Published : 31 Aug 2022 12:10 PM
Last Updated : 31 Aug 2022 12:10 PM
கணக்கு வாத்தியாரின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் இறுதியில் நிகழ்ந்த திருப்பங்கள் தான் 'கோப்ரா'. உலக நாடுகளில் இருக்கும் முக்கியமான தலைவர்களை மதி (விக்ரம்) என்கிற ஜீனியஸ் கணக்கு வாத்தியர் தன்னுடைய கணிதவியல் நுணுக்கங்களை பயன்படுத்தி கொலை செய்கிறார். அவர் யார்? எதற்காக இந்த கொலைகள்? பின்னால் இருக்கும் சதி என்ன? - இதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை திணறி வருகிறது.
இப்படியான சூழலில், திடீரென அவரைப் பற்றிய துப்புகளையும், தகவல்களையும் திரைமறைவிலிருக்கும் ஒருவர் காவல் துறைக்கு வெளிப்படையாக கொடுக்க ஆரம்பிக்கிறார். அந்த மர்ம நபர் யார்? அவருக்கும் மதிக்கும் என்ன தொடர்பு? - இப்படி பல முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடை சொல்லும் படம்தான் 'கோப்ரா'.
'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கிய அஜய்ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பலமே விக்ரம் தான். மொத்த படத்தையும் விக்ரமிடம் ஒப்படைத்திருக்கிறார் இயக்குநர். தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு தேவைக்கு அதிகமான உழைப்பை செலுத்தி நியாயம் சேர்த்திருக்கிறார். இரண்டாம் பாதியில் 'அந்நியன்' பட பாணியிலான அவரது நடிப்பு ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறது. (அவர் எல்லா படத்திற்கும் நியாயம் சேர்க்க உழைக்கிறார். ஆனால் படம் தான்..)
இன்டர்போல் அதிகாரியாக கிரிக்கெட்டர் இர்ஃபான் பதான். அறிமுக நடிகராக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்திப் போனாலும், மேலோட்டமான எழுத்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரது டப்பிங்கில் துருத்தல். ஸ்ரீநிதி ஷெட்டி வழக்கமாக காதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும் கதாபாத்திரம். அவர் படத்தில் இல்லை என்றாலும் கதைக்கு எந்த பாதிப்பும் நேர்ந்திருக்காது. இர்பான் பதானுக்கு பதிலாக மீனாட்சி கோவிந்தராஜனை இன்டர்போல் ஆஃபிஸராக நியமித்திருக்கலாம். அவர் வேலையும் சேர்த்து ஓவர் டைம் பார்த்து தேவைக்கு அதிகமான கதாபாத்திரமாக வருவதை உறுதி செய்கிறார். மிருனாளினி ரவி, ரோபோசங்கர், ஆனந்த்ராஜ், ரோஷன் மேத்யூ கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தின் முதல் பாதியை பொறுத்தவரை ஸ்காட்லாந்து இளரவசர், ரஷ்ய அமைச்சர் என நாடுகளையும் அதீத பாதுகாப்பையும் கடந்து அசலாட்டாக நடக்கும் கொலைகள், அதையொட்டி கொடுக்கப்படும் பில்டப்புகள், லாஜிக் என்றால் என்ன என கேட்கும் அந்தக் காட்சிகள் ஒட்டவேயில்லை. அதேபோல கணிதத்தை கொண்டு க்ளாஸ் எடுத்தது, தலைவர் ஒருவர் கொல்லப்படுவதற்கான டெக்னிக், திணிக்கப்பட்ட காதல் காட்சி என முதல் பாதியில் உள்ள பலவீனமான திரைக்கதையால் கோப்ராவால் சீறவேயில்லை. தவிர, முதல் பாதியில் உள்ள சில புதிர்கள், அதையொட்டி இடைவேளையில் வரும் திருப்பம் தான் இரண்டாம் பாதியை பார்க்க தூண்டுகிறது.
இரண்டாம் பாதியில் தொடகத்தில் வரும் சண்டைக்காட்சியை போதும் போதும் என சொல்லும் அளவிற்கு திகட்ட திகட்ட கொடுத்து டயர்டாக்கியிருக்கிறார்கள். அதையடுத்து புதிர்களுக்கான விடைகள் ஒவ்வொன்றாக சொல்லபடும்போது, சுவாரஸ்யம் தொற்றுவதற்கு பதிலாக குழப்பங்களும் நிறைய கேள்விகளுமே எழுகின்றன. மாறாக, கதை புரிந்துகொள்வது மேலும் சிரமத்தை ஏற்படுத்திவிடுகிறது. நீட்டி முழங்கி, நிறைய தேவையற்ற காட்சிகள், தேவைக்கு அதிகமான கதாபாத்திரங்கள், 2, 3 ஃப்ளாஷ்பேக்குகள், வில்லன் கதாபாத்திரத்தின் பின்புலத்தில் தெளிவின்மை என இரண்டாம் பாதியும் நிறையவே சோதிக்கிறது. சில சுவாரஸ்யமான காட்சிகள் இருந்தாலும் பல இடங்கள் சோர்வைத் தருகின்றன. குறிப்பாக படத்தின் நீளம் பெரும் துயரம்.
ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை கவர்ந்தாலும், பாடல்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை. ஒரு கதாபாத்திரம் விபத்துக்குள்ளாகி தலைகீழாக சுற்றும்போது அவருடைய பார்வைக் கோணத்திலிருந்து கேமராவும் சுற்றுகிறது, வெளிநாட்டின் பிரமாண்டம் என படத்தின் ரீச் லுக்குக்கு ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் கடுமையாக உழைத்திருக்கிறார். எடிட்டர்கள் பூவன் சீனிவாசன், ஜான் ஆப்ரஹாம் இருவரும் இணைந்து பேசியாவது படத்தில் தேவையில்லாத காட்சிகளை தூக்கியிருக்கலாம்.
மொத்தத்தில் கோப்ரா படமெடுத்து சீறிப் பாய்ந்து ஆச்சரியப்படுத்தாமல், சைலன்டாக ஊர்ந்து நெளிந்து வந்து கணித பாடத்தை அச்சமூட்டி எச்சரித்துள்ளது. ட்ரெய்லரின் இறுதியில் விக்ரம் கையெடுத்து கும்பிட்டிருப்பார். அதற்கான காரணத்தை படம் பார்த்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT