Published : 01 Nov 2016 06:26 PM
Last Updated : 01 Nov 2016 06:26 PM

நான் சினிமாவில் தோற்றது ஏன்?- கார்த்திக் குமார் உருக்கம்

மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'யுவா', 'கண்ட நாள் முதல்', 'யாரடி நீ மோகினி', 'பசங்க 2' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய திரையுலக அனுபவங்களை, மிகவும் நெகிழ்ச்சியுடனும் இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் கார்த்திக். அதில் அவர் கூறியிருப்பது:

"19 திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு இன்றுடன் நடிப்பதை நிறுத்துகிறேன். சினிமாவில் நடிகனாக இனி வாய்ப்பு தேடப்போவதில்லை. ஒரேடியாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரையிலோ கடையை இழுத்து மூடுவதற்கு இது தான் சரியான தருணம்.

19-வது படத்தில் நடிக்கிறேன். ஒரு அழகான காமெடி திரைப்படம். இந்தப் படத்தின் இயக்குநர் நகைச்சுவைக்கு புகழ்பெற்றவர். தயாரிப்பு தரப்பிடம் சம்பளம் பேசுவது, தேதிகள் ஒதுக்குவது, முழு திரைக்கதை ஸ்க்ரிப்டுக்காக கெஞ்சுவது, நடன இயக்குநரைப் பார்த்து பயப்படுவது என இங்கும் வழக்கம் போல எல்லாம் நடக்கிறது.

ஆனால் சற்று நிறுத்தி யோசிக்கிறேன். இந்த சினிமா பயணத்தை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். எந்த வகையிலும் சினிமா பின்புலம் இல்லாத, பிறர் உதவி தேடாத ஒருவனாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடித்ததே பெரிய விஷயம். அதுவும் 19 படங்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது. கதாநாயகனாக, நகைச்சுவையாளனாக, இரண்டாவது நாயகனாக, எதிர்மறை நாயகனாக, கௌரவ வேடம், உறுதுணை கதாபாத்திரம் என நடித்துள்ளேன். டிராமா, நகைச்சுவை, திகில், காதல், சமூகம், தமிழ், ஆங்கிலம், தங்கிலீஷ், இந்தி, பெரிய பட்ஜெட் கமெர்சியல் படம், சிறிய பட்ஜெட் கமர்சியல் படம், திரைப்பட விழாவுக்கான படம் என நடித்துள்ளேன்.

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால், வாய்ப்பு கிடைப்பதில் வெற்றியடைந்திருக்கிறேன். ஒரு இயக்குநரின் பின்னால் சென்று கெஞ்சுவது, அவர்களுடன் பழகி வாய்ப்பு கேட்பது, அவர்களுடன் பார்ட்டி செல்வது என எதையும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. ஆனாலும் வாய்ப்பு கிடைத்தது. எனவே, என்னால் இவர்களுடன் பொருந்த முடியவில்லை என சொல்லிவிடமுடியாது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் என்னை குறைத்து மதிப்பிட்டுள்ளேன். எனக்கு வந்த கதாபாத்திரங்கள், அதற்கிருந்த இடம், அதற்கு கிடைத்த சம்பளம், இவற்றை விட நான் திறமை வாய்ந்தவனாகவே இருந்திருக்கிறேன்.

நான் நாயகனாக நடித்த முதல் படத்தில் என் மீதிருந்த எதிர்பார்ப்பு அதிகம். நான் என்னிடம் வைத்திருந்த எதிர்பார்ப்பை விட அதிகம். அடுத்த அரவிந்த்சுவாமி, அடுத்த மாதவன் சினிமாவுக்கு கிடைப்பார் என்ற எதிர்பார்ப்பு என்னைச் சுற்றியிருந்தவர்களிடம் இருந்தது. அதற்காக கண்டிப்பா சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை நான் முதல் நாளிலிருந்தே தவிர்த்து வந்தேன். அது என் வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்கியது. நான் வில்லனாக நடிக்க வேண்டும் என நினைத்தபோது காதல் செய்யும் சாக்லெட் பாய் பாத்திரமே கிடைத்தது.

அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும்போதே நான் எனது சரிவை நிர்ணயித்து விட்டிருந்தேன். திரைப்படத்தில் நாயகன் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? கண்டிப்பாக இந்த வாய்ப்பை விடக்கூடாது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். தொடர்ந்து அத்தகையை கதாபாத்திரங்கள் வரும் எனக் கூறி சில சினிமா மேனேஜர்கள் என்னிடம் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

அனைத்தும் தயாராக இருந்த முறையை பார்க்கும்போது எனக்குப் பிடிக்கவில்லை. ஏற்கனவே வடிவமைத்துவைக்கப்பட்ட ஒரு சுழலில் நான் மாட்டிக்கொள்ளப்போவது போல் இருந்தது. என்னால் வேண்டாம் என சொல்லியிருக்க முடியும்,

அப்படி சொல்லியிருந்தால் நான் மேற்கொண்டு முயற்சி செய்யாமல் இருந்திருப்பேனா, இல்லை,

அப்படி சொல்லியிருந்தால் மேற்கொண்டு வாய்ப்புகள் கிடைப்பது கடினமாகியிருக்குமா, இருந்திருக்கலாம்.

நான் வேலையில்லாமல் இருந்திருப்பேனா, ஆமாம்.

நான் கடினமானவனாக, கடுமையானவனாக மாறியிருப்பேனா, ஆமாம்.

ஆனால் நான் அதை செய்யவில்லை. நான் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். வீழ்ந்தேன்.

நான் அந்த படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தேன். எனது பாத்திரத்தை உணர்ந்தே நடித்தேன். முதலில் சற்று தடுமாறினாலும் முயற்சி செய்து நன்றாக நடித்தேன். அதிலும் நடனம் போன்ற சினிமாவுக்கு தேவையான விஷயங்களை செய்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட வசனம் எப்படியானதாக இருந்தாலும் அதை ஒழுங்காக பேசினேன். என்னைப் பொருத்தவரை நான் முழு முயற்சியுடன் நடித்தேன். ஆனால் மற்றவர்களுக்கு என் நடிப்பு போலியாக இருந்தது. ஏனென்றால் நான் கடந்த கால நட்சத்திரங்களுடன் ஒப்பிடப்பட்டேன்.

ஒரு மேம்பட்ட சாக்லெட் பாய் நாயகன் அளவு நான் பெயரெடுக்கவில்லை என்பதால் பிறகு நீண்ட நாட்கள் வாய்ப்பில்லாமல் இருந்தேன். நான் மீண்டும் நாயகன் கதாபாத்திரம் வேண்டுமென்றும் தேடவில்லை. ஆனால் நாயகனைத் தாண்டி வேறெந்த கதாபாத்திரத்திலும் என்னை நடிக்க வைக்க முடியாது என்ற சில வழக்கமான சினிமாகாரர்கள் நினைத்தார்கள்.

எனது அடுத்த கட்டம், சினிமா துறையின் தாரக மந்திரத்தால் ஆளப்பட்டது. ஒன்று ஹிட் படம் கொடுக்க வேண்டும் அல்லது ஹிட்டான படத்தில் பங்கெடுத்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் ஹிட் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லையென்றால் இருட்டிலேயே தேங்கியிருக்க வேண்டும்.

அடுத்து இரண்டாம் நாயகனாக ஒரு பாத்திரத்தில் நடித்தேன். எனக்கு அது ஒரு கதாபாத்திரம் மட்டுமே. அதை உணர்ந்து நடித்தேன். அது எனக்குப் பிடித்திருந்தது. அந்த கட்டத்தில் தான் நான் சந்தோஷமாக இருந்திருக்கிறேன் என்பதை இன்றுவரை நினைத்துக் கொள்ள முடிகிறது. எது, என்னவென்று புரிந்துகொண்டு நடித்தேன்.

அந்தப் படம் சுமாராக ஹிட் ஆனது. என்னை இரண்டாவது கதாநாயகனாக சிலர் யோசிக்க ஆரம்பித்தனர்.

அந்த கதாபாத்திர நடிப்பில் மிகச்சில குறைகளே இருந்தது. என்னை நடிகனாக கருத்தில் கொள்வார்கள் என நினைத்தேன். ஆனால் அனைவரும் என்னை இரண்டாவது நாயகனாக மட்டும் பார்த்தார்களே தவிர நடிப்பை கருத்தில் கொள்ளவில்லை. இரண்டாவது நாயகன், நடிப்புத் தொழிலில் குறைந்தபட்ச அந்தஸ்து இருக்கும் இடம். நான் ஒரு கூட்டுக்குள் அடைபட்டுவிட்டதாக சிலர் கூறினர். என்னைச் சுற்றி ஒரு புதிய அச்சு உருவானது.

அடுத்த வாய்ப்புக்கு மீண்டும் நீண்ட நாட்கள் காத்திருந்தேன்

அந்த கட்டத்தில் எனது மதிப்பு என்ன என்பது சினிமா துறையால் நிர்ணயிக்கப்பட்டது. நல்ல நடிகர், பிரச்சினை செய்யாதவர், பார்க்க நன்றாக இருக்கிறார், ஆங்கில மேடை நாடக பின்னணி, கதை கேட்டு நடிக்கிறார், அதிக சம்பளம் கேட்க மாட்டார், அது போதும் என நினைத்தார்கள். படிக்கும்போது, இதை விட என்ன வேண்டும் என தோன்றுகிறது இல்லையா, இல்லை. இது, அழிவுக்கான அபாயமணி. இதன் அர்த்தம், நீங்கள் மலிவான, அவமரியாதைக்குரிய ஒரு அனுபவத்துக்கு தயாராக இருக்கிறீர்கள் என்பதே.

நாடகத்துறையில் எனது சக கலைஞர்கள் பலர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதன் அர்த்தம் நாங்கள் மோசமாக நடத்தப்படுகிறோம் என்பதல்ல. இதன் அர்த்தம், அனைவரும் சமமாக நடத்தப்பட மாடோம் என்பதே. எங்களது நேரமும், மதிப்பும், 'நல்ல கதாபாத்திரம்' என்ற பெயருக்காக பெரிய அளவில் சமரசத்துக்குள்ளாகும்.

உதவி இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் என பலரால் எங்களது கனவு முடக்கப்படும். உங்கள் கடைசி தவணை சம்பளம் வராது, உங்கள் தேதிகள் அவர்கள் விருப்பத்துக்கேற்ப எடுத்துக்கொள்ளப்படும் அல்லது மறுக்கப்படும். உங்கள் காட்சிகள் படத்தொகுப்பின் போது நீக்கப்படுவது கூட பரவாயில்லை ஆனால் அவை படப்பிடிப்புக்கே வராது.

நான் என்னை குறைவாக மதிப்பிட்டேன். பல முறை. நாயகன் என்ற அச்சை உடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், குறைந்த சம்பளத்துக்கு நல்ல கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டேன். இதை பலமுறை செய்தேன். இதில் ஒரே ஆறுதல், நல்ல குழுக்களுடன் வேலை செய்திருக்கிறேன் என்பதே. ஓரளவு புகழ்பெற்ற குழுக்கள். சினிமா குறித்து ஆரோக்கியமாக உரையாடக்கூடிய குழுக்கள் அவை.

ஆனால் எனது மதிப்பை நானே குறைத்துகொண்டேன் என்பதை உணர மறுத்தேன். குறைவான மரியாதை, குறைந்த பணம். நான் ஏற்றுக்கொண்டிருப்பதை விட அதிக தகுதியுடையவன் என்பதை மனதளவில் அறிந்திருந்தேன். ஆனால் என் போதாத காலம்!

இந்த பயணத்தில் பலர் என்னை கைவிட்டுள்ளனர். நண்பர்கள் என்று நினைத்தவர்கள், நம்மை ஊக்கப்படுத்துபவர்கள் என நினைத்தவர்கள் எல்லாம் ஒரு சின்ன தோல்வியில் அப்படியே நம்மை விட்டு விலகுவார்கள்.

ஆனால் நமக்கு நம்மேல் நம்பிக்கை இல்லையென்றால் மற்றவர்கள் எப்படி நம்புவார்கள். இது அவர்கள் தவறல்ல. நம் தவறே.

நம்மேல் நம்பிக்கை வைத்து, நமக்கான ஒரு தளத்தை ஒருவர் அமைத்தால் அது விலைமதிக்கமுடியாத ஒன்று. ஆனால் அப்படி இல்லாதபட்சத்தில் நாம்தான் நம்மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும்.

இன்று நான் நிறுத்துகிறேன்.

ஏன் நிறுத்துகிறேன்?

ஏனென்றால் எனது பசி தீர்ந்துவிட்டது. பெரும்பாலும் சினிமாவில் பசி என்பது நம்பிக்கையே. ஏதோ ஒன்று வித்தியாசமாக, சிறப்பானதாக அமையும் என்ற நம்பிக்கை. ஆனால் நான் ஓடிக்கொண்டிருக்கும் வழி தவறு. தவறான பந்தையத்தில் ஓடுவதை விட, ஓடுவதை நிறுத்துவது சிறந்தது.

நான் ஓடிக்கொண்டிருக்கும் பந்தயத்தை விட எனது திறமை அதிகம் என்பது உணர்ந்ததால் நிறுத்துகிறேன். முடிந்தவரை இந்த பந்தயத்தில் நிலைத்துவிட்டேன், மக்கள் எனது ஆற்றலை இனம் கண்டு விட்டனர் என்று நினைத்து ஆறுதல் அடைந்தால் நான் ஒரு முட்டாள். எனது ஆற்றலை புரிந்துகொள்வது முதலில் என் வேலையே. அதை நான் முதலில் மதிக்கிறேன்.

ஒரு வேளை காற்று திசை மாறி அடிக்கலாம், நாட்கள் கடந்து போகலாம், எது எப்படியோ இது நான் நிறுத்துவதற்கான நேரம். நான் விரும்புவதற்கு குறைவாக, மாற்றாக எதையும் செய்ய மறுக்கிறேன்.

இப்போதைக்கு, நடிகன் கார்த்திக் குமார் யாருக்கும் கிடைக்க மாட்டான். எனக்கும் கூட. ஏனென்றால் நீண்ட காலம் என்னை நானே காயப்படுத்திக்கொண்டு விட்டேன். அப்படியே மற்றவர்களை காயப்படுத்தவும் அனுமதித்து விட்டேன்.

மணிரத்னம் அவர்களின் குழுவில் இருந்தது, பிசி.ஸ்ரீராம் சாருடன் உரையாடியது, 'கண்ட நாள் முதல்' அரவிந்த கதாபாத்திரம், 'சௌரஹேன்' நந்து, 'யாரடி நீ மோகினி' சீனு, 'பொய் சொல்லப் போறோம்' உப்பிலி, 'நினைத்தாலே இனிக்கு', 'எதுவும் நடக்கும்' வில்லன் பாத்திரங்கள், 'கொல கொலயா முந்திரிக்கா' என கிரேசி மோகன் எழுத்தில் நடித்தது, 'வெப்பம்' படத்தில் காதல் வயப்பட்டவனாக இருந்தது, தவறு செய்யும் அப்பாவாக 'பசங்க 2'-வில் நடித்தது என நன்றாகவே நடித்துள்ளேன். ஆனால் நான் தோற்றவன்.

எனக்குக் கிடைத்ததை விட அதிகமாக கேட்டிருக்க வேண்டும் என்பதை உணராமல் தோற்றவன், என் மீது நம்பிக்கை வைக்காமல் தோற்றவன், ஒரு திரைப்பட நடிகனாக நான் தோற்றதற்கு காரணம் நானே.

நாம் மீண்டும் (ஒருவேளை பார்த்தால்) பார்க்கும் வரை - லவ் யூ சினிமா " என்று தெரிவித்திருக்கிறார் கார்த்திக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x