Published : 28 Aug 2022 12:19 PM
Last Updated : 28 Aug 2022 12:19 PM
பயிற்சி முடித்த உதவி ஆய்வாளரகளிடம், முடியாமல் இருக்கும் ஏதோ ஒரு கேஸை விசாரிக்க உத்தரவிடுகிறார், உயரதிகாரி. அதன்படி கண்ணை மூடிக்கொண்டு ஒரு ஃபைலை எடுக்கிறார் வரதன் (அருள்நிதி). அது, 16 வருடங்களுக்கு முன் உதகையில் நடந்த கொள்ளை, கொலை வழக்கு. விசாரிக்கச் சென்றால், பல திருப்பங்களைக் கொண்ட அமானுஷ்ய சம்பவங்களும் மர்மங்களும் நடக்கின்றன. அவர் அதைக் கண்டுப்பிடித்தாரா, இல்லையா? என்பதுதான் ‘டைரி’.
சூப்பர் நேச்சுரல் திரில்லர் கதை கொண்ட இந்தப் படத்தை, இன்னாசி பாண்டியன் இயக்கி இருக்கிறார். முதல்பாதி படம் சோதித்தாலும் இரண்டாம் பாதியில் அதற்கான விடைகளை அவிழ்க்கும்போது மிரள வைக்கிறது. நள்ளிர
வில் ஓடும் பேருந்து, அதில் வந்து சேரும் கேரக்டர்கள், அந்தப் பேருந்துக்கான பின்னணி என அனைத்தையும் பின் பகுதியில் இணைக்கும் திரைக்கதை முடிச்சுகள், பலம்.வழக்கமாக த்ரில்லர், திகில் படங்களில் வித்தியாசமான கதையைத் தேர்வு செய்யும் அருள்நிதி, இதிலும் அப்படியே.
சில படங்களில் அவர் போலீஸ் கேரக்டர்களில் நடித்திருந்தாலும் இதில் உதவிஆய்வாளராக கடமையை செய்கிறார். அவர் தோற்றம் அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறது. அறிமுக நடிகை பவித்ரா மாரிமுத்துவுக்கு பெரிதாக வேலை இல்லை. முதல் காட்சியில் மிரட்டிவிட்டு பிறகு அருள்நிதிக்கு உதவி செய்பவராகவும் காதலியாகவும் மாறிவிடுகிறார்.
போலீஸ் டிரைவர் சாம்ஸ், காதலியின் கல்யாணத்தை நிறுத்தும் அவசரத்தில் இருக்கும் ஷா ரா, ஊட்டி எம்.எல்.ஏ, ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞர் சதீஷ் கண்ணன், திருடன் தணிகை, போலீஸ் அதிகாரி அஜய் ரத்னம், கிஷோர் என படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள்.சில இடங்களில் காமெடி என்ற பெயரில் சாம்ஸ் பேசுவதும் ஷா ராவின் இரட்டை அர்த்த வசனங்களும் காட்சிகளுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
ரான் ஈத்தன் யோஹனின் பின்னணி இசை பல இடங்களில் பயமுறுத்துகிறது. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, உதகையின் இருட்டுச் சாலைகளில் பதைபதைப்பை உண்டாக்குகிறது. கலை இயக்குநர் ராஜூ, எடிட்டர் ராஜா சேதுபதியின் உழைப்பும் குறிப்பிடத்தக்கது. உதவி ஆய்வாளர் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கும் அதிகாரம் இருப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
பல ஆண்டுகளாக ஆற்றில் மூழ்கியிருக்கும் பேருந்து குறித்து உள்ளூர்க்காரர்கள் யாருக்குமே தெரியாமல் இருப்பதை ஏற்க முடியவில்லை. இதுபோன்ற தர்க்கப்பிழைகளைக் கவனித்திருந்தால், இந்த ‘டைரி’யின் பக்கங்கள் இன்னும் ரசனையாக மாறியிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT