Published : 25 Nov 2016 10:31 AM
Last Updated : 25 Nov 2016 10:31 AM

எனக்கு தயாரிப்பாளர் கிடைப்பது கடினமாக இருந்தது: இயக்குநர் பார்த்திபன் நேர்காணல்

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான படங்களைத் தந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் பார்த்திபன். கடந்த சிலகாலமாக படங்களை இயக்குவதில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம்.

“இதுவரை நான் இயக்கிய படங்கள் எதுவுமே மற்ற படங்களின் சாயலில் இருக்காது. அதே போலத்தான் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படமும். இந்த சாயலில் நீங்கள் எந்தவொரு படத்தையும் பார்க்க முடியாது” என்றவாறு பேசத் தொடங்கினார் பார்த்திபன்.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்துக்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவெளி?

அந்தப் படம் ஜெயித்தாலும் எனக்கு அடுத்த படத்துக்கான தயாரிப்பாளர் கிடைப்பது கடினமாக இருந்தது. ஓடுகின்ற குதிரையை மட்டுமே நம்புகிறார்கள். 10 பெரிய நாயகர்களை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்களின் அடுத்த படத்தின் இயக்குநரை திறமையைச் சார்ந்து தேர்வு செய்வதில்லை. அந்த இயக்குநரின் முந்தைய படம் வெற்றியா என்பதை மட்டுமே பார்த்து தேர்வு செய்கிறார்கள். அதனால் நானும் 4 வெற்றி படங்கள் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அனைத்து முன்னணி நாயகர்களுக்கும் கதை வைத்திருக்கிறேன். ஜெயம் ரவியிடம் ஒரு படம் தொடர்பாக பேசியிருக்கிறேன். பார்க்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து நீங்கள் தொடங்கிய ‘ஏலேலோ’ படம் என்னவானது?

நானும் அவரும் சந்திக்கும் போதெல்லாம், “நான் எத்தனை படம் செய்தாலும், ‘ஏலேலோ’ மாதிரி ஒரு கதையை நான் இன்னும் கேட்டதே இல்லை” என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறுவார். அவர் இப்போது அலாதியான உயரத்துக்கு சென்றுவிட்டார். என்றாவது ஒருநாள் அவராக அழைத்து, அந்தப் படத்தை பண்ணலாம் என்று சொன்னால் மட்டுமே செய்வேன். கண்டிப்பாக அது நடக்கும். அதில் நான் நடிக்க மாட்டேன். வேறொரு நாயகனை வைத்து இயக்குவேன். ஏனென்றால் அந்த கதையின் நாயகனுக்கான வயதை நான் கடந்துவிட்டேன்.

பெரிய நாயகர்கள் உங்கள் இயக்கத்தில் நடிப்பதற்கு தயங்குவதாக நினைக்கிறீர்களா?

அனைவருக்குமே ஒரு குழப்பம் இருக்கிறது. நான் வழக்கமான ஒரு படத்தை செய்துவிட மாட்டேன். ஆனால், நாயகர்கள் அனைவருமே வழக்கமான ஒரு படம் செய்துதான் ஜெயிக்கிறார்கள். ஒரு பெரிய நாயகனை வைத்து படம் பண்ண வேண்டும் என்றால், அதில் பார்த்திபனுக்கு என்ன இருக்கிறது என நான் பார்ப்பேன். அதில் என்னுடைய பெயருக்கு ஒன்றுமே இல்லையே. அது கமர்ஷியலாகவும், கூடவே வேறு ஒரு களத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்றாவது ஒரு நாள் பெரிய நாயகர்களுக்கு என் மீது நம்பிக்கை வரும்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் வேண்டும் என்று நீங்கள் நினைப்பதற்கு என்ன காரணம்?

போட்டிதான் காரணம். ‘அனைத்து கருப்புக் குதிரைகளுக்கு நடுவில் ஒரு வெள்ளைக் குதிரை ஓடிவருகிறது பார்’ என்று சொன்னால்தானே வெள்ளைக் குதிரை கவனிக்கப்படும். தமிழ் திரையுலகில் அனைவருமே மகா குதிரைகளாக இருக்கிறார்கள். ரஜினி சாரின் படம் ஓடவேண்டும் என்றால் அவருக்கான 10 விஷயங்கள் அப்படத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கே இருக்கிறது. அவர்களுக்கே அந்த கட்டாயம் இருக்கும்போது, எனக்கும் அந்த கட்டாயம் இருப்பதாக உணர்கிறேன்.

இன்று பைனான்சியர்கள் கையில் தமிழ் சினிமா சென்றுவிட்டது என கூறுகிறார்களே.. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

இங்குதான் நான் என்னைப் பற்றி ரொம்ப பெருமையாக நினைக்கிறேன். 3 வெளி படங்களில் நடித்து, அதில் வரும் பணத்தை எனது சொந்த நிறுவனத்தில் போட்டு படம் எடுக்கிறேன். என்னுடைய பெண் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று நான் ஆசைப்பட்டாலும், என்னுடைய பெண், நான் படம் எடுக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறாள். இந்த மாதிரி நல்ல குழந்தைகள் இருப்பதால், என்னால் தைரியமாக நான் விரும்பியதை செய்ய முடிகிறது. ஆகையால், நீங்கள் கூறும் தயாரிப்பாளர் கணக்கில் நான் வரமாட்டேன். நான் என்னுடைய கைக் காசைப் போட்டுத்தான் படம் எடுக்கிறேன்.

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே?

இதில் சமீபமாக பயமுறுத்தும் பேய் பயம் இருக்கிறது, அதே போல சில முரண்களும் இப்படத்தில் இருக்கின்றன. அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது ஒருவர் இப்படியொரு விஷயம் வேறொரு நாட்டில் நடந்ததாக சொன்னார். அந்த நாட்டின் பெயரை நான் இப் போது சொல்ல மாட்டேன். கதை என்பது ஒரு வரிதான். ஆனால், அதைச் சுற்றி நான் அமைத்திருக்கும் திரைக்கதை என்பது புதுமையானது. இப்படத்தின் கதையை அங்கங்கு உடைத்து, வெவ்வேறு இடங் களில் சொல்கிறேன். படத்தின் முடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது, அவ்வளவுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x