Published : 27 Aug 2022 06:46 PM
Last Updated : 27 Aug 2022 06:46 PM

“அறத்தின் வழி வந்த படைப்பு” - ‘மாமனிதன்’ குறித்து தமிழச்சி தங்கபாண்டியன்

சீனு ராமசாமி இயக்கிய 'மாமனிதன்' திரைப்படம் அறத்தின் வழி வந்த படைப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமனிதன்'. காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்திருந்தார். தற்போது படம் ஆஹா ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. இந்தநிலையில் 'மாமனிதன்' படத்தை பாராட்டியுள்ள எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன், ''மாமனிதன் படத்தை ஆஹா ஓடிடியில் பார்த்தேன். அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்வே கதைக்களம்.

வழமையான சீனுராமசாமி படங்களைப்போலவே எதார்த்த பாணியில் கதை சொல்லல்தான். என்ன பெரிதாக அல்லது புதிதாக இதில் எனச் சற்று விட்டேத்தியாக நம்மை சாய்ந்து உட்கார வைக்கும் நிகழ்வுகளுடன் தான் படம் தொடங்குகிறது. ஆனால், சமகாலத்தில் வாழ்வில் தனக்கான ஒரு எளிய அறமுடன் வாழதுடிக்கும் - வாழ்ந்து முடிக்கும் ஒரு மனிதனின் கதையாக விரியும்போது ஈர்ப்பின் விம்மலுடன் சற்று நிமிர்கிறோம்.

சின்னச்சிறு கூட்டில் பேராசையின்றி அன்றாட வாழ்வை நகர்த்தும் ஒரு குடும்ப தலைவனின் அகலகால் முயற்சி அதளபாதாளமாவது சமயங்களில் அது ஒட்டுமொத்த குடும்பத் தற்கொலைகளில் முடிவது நமக்கு அசாதாரண செய்தியல்ல!

அப்புதை மணலை தனக்கு தெரிந்த அறமொன்றின் துடுப்பை பற்றியவாறு அம்மனிதன் கடந்து மாமனிதனாகும்போது வாழ்வின் மீதான நம்பிக்கையில் இருக்கையின் கைப்பிடியைப்பற்றியபடி எழுகிறோம். பிழைகளில் இடறிவிழுதல் இயல்பே அவை தவறுகளா எனத் தீர்மானிக்கும் தன்மை அவசியமெனவும், 'ஊழ்வினை அல்ல உன் மனமே வந்து உறுத்துமெனக் கடைசியில் கங்கைக்கரையில் முடிகிறது கதை.

வசனங்கள் தான் சீனுவின் பலம். விஜய் சேதுபதிக்கு அயிரை மீன்களைப் பாலில் எளிதாக கழுவுவதைப்போல கதைநாயகன் வேலை. மகனது அநியாயச் செயலுக்குப் பிராயச்சித்தமாகத் தன் கழுத்துச் சங்கிலியைக் கழட்டித் தந்தபடி உணவு பரிமாறும் அம்மாவின் கைகளின் நடுக்கமே சீனு ராமசாமியின் கதையின் ஆன்மாவை நமக்குக் கடத்துமிடம்!

வாழ்த்துகள் அன்பு சீனு - வணிகச் சமரசமற்று வாழ்வின்கீற்றுகளைத் தான் நம்பும் அறத்தின் வழியில் படைத்தமைக்கு!'' என தெரிவித்துள்ளார்.

அவருக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் சீனுராமசாமி, ''மாமனிதன் திரைப்படம் பார்த்து மடல் தந்த இலக்கிய மனுசி, அம்மாவுக்கு அன்பும் வணக்கமும்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x