Published : 26 Oct 2016 06:01 PM
Last Updated : 26 Oct 2016 06:01 PM

நடிகர்கள் சம்பள விவகாரம்: திரைப்படக் கூட்டமைப்புகள் புதிய வெளிப்படை திட்டம்!

நடிகர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக திரைப்படக் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்.

ஒரு படம் வெளியான அடுத்த சில நாட்களிலேயே இமாலய வெற்றி, பிரம்மாண்டமான வெற்றி என போஸ்டர்களை காண முடிகிறது. ஆனால், சில நாட்களில் தயாரிப்பாளர்களோ "எனக்கு இப்படத்தால் கஷ்டம்" என்று தகவல்களைக் கேட்க முடிகிறது. ஆனால், அப்படத்தில் நடித்த நடிகர்களோ, படம் வெற்றி என சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள். படம் தோல்வியடைந்தால் சம்பளத்தைக் குறைத்தார்களா என்றால் அதுவும் இல்லை.

சமீபத்தில் திரையரங்கு கட்டணத்தை உயர்த்தக் கோரிய மனுவை நிராகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த கோரிக்கையை மீண்டும் பரிசீலித்து ஒரு மாதத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இவ்விரண்டையும் முன்வைத்து திரைப்படக் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்கள். நடிகர்களின் சம்பள விவகாரத்தை கட்டுக்குள் கொண்டுவர மாதந்தோறும் வெளியாகும் படங்களின் லாபம் மற்றும் நஷ்ட சதவீதங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடலாம் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு யோசனை தெரிவித்துள்ளார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம். இதற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு உட்பட அனைத்து தயாரிப்பாளர்களுமே முழுமையான ஆதரவு தெரிவித்து, அடுத்த மாதத்தின் கூட்டத்திலேயே வெளியிடலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த முடிவின் பின்னணி குறித்து திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது, "தற்போது கிடைத்துள்ள நீதிமன்ற உத்தரவை முன்வைத்து, மாநகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விலை 150 ரூபாய் வரையும், மாநகராட்சி அல்லாத திரையரங்குகளுக்கு டிக்கெட் விலை 100 ரூபாய் வரை வாங்கிக் கொள்ள தமிழக அரசு அனுமதி கோரியுள்ளோம். தமிழக அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை வசூலிக்க நாங்கள் தயாராகயுள்ளோம். மேலும், திரையரங்குகள் முழுவதுமே கணினிமயமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

அவ்வாறு செய்துவிட்டால் தனது படம் வெளியாகும் போது திரையரங்கில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்பது தயாரிப்பாளருக்கு தெரிந்துவிடும். அந்த நடிகருக்கும் நம்முடைய முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது தெரிந்துவிடும். அனைவருமே நம்முடைய படம் பிரம்மாண்டமான முதல் நாள் வசூல் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்குமே நம்ம ரஜினி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். டிக்கெட் விலை மற்றும் கணினிமயமாக்கல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படைத்தன்மை வந்துவிடும்.

படம் வெளியான 2ம் நாளே அமோக வெற்றி, நிறைந்த கூட்டம் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். ஆனால் வாங்கிய விநியோகஸ்தர்கள் நமக்கு பணம் கைக்கு வருமா? என்று பயந்து கொண்டிருப்பார்கள். நாயகர்களும் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்கள். ஒவ்வொரு மாதமும் கூட்டமைப்பு கூட்டம் நடைபெறும் போது தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் உட்கார்ந்து அந்த மாதத்தின் படங்கள் எந்த சதவீதம் வெற்றி, எந்த சதவீதம் தோல்வி என்பதை வெளிப்படையாக சொல்லவிருக்கிறோம். கணினிமயமாகிவிட்டால் படத்தின் வசூல் என்ன என்பது வெளிப்படையாக தெரிந்துவிடும்.

லாபம் வந்தால் வரிக்கட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்றைக்கு 90% படங்கள் நஷ்டம் தான் கொடுக்கிறது. ஆகையால் வெள்ளை அறிக்கையாக வசூல் சதவீதத்தை வெளியிட்டாலே அனைவருக்கும் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிந்துவிடும். தமிழக அரசாங்கம் டிக்கெட் விலை நிர்ணயம் செய்து விட்டால், அடுத்த கட்டமாக வெள்ளை அறிக்கை வெளியிடும் பணியில் இறங்கிவிடுவோம். தமிழ் திரையுலகின் அனைத்து பிரிவுகளிலும் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்" என்று தெரிவித்தார்.

திரைப்பட கூட்டமைப்புகளின் இந்த முடிவால், இனி முன்னணி நடிகர்களின் படங்கள் வசூல் நிலவரம் என்பது வெளிப்படையாக அனைவருக்குமே தெரிய வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x