Published : 03 Sep 2022 04:26 AM
Last Updated : 03 Sep 2022 04:26 AM
சென்னை: தமிழக அரசின் சார்பில், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நாளை மாலை நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நாளை (செப்.4) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று விருதுகள், பரிசுகளை வழங்குகின்றனர்.
இவ்விழாவில் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், 2-ம் பரிசு ரூ.1 லட்சம், 3-ம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படம் சிறப்பு பரிசு ரூ.75 ஆயிரம் என 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ.26.25 லட்சத்துக்கான காசோலை, சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
சின்னத்திரை
சின்னத்திரை விருதுகள் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை சிறந்தநெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், 2-ம் பரிசு ரூ.1 லட்சம், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தலாரூ.1 லட்சம் என ரூ.25 லட்சத்துக்கான காசோலையும், சிறந்த கதாநாயகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008-09-ம் கல்வியாண்டு முதல் 2013-14-ம் கல்வியாண்டு வரை பயின்றவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களின் மூலம் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், படம் பதனிடுபவர்கள் என 30 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை, ஒருபவுன் தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது.
மொத்தம் 314 பேருக்கு ரூ.52.75ஆயிரம் மதிப்புள்ள காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
விருதைப் பொறுத்தவரை, 2009-ம் ஆண்டில் சிறந்த படங்களுக்கான முதல் 3 பரிசை பசங்க, மாயாண்டி குடும்பத்தார், அச்சமுண்டு அச்சமுண்டு ஆகியவையும், சிறந்த நடிகராக கரணும், சிறந்த நடிகையாக பத்மப்பிரியாவும், சிறந்த இயக்குநராக வசந்தபாலனும் தேர்வாகியுள்ளனர். 2010-ம் ஆண்டில், மைனா, களவாணி, புத்ரன் ஆகிய படங்களும், சிறந்த நடிகராக விக்ரம், நடிகையாக அமலாபால், இயக்குநராக பிரபுசாலமனும் தேர்வாகியுள்ளனர்.
2011-ம் ஆண்டில் வாகைசூடவா, தெய்வத்திருமகள், உச்சிதனை முகர்ந்தால் ஆகிய படங்களும், சிறந்த நடிகராக விமல், நடிகையாக இனியா, நடிகருக்கான சிறப்பு பரிசுக்கு சிவகார்த்திகேயன், நடிகையாக அனுஷ்கா, இயக்குநராக ஏ.எல்.விஜய் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
2012-ம் ஆண்டில் வழக்கு எண் 18/9, சாட்டை, தோனி ஆகிய படங்களும், நடிகர் நடிகைகளாக ஜீவா,லட்சுமிமேனனும், சிறப்பு பரிசாக விக்ரம் பிரபு, சமந்தாவும், இயக்குநராக பாலாஜி சக்திவேலும் தேர்வாகியுள்ளனர்.
2013-ம் ஆண்டுக்கு ராமானுஜன், தங்கமீன்கள், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்கள், நடிகர்,நடிகையாக ஆர்யா, நயன்தாரா, சிறப்பு பரிசை விஜய் சேதுபதி மற்றும் நஸ்ரியா நசிம், இயக்குநராக ராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2014-ம் ஆண்டில் குற்றம் கடிதல், கோலிசோடா, நிமிர்ந்து நில் ஆகிய படங்களும், சிறந்த நடிகராக சித்தார்த், நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சிறந்த இயக்குநராக ராகவனும் தேர்வாகியுள்ளனர், இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT