Published : 11 Nov 2016 01:15 PM
Last Updated : 11 Nov 2016 01:15 PM

மீத்தேன் தடை... கத்துக்குட்டியும் காரணம்! - இயக்குநர் இரா.சரவணன் பேட்டி

“என் படம் ரிலீஸான நாளில்கூட இவ்வளவு அழைப்புகள், வாழ்த்துகள், பதிவுகள் வந்தது இல்லை. நான் எடுத்த ‘கத்துக்குட்டி’ படம் மாபெரும் வெற்றியை அடையவில்லை. ஆனால், மக்களுக்கான வெற்றியா இன்னிக்கு மாறி இருக்கு. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்த உடனேயே என் செல்போனில் நிரம்பி வழிந்த வாழ்த்துக்கள்தான் ‘கத்துக்குட்டி’ங்கிற படத்துக்கு கிடைச்ச வெற்றி. மண்ணுக்கான, மக்களுக்கான பிரச்னைகளை சினிமாவில் பேசினால் எடுபடாதுன்னு இனி யாரும் சொல்ல முடியாது. டெல்டா மாவட்டங்களையே கபளீகரம் பண்ணப் பார்த்த மீத்தேன் திட்டத்தின் கொடூரத்தை கடைக்கோடி மக்களின் பார்வை வரை கொண்டுபோய் சொல்ல உதவியாக இருந்த என்னுடைய தயாரிப்பாளர்களையும் படத்தைக் காப்பாற்றி ரிலீஸ் செய்த சுந்தரபரிபூரணன் அவர்களையும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைக்கிறேன்!” – ‘கத்துக்குட்டி’ படத்தின் இயக்குநர் இரா.சரவணன் பரவசம் அடங்காமல் பேசுகிறார்.

மீத்தேன் பிரச்சனையை மையமாக்கி படம் எடுக்கும் தைரியம் எப்படி வந்தது?

அதுக்காகத்தானே படம் எடுக்கவே வந்தது. எனக்கு சினிமாவில் எந்த அனுபவமும் இல்லை. 15 வருஷம் பத்திரிகையாளரா இருந்ததால் மீத்தேன் பிரச்னையோட பாதிப்பு எனக்கு நல்லாத் தெரியும். நாளைய இந்தியாவோட மிகப் பெரிய தேவையே மாற்று எரிபொருள்தான். அதனால் மீத்தேனை எடுக்க ஒட்டுமொத்த சோழ தேசத்தையே நாசம் பண்ண துணிவாங்கன்னு உணர முடிஞ்சது. ஆனா, மீத்தேன் அபாயம் எங்க தஞ்சாவூர் மக்களுக்கு சரியா தெரியலை.

பத்திரிகை வாயிலா எந்தளவுக்கு எடுத்துக்கிட்டு போக முடியும்னு புரியலை. எனக்கு இயல்பாகவே சினிமா ஆர்வம் அதிகம். படம் பண்றதுதான் இலக்கா இருந்தது. அதனால மீத்தேன் பிரச்னையை மையமா வைச்சே படம் பண்ணலாம்னு இறங்கிட்டேன். அதுக்காக ஆவணப்பட பாணியில் நான் கருத்து சொல்லலை. ‘கத்துக்குட்டி’ நூறு சதவிகித காமெடி படம். இவ்வளவு பெரிய உடம்புக்கு காய்ச்சல் வந்தால், ஒரு சின்ன இடத்தில் ஊசி போடுற மாதிரிதான் மீத்தேன் பாதிப்பையும் அவலத்தையும் நாளைக்கு நடக்கப்போற துயரத்தையும் படத்தில் சரியான இடத்தில் பதிவு செஞ்சேன். மீத்தேன் திட்டம் எப்படி எங்க மண்ணை சூறையாடப் போகுதுங்கிறதை எளிய மக்களுக்கும் புரியும் விதமா பல லட்ச ரூபாய் செலவில் கிராபிக்ஸ் காட்சிகளாகப் பண்ணிக் காட்டினோம். அந்த கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோவா பரவி வாட்ஸப், பேஸ்புக், ட்விட்டர்னு எல்லா தளத்திலும் வைரலாச்சு.

மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் மிகப் பெரிய அளவுக்கு வலுவாச்சு. சமூக வலைத்தளங்களில் விவசாய ஆதரவுக் குரல்கள் பெரிசா எதிரொலிக்க ஆரம்பித்தது. படம் தொடங்கினப்ப இவ்வளவு பெரிய அதிர்வை உண்டாக்கும்னு நினைக்கலை. இன்னொரு விஷயம் தெரியுமா… என் தயாரிப்பாளர்கள்கிட்ட கதை சொன்னப்ப மீத்தேன் விஷயத்தை நான் சொல்லவே இல்லை. ‘கதையின் மையக் கரு என்ன’ன்னு கேட்டப்பகூட அப்புறம் சொல்றேன் சார்னு சொல்லிட்டேன். ஏன்னா, மீத்தேன் சம்பந்தமானதுன்னு சொன்னா அவங்களே பயந்துடுவாங்க. அதனால மீத்தேன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துட்டு அப்புறமா அவங்களுக்குப் போட்டுக் காட்டினேன். ‘படமே ஜெயிக்காட்டியும் பரவாயில்ல… இந்த மண்ணுக்காக நாம நல்லது பண்ணினோம்னு இருக்கட்டும்’னு என் தயாரிப்பாளர்கள் கட்டிப் பிடிச்சிட்டாங்க.

மீத்தேன் பாதிப்பை பெரிதா மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்ததற்கும், இன்று தடை அளவுக்கு வென்றதற்கும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பங்களிப்பு பெரிதாக இருப்பதாக நம்புகிறீர்களா?

மீத்தேன் திட்டம் தடையானதற்கு நாங்கதான் காரணம்னு சொல்லலை. ஆனா, நாங்களும் காரணம்கிறது மறுக்க முடியாது. ரிலீஸாகிற கடைசி நேரத்தில் படத்துக்கு கோர்ட் தடை விதித்தது. அந்த நேரத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் எங்க படத்தை ரிலீஸ் பண்ண போராடினார். ‘நானே கோர்ட்டுக்கு வரேன்’ன்னு சொன்னார். அவர் உறுதுணையை காலத்துக்கும் மறக்க முடியாது. படம் ரிலீஸான உடனேயே டெல்லி தமிழ்ச் சங்கம் தனி விழா எடுத்துப் பாராட்டினாங்க. ‘டெல்லியில் பெரிய பெரிய பதவிகளில் இருக்கிற எங்களுக்குக்கூட மீத்தேன் நம்ம மண்ணைக் காவு வாங்கப் போற சோகம் புரியலை. நாங்க ஏதாச்சும் பண்றோம்’னு கையைப் பிடிச்சுக்கிட்டு கலங்கினாங்க. கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கங்கள் டெல்டா மாவட்டங்களில் 'கத்துக்குட்டி' படத்தைப் பார்க்கச் சொல்லி பரப்புரை பண்ணினாங்க. சொந்த மண்ணில் எனக்கு விழா எடுத்து என்னைய பெத்த அம்மாவைக் கௌரவிச்சாங்க. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் எல்லா இடங்களிலும் எங்களுக்கான குரலாகவே மாறினாங்க. மீத்தேன் போராட்டத்தில் தொடர்ந்து களத்தில் நிற்கிற மன்னார்குடி சேதுராமன் ‘கத்துக்குட்டி’யை பார்த்துவிட்டு அனுப்பிய எஸ்.எம்.எஸ்.தான் எங்க படத்துக்கான ஆஸ்கார் அவார்டு. போராடுறவங்களுக்கான உந்துதலாகவும், போராடத் தூண்டுற சக்தியாகவும் ‘கத்துக்குட்டி’ படத்தோட தாக்கம் இருந்தது. நம்மாழ்வார் அய்யாவுக்கு சமர்ப்பணம் பண்ணிய எங்க படத்தை வெகு மக்கள்கிட்ட தியேட்டர்காரங்க கொண்டுபோய் சேர்க்கலை. ஆனா, லோக்கல் சேனல்களில் ‘கத்துக்குட்டி’ வாரம் இருமுறைங்கிற அளவுக்கு இப்போ வரைக்கும் ஓடுது.

மத்திய அமைச்சரின் அறிவிப்பை வைத்து மீத்தேன் அச்சம் நிரந்தரமா நீங்கி விட்டதாக நம்பலாமா?

90 சதவிகிதம் நம்பலாம். காரணம், டெண்டர் மட்டுமே ரத்து என முன்பு பூசிமெழுகிச் சொன்ன மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இப்போது திட்டமே ரத்துன்னு சொல்லி இருக்கிறார். இதற்கு முக்கியக் காரணம் தமிழக அரசுதான். மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற 16 லைசென்ஸ் வாங்கணும். அதில் 7 லைசென்ஸை மாநில அரசுதான் வழங்கணும். ஆனால், தமிழக அரசு அதற்கு சம்மதிக்காமல் மீத்தேன் எடுக்கத் தடை விதித்தது. அடுத்து மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பெற தமிழக அரசு உதவியையும் பாதுகாப்பையும் செய்யும் என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், அதிலும் தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்கலை. மாநில அரசின் ஆதரவின்றி மீத்தேன் மாதிரியான பிரமாண்டத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாதுன்னு மத்திய அரசுக்குத் தெரியும்.

இதற்கிடையில் ‘மீத்தேன்’ ஜெயராமன், சித்ரா ஜெயராமன் உள்ளிட்டவர்களின் இடைவிடாத போராட்டங்களும் விழிப்பு உணர்வுக் கூட்டங்களும் டெல்டா மண்ணில் மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கின. எரிவாயு பரிசோதனை நடத்த வந்த அதிகாரிகளை மக்கள் விரட்டி அடிச்சாங்க. விவசாய மண்ணில் நடந்த மாபெரும் இந்தப் புரட்சியை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளால் தாக்குப்பிடிக்க முடியலை. அதனால் வேறு வழியில்லாமல் தான் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டிருக்கிறது. மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ததுபோல் ஷெல் கேஸ் விஷயத்திலும் மத்திய அரசு தெளிவான ரத்து அறிவிப்பைச் செய்யணும். ஷெல் கேஸ் ஆய்வுகள் தமிழகத்தில் நடத்தப்படாதுன்னு மத்திய அமைச்சர் சொல்லி இருப்பது மட்டும் நமக்குப் போதாது. காரணம், மீத்தேன் அபாயத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடூர திட்டம்தான் ஷெல் கேஸ் திட்டமும்!

அடுத்த படமும் மண் சார்ந்த பதிவுதானா?

இல்லை. பெண் சார்ந்த பதிவு. ஒரு பெண்ணை நாம எந்தளவுக்குக் கொண்டாடனும், தூக்கிச் சுமக்கணும்கிறதை சொல்ற கதை. திரைக்கதை எழுதிக்கிட்டு இருக்கேன். பெண்கள் மீதான எந்தவிதமான தாக்குதல்களையும் தாங்கிக்க முடியாமல் அவங்களுக்கான பேராதரவா என் படம் இருக்கணும்னு நினைக்கிறேன். அன்பும், ஆக்‌ஷனும் கலந்த கலவையா கதையை ரெடி பண்ண கொஞ்சம் தாமதம் ஆகுது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x