Published : 25 Sep 2022 04:30 PM
Last Updated : 25 Sep 2022 04:30 PM
சின்னத்திரை நடிகையான லட்சுமி வாசுதேவ் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை லட்சுமி வாசுதேவன். 'சரவணன் மீனாட்சி', 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ''எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய வாட்ஸ் அப்பில் இருக்கும் அனைவருக்கும் இந்த செய்தியை அனுப்ப நினைக்கிறேன். என்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் அப் தொடர்பில் உள்ள அனைவருக்கும் யாரோ அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப்போல யாரும் இந்த தவறை செய்துவிடக்கூடாது.
செப்டம்பர் 11-ம் தேதி எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 5 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனுடன் வந்த ஒரு லிங்கை தொட்ட உடன் ஆப் பதிவிறக்கம் ஆனது. அதிலிருந்து என் மொபைல் ஹேக் ஆனது. அதன்பின் 3 நாட்கள் கழித்து மர்ம நபர்கள் எனக்கு போன் செய்து, 'நீங்கள் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளீர்கள் அதை திரும்ப செலுத்துங்கள்' எனக் கூறி குறுஞ்செய்தி வந்து கொண்டே இருந்தது.
காசு கொடுக்கவில்லை என்றால் உங்கள் புகைப்படத்தை மார்பிங் செய்துவிடுவோம் என மிரட்டினர். அதேசமயம் என்னுடைய வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு தவறான புகைப்படங்கள் அனுப்புகிறார்கள். என் அப்பா அம்மாவுக்கும் அனுப்புகிறார்கள்'' என கதறி அழுதபடி கூறினார்.
மேலும், ''தயவு செய்து எதாவது மெசேஜ் வந்தால் அந்த லிங்கை க்ளிக் செய்து ஆப்களை டவுன்லோட் செய்யாதீர்கள். சைபர் கிரைமிலிருந்து தயவு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்களுக்கு எதாவது போட்டோஸ் வந்தால் அதை ரிப்போர்ட் செய்யுங்கள். யாரும் எந்த லிங்க், ஆப்களையும் டவுன்லோட் செய்யாதீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சைபர் பிரிவில் புகார் கொடுத்துள்ளேன் என தெரிவித்தார். இனிமே யாரும் இது போன்ற தேவையில்லாத ஆப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் கண்ணீருடன் பேசியுள்ளார். பிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT