Published : 17 Sep 2022 05:47 PM
Last Updated : 17 Sep 2022 05:47 PM
''எதிர்மறையான விமர்சனங்கள், ரசிகர்களின் கோட்பாடுகள், மக்களுக்கு பிடிக்காத விஷயங்கள் என என்னால் அனைத்து விமர்சனங்களையும் உள்வாங்கிகொள்ள முடியவில்லை'' என ‘பிரம்மாஸ்திரா’ இயக்குநர் அயன்முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியாபட், அமித்தா பச்சன், ஷாருக்கான் நடித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா'. ஏறக்குறைய 4 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா முறையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக கவனம் ஈர்த்தாலும் எதிர்மறையான விமர்சனங்கள் தற்போது மேலோங்கி வருகின்றன.
இந்நிலையில், படம் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து இயக்குநர் அயன் முகர்ஜி கூறுகையில், ''நான் எப்போதும் நேர்மறை சிந்தனைகளில் மட்டுமே கவனம் செலுத்துவேன். படம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வருவதை அறிகிறேன். எதிர்மறையான விமர்சனங்கள், ரசிகர்களின் கோட்பாடுகள், மக்களுக்கு பிடிக்காத விஷயங்கள் என என்னால் அனைத்து விமர்சனங்களையும் உள்வாங்கிகொள்ள முடியவில்லை. அதற்கான நேரம் வரும்போது அதை செய்வேன். பாகம் 2-ஐ உருவாக்கும்போது இந்த விமர்சனங்களையெல்லாம் கவனத்தில் கொள்வேன்'' என்றார்.
படத்தின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆலியா பட், “விமர்சனம் மற்றும் கருத்துக்களை சொல்வது பார்வையாளர்களின் உரிமை. எதிர்மறையான விஷயங்களைக் காட்டிலும் நேர்மறையான விஷயங்களையே அதிக அளவில் எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
'பிரம்மாஸ்திரா' பாலிவுட்டின் இந்தாண்டு வந்த படங்களில் அதிக வசூலை எட்டிய படமாக குறிப்பிடப்படுகிறது. உலகம் முழுவதும் முதல் வார வசூலாக படம் ரூ.300 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் படம் வசூலித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT