல் சாதனையை படைத்திருப்பதையும் உறுதி செய்ய முடியும். இதன் மூலம் இருபெரும் நடிகர்கள் திரையில் தோன்றுவதிலிருந்த தயக்கமும் உடைந்து வருகிறது. இதற்கு முன்னோடியாக தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியை தாராளமாக குறிப்பிடலாம். 'விக்ரம் வேதா', 'பேட்ட', 'மாஸ்டர்', 'விக்ரம்', என மல்டி ஸ்டார் கேஸ்டிங்கிற்கு தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொடுத்தார்.

ஓடிடியின் வீச்சு அதிகரித்துவிட்ட காலக்கட்டத்தில் இந்த ‘மல்டி ஸ்டார் கேஸ்டிங்’ பாணி தயாரிப்பாளர்களையும், திரைக்கு வருவதற்கான ரசிகர்களின் உந்துதலையும் அதிகரிக்கும் பாதையை அமைத்துக்கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட நட்சத்திரத்தை பின்தொடரும் ரசிகர்களுடன், மற்றொரு பிரதான நடிகரும் இணையும் போது ரசிகர்களின் எண்ணிக்கை இருமடங்காவது இனியும் திரையரங்குகளின் தேவையை உணர்த்துகிறது. இதன் சமீபத்திய உதாரணம் ‘பொன்னியின் செல்வன்’. ஏராளமான கதாபாத்திரங்கள் கொண்ட இந்தப் படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.80 கோடியை சாத்தியப்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தில் ரூ.10 கோடிக்கு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது. பிரபாஸின் ‘சலார்’ படத்தில் பிருத்விராஜ் நடிக்க உள்ளார். தெலுங்கில் ராஜமௌலி மகேஷ் பாபு இயக்கும் படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாகவும், கூடவே கமலை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் வெளியாக உள்ள சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கிறார்.

இப்படியாக எதிர்காலத்தில் திரையரங்குகள் ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து, அதனை நோக்கி வரவைப்பதற்கான ட்ரெண்டாக இந்த மல்டி ஸ்டார் கேஸ்டிங் உருவெடுத்துவருகிறது. குறிப்பாக வணிக ரீதியாக சினிமாவை வலுப்படுத்தும் வகையிலும், ரசிகர்களின் ரசனையை கூட்டும் விதத்திலும் இந்த மல்டி ஸ்டார் கேஸ்டிங் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x