Published : 07 Sep 2022 01:09 PM
Last Updated : 07 Sep 2022 01:09 PM
தமிழ் சினிமா தந்திருக்கும் இயல்பான நடிகர்களில் ஒருவர், குரு சோமசுந்தரம். எந்த கேரக்டருக்குள்ளும் தன்னை அப்படியே இணைத்துக் கொள்வது அவர் பலம். நாயகன், வில்லன், குணச்சித்திரம் என மாறி மாறி வரும் அவர், மோகன்லால் இயக்கி, நடிக்கும் ‘பரோஸ்’ படப்பிடிப்பில் இருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்..
எந்த கதாபாத்திரத்துல நடிச்சாலும் அதுவாகவே மாறிடறீங்களே, எப்படி?: ‘கூத்துப்பட்டறை’யில இருக்கும்போது எடுத்துக்கொண்ட பயிற்சிதான் காரணம். அங்க 10, 11 வருஷம் இருந்தேன். வருஷத்துக்கு 3 பெரிய நாடகங்கள் நடக்கும். 3 மாசம்ஒத்திகை. மாறி மாறி எல்லா கேரக்டரும் செய்வோம். அந்த அனுபவம் எல்லா கேரக்டர்லயும் நடிக்க உதவியா இருக்கு.
இப்ப மலையாளத்துலதான் அதிகமா நடிக்கிறீங்கன்னு சொல்றாங்களே?: தமிழ்லயும் நடிக்கிறேன். மலையாளத்துல ‘மின்னல் முரளி’க்குப் பிறகு அதிக வாய்ப்புகள் வருது. அதுல, ஷிபுங்கற நெகட்டிவ் கேரக்டர்ல நடிச்சேன். நல்ல வரவேற்புகிடைச்சது. இப்ப நாலஞ்சு படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். ‘நாலாம் முறா’ங்கற படத்துல பிஜூ மேனன் கூட நடிக்கிறேன்.
ஆஷா சரத் கூட காதல் கதையில, நாயகனா நடிக்கிறேன். நடுத்தர வயதுக்காரனுடைய காதல் அது. ஒவ்வொரு படத்துலயும் வித்தியாசமான கேரக்டர்கள். ஒரு நடிகனா எனக்கு வேற என்ன வேணும்?
மலையாளம் வாசிக்கக் கத்துக்கிட்டீங்களாமே?: ‘மின்னல் முரளி’க்கு முன்னால ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்துல என்னைதான் நடிக்கக் கேட்டாங்க. சுராஜ் வெஞ்சரமூடு நடிச்ச கேரக்டர்ல நான் நடிக்க வேண்டியது. கண்ணூர் வழக்கு பேசி நடிக்கணும். கதையை கேட்டதும், இதுல மொழி தெரிஞ்சாதான் நடிக்க முடியும்னு சொல்லிட்டு நடிக்கலை.
தமிழ்ல இந்தப் படம் ‘கூகுள் குட்டப்பா’ங்கற பெயர்ல ரீமேக் செய்யப்பட்டிருக்கு. பிறகு ‘மின்னல் முரளி’ வாய்ப்பு வந்தது. 6 மாசத்துக்கு முன்னாலயே கேரக்டர் பற்றி சொல்லிட்டாங்க. யூ-டியூப் மூலமாவும் புத்தகம் மூலமாவும் மலையாளம் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். தினமும் ஒரு மணி நேரம், குழந்தைங்க மாதிரி நோட்டு வச்சு எழுதி படிக்க ஆரம்பிச்சேன்.
ஷூட்டிங் போகும்போது, ஓரளவு பேசினேன். இப்ப வாசிக்கவும் கத்துக்கிட்டேன். சினிமாவுக்கு மொழி முக்கியமில்லைன்னு சொன்னாலும், நான் அது முக்கியம்னு நினைக்கிறேன். மலையாளத்துல இப்ப நானே டப்பிங் பேசறேன்.
மேடை நாடகத்துல இருந்து வந்ததால, நடிப்பு ஈஸின்னு சொல்லலாமா?: அப்படியில்லை. சினிமா வேறதான். இங்க கேமரா முன்னால நடிக்க வேண்டியிருக்கு. என் முதல் படம், ‘ஆரண்ய காண்டம்’ பண்ணும்போது இயக்குநர் தியாகராஜா குமாரராஜா நிறைய சொல்லிக் கொடுத்தார். இப்படி நிற்கணும், இங்க பார்க்கணும்னு நிறைய டேக் எடுப்பார்.
அதெல்லாம் அனுபவமா மாறியதால நடிப்புஈஸியா இருந்தது. அதே நேரம் திறமைக்கும் டேக் அதிகமாகப் போறதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு அங்கதான் புரிஞ்சுகிட்டேன்.
தெலுங்குல வில்லனா நடிக்கிறீங்களாமே?: அறிமுக இயக்குநர் இயக்கும் ஒரு படத்துல வில்லனா நடிக்கப் போறேன். தமிழ்ல பா.ரஞ்சித்தோட நீலம் புரொடக் ஷன் தயாரிப்புல ஹீரோவா நடிக்க இருக்கேன். அடுத்து இந்தி படங்கள்ல நடிக்க ஆடிஷன் போயிட்டிருக்கேன்.
இவ்வளவு அனுபவத்துக்கு பிறகும் ஆடிஷன் தேவையா?: அனுபவத்துக்கும் ஆடிஷனுக்கும் சம்பந்தம் இல்லை. இயக்குநர் நினைக்கிற கேரக்டருக்கு நாம சரியா இருப்போமோ, இல்லையாங்கறதை ஆடிஷன்லதான் பார்க்க முடியும்.
அதுமட்டுமில்லாம, இந்த கேரக்டர்ல சரியா பண்ண முடியுங்கற நம்பிக்கையை ஆடிஷன்தான் நமக்குமே கொடுக்கும். அதனால ஆடிஷன் போறதுல ஒரு தப்பும் இல்லை. விரைவில் இந்தியில நடிக்க இருக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT