Published : 19 Sep 2022 01:25 PM
Last Updated : 19 Sep 2022 01:25 PM
தனது எழுத்தில் உருவாகி வெளிவந்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் வீடியோவில், ''சென்னையில் நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றி விழா கொண்டாட நிகழ்வில் என்னால் பங்கெடுக்க முடியவில்லை. ஆனால், மானசீகமாக உங்கள் அனைவருடனும் நான் அங்குதான் இருந்துகொண்டிருக்கிறேன். இந்தப் படம் மிக யதார்த்தமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கிய ஒன்று. எப்படி வாழ்க்கை இருக்கிறதோ அதற்கு மிக அணுக்கமாக இருக்க வேண்டும் என்று திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
இரண்டு மனிதர்கள். ஒருவர் தன்னுள்ளே இருக்க கூடிய தீ காரணமாக ஓரிடத்தில் சென்று சேர்கிறார். மற்றொருவர் வேறொரு இடத்தில் சென்றடைகிறார். இருவரும் சந்திக்கும்போது ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். ஆனால், ஒருவரையொருவர் நெருங்கவில்லை. இவ்வளவு தான் இந்தப் படம். இது நம் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்க கூடிய ஒன்று. நம் பள்ளியில் படித்த மாணவன் ஒரு கட்டத்திற்கு பிறகு நமக்கு அந்நியராக தெரிவார். அந்த மாற்றத்தின் கதை இது. அதேதான் நிழலுலக பின்னணியில், பரபரப்பான சம்பவங்களுடன், தீவிரமான செயல்களுடன், உணர்ச்சி கொந்தளிப்புடன் வேகமாக திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறோம். அதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பது மகிழ்ச்சி.
கௌதம் படத்திற்கு காட்சி அழகை ஏற்றியிருக்கிறார். ட்ராலியும், க்ரேனும் இந்தப் படத்தில் செயலிழந்து போயுள்ளன. ஒரே ஷாட் காட்சிகள் வந்துள்ளன. புதிய மாணவரைப்போல கற்றுக்கொண்டு புதிய இயக்குநர் போல உள்ளே நுழைந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அவ்வளவு பேரின் உழைப்பையும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். இரண்டாவதாக இது சிலம்பரசனின் படம். கிராமத்து இளைஞனாக இருந்து அசுரத்தனமான ஒருவராக மாறி நுட்பமாக தன்னை செதுக்கி நடித்திருக்கிறார். அந்த நடிப்பு படத்தின் வெற்றிக்கு காரணமாகியிருக்கிறது.
அவருக்கு வாழ்த்துகள். அதேபோல ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மல்லிப்பூ பாடல் பெரிய பலம். ஒளிப்பதிவாளர், ஐசரி கணேசன் உள்ளிட்டோரால் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது. அடுத்த பாகத்தை இன்னும் பிரமாண்டமாக, தீவிரமாக உருவாக்குவோம் என சூளுரைக்கிறோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT