Published : 12 Sep 2022 08:10 AM
Last Updated : 12 Sep 2022 08:10 AM
நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 43-ம் ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2,50,000 பரிசளிக்கப்பட்டது. விழாவில் அகரம் ஃபவுன்டேஷன் பொருளாளர் நடிகர் கார்த்தி பேசியதாவது:
நல்ல கல்வி அறிவும் நற்சிந்தனைகளும் சமூக பொறுப்புகளும் நிறைந்த இளம் வயதினரை உருவாக்குவதன் மூலம் சமூகக் குறைபாடுகளை காலப்போக்கில் களைய முடியும். இளம் மனங்களை கட்டமைப்பதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை அகரம் பணிகளின் மூலம் அறிந்திருக்கிறோம்.
இப்போது, பள்ளிக்கூடங்கள் வரை வந்துவிட்ட போதைப்பழக்கம் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். மது குடித்தாலோ, சிகரெட் பிடித்தாலோ வாசனை வந்துவிடும்.
போதைப் பொருளில் எதுவும் தெரியாது. அதன் பெயர் தெரியாமலேயே பல பெட்டிக் கடைகளில் அந்தப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
நம் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டியது அவசியம். அரசும் இந்தப் போதைப் பொருளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.
இங்கு வந்திருக்கிற தம்பி, தங்கைகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள நினைக்கிறேன். நன்றாக உடை அணிவதோ, முடிவெட்டிக் கொள்வதோ விஷயமே இல்லை. உங்கள் சிந்தனையும் தன்னம்பிக்கையும்தான் முக்கியம். நீங்கள் மனசு வைத்தால் எதையும் சாதிக்க முடியும். உங்கள் கனவு நனவாகும்.
இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.
விழாவை அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளங்கலை வேளாண் அறிவியல் படிக்கும் தன்ராஜ், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துவரும் மதி தொகுத்து வழங்கினர். நடிகர் சிவகுமார், பேராசிரியர் கல்யாணி, அகரம் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT