Published : 13 Oct 2016 10:20 AM
Last Updated : 13 Oct 2016 10:20 AM
‘போக்கிரி’, ‘வான்டட்’ படங் களோட ஹீரோ கேரக்டர் தெனாவெட்டாத்தான் இருக்கும். ஆனா, படம் ‘பாஸ்ட்.. பாஸ்ட்’னு பயங்கர வேகமா போகும். அந்தப் படங்களோட எடிட்டிங் பேட்டன்தான் அதற்குக் காரணம்.
‘வான்டட்’ படத்தோட எடிட்டர், ‘‘ரெண்டு கேமரா செட்டப், அப்புறம் ஷாட்ஸ் எல்லாம் நிறைய இருக்கு. நீங்க எடிட்டிங்குக்கு வந்தா ரொம்ப நல்லா இருக்கும்’’னு சொன்னார். நானும் போனேன். புது பேட்டன்ல எடிட் செய்தோம். சாதாரணமா ஒரு ரீல்ல நூறுலேர்ந்து நூத்தம்பது ஷாட்டுன்னா, ‘வான்டட்’படத்தில் நானூறுக்கும் மேல ஷாட்ஸ்கள் எடுத்திருந்தோம்.
எடிட்டிங் டேபிள்ல அதையெல்லாம் வெச்சு வேலை பார்த்தப்போ, முதல்ல எடிட்டருக்கு ஒண்ணுமே புரியலை. என்னோட உதவி இயக்குநரிடம் எல்லாம் பயங்கர பாஸ்ட்டா இருக்கு. ‘டப் டிப்… டப் டிப்’னு ஷாட்ஸ் எல்லாம் போகுது’ன்னு சொல்லியிருக்கார். ஆனா என் மேல இருந்த மரியாதை, நம்பிக்கை காரணமா, நான் சொன்ன மாதிரியே ஷாட்ஸ்களை எடிட் செஞ்சார். அதுக்கு பிறகு டம்மியா ஒரு மியூசிக் போட்டுப் பார்த்தோம். அப்போதான் அவருக்குப் புரிஞ்சுது. சந்தோஷமாயிட்டார். நான் மாஸ்டரா வேலை பார்க்கிறப்ப, என் னோட டான்ஸை விட என்னோட எடிட்டிங் சென்ஸ் இயக்குநர் ராம் கோபால்வர்மா சாருக்கு ரொம்பப் பிடிக்கும். மத்தவங் கள்ட்ட பேசுறப்ப, ‘‘பிரபுவோட டான் ஸைத்தான் நீங்க பார்க்கிறீங்க. ஆனா, அவர் டான்ஸ் பண்றப்பவே எங்கே எடிட் செய்யணும்னு பிளான் செய்தே எடுக்கிறார். ஒரு டைரக்டரா அந்த எடிட்டிங் சென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு!’’னு சொல்லி இருக்கார்.
ஒரு படத்தோட தலையெழுத்தே எடிட்டிங் டேபிள்ல மாறிடும். இந்திப் படங் களுக்குன்னே ஒரு எடிட்டிங் ஸ்டைல் இருக்கு. அந்த ஸ்டைல்லேர்ந்து வேறொரு வகையில எடிட்டிங் செஞ்சது தான் ‘வான்டட்’ படம். ஒரு நம்பிக்கை யோட செஞ்சதுனாலதான் ‘வான்டட்’ படத்துக்கு நல்ல பேர் கிடைச்சுது.
அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சாருக்கும் நான் எடுத்த அந்த முயற்சி பிடிச்சுப் போச்சு. ‘இப்படி வேணாம்; அப்படி வேணாம்’னு பெருசா எந்த ரியாக்ஷனும் அவர் செய்யலை. தயாரிப்பாளரோட மட்டுமில்லை; ரீரிக் கார்டிங் செய்ய மியூசிக் டைரக்டர் உட் கார்ந்தப்போ, ‘‘இப்படித்தான் வரப் போகுதா? ரொம்பப் புதுசா இருக்கே!’ன்னு அவரும் நம்பத் தொடங்கினார். இப்படி எடிட்டர், மியூசிக் டைரக்டர்னு எல்லோருக்கும் நம்பிக்கை வந்ததுனால படமும் சரியா வந்துச்சு. படத்தோட டிரெயிலர் ரிலீஸ் செய்த போது, ‘சல்மான் கான் இப்படி இருக் காரே’ன்னு பாலிவுட் முழுக்க பயங்கரப் பேச்சு. படம் ரிலீஸாச்சு. மும்பை சினிமா இன்டஸ்ட்ரீயையே மொத்தமா ‘வான்டட்’ திருப்பிப் போட்டுச்சுன்னே சொல்ல லாம். ‘100 கோடி கிளப்’ லிஸ்ட்ல வந்துடுச் சுன்னு ஹிட் ஆகிற ஒரு படத்தைப் பற்றிச் சொல்வாங்க. அந்த வார்த்தையே ‘வான்டட்’ படத்துலேர்ந்துதான் தொடங் குச்சுன்னு நினைக்கிறேன். இதுக்கு முழுக் காரணம் படத்தோட தயாரிப் பாளரும், ஹீரோவும்தான்.
அதற்குப் பிறகு ஒரு வருஷத்துக்கும் மேல நான் இந்தியில எந்தப் படமும் செய்யலை. அங்கே இருக்கிறவங் களுக்கு என்னை எப்படி ரீச் பண்ணணும் கிறது புரியாம இருந்துச்சுன்னுதான் நினைக்கிறேன். அந்த நேரத்தில் தமிழில் படம் செஞ்சிட்டிருந்தேன். அப்போதான் சஞ்சய் லீலா பன்சாலி சார் என்னைப் பார்க்க சென்னை வந்திருந்தார். அது தான் அவர் சென்னைக்குள் நுழைந்த முதல்முறைன்னும் சொன்னார். ‘‘நாம சேர்ந்து படம் பண்ணுவோம்!’னு சொன் னார். ‘லவ் தீம்தான் வேணும்’னு கேட் பார்னு பார்த்தா, ‘‘காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன்னு மாஸ் மசாலாவா இருக் கட்டும்!’னு சொன்னவர், தெலுங்கில் தான் பார்த்த ‘விக்ரமார்குடு’ படத்தைச் சொல்லி அதை செய்வோம்னு சொன் னார். உடனே நான் ஓ.கே சொன்னேன். அதுதான் ‘ரவுடி ரத்தோர்’.
படத்தோட வேலையில் முழு முச்சா இறங்கினோம். சரி, ஹீரோவுக்கு கதை சொல்லியாகணுமே! அக்ஷய்குமார் எங்கள்ட்ட கதை கேட்க காலையில 6 மணிக்கு வரச் சொன்னார். ‘மும்பை யில 6 மணிக்கு கதை கேட்குறாங் களா?’ன்னு எனக்கு சந்தேகம் வந்தது. படத்தோட நிர்வாகத் தயாரிப்பாளரிடம், ‘‘காலை 6 மணியா இல்ல ஈவ்னிங் 6 மணியா?’’ன்னு திரும்பவும் கேட்டேன். அவரும், ‘‘காலையில் 6 மணிதான் சார்!’ன்னு சொன்னார். அப்புறம்தான் தெரிஞ்சுது, அக்ஷய்குமார் சார் இரவு 9 மணிக்கு தூங்கப் போய் அதிகாலை நாலறை மணிக்கெல்லாம் எழுந்திரிக்கிற பழக்கம் உள்ளவர்னு.
கதை சொல்ல என்னுடன் ரைட்டர் சிராஜ் அகமதுவும் வந்திருந்தார். நாங்க போன அந்த நேரத்தில்கூட அக்ஷய் குமார் சார் வீட்டுல நிறைய பத்திரிகைக் காரர்கள் இருந்தாங்க. என்ன இந்த நேரத் துலன்னு பார்த்தா… அவரோட இன் னொரு படத்தோட புரமோஷன் பேட்டிக் குன்னு தெரிஞ்சுது. நாங்க போனதும், அங்கே இருந்த பத்திரிகைக்காரங்க எங்களோட படத்தைப் பற்றி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு கட்டத்துல அக்ஷய்குமார் சார், ‘‘இப்போ ரிலீஸாகப் போற படத்தைப் பற்றி மட்டும் பேசலாம்’’னு சொல்ற அளவுக்கு நிலைமை ஆயிடுச்சு.
பத்து நாட்கள் செட்யூல்னு முதல்ல படத்தை ஆரம்பிச்சோம். ஷூட்டிங் தொடங்கி 5 நாட்கள் வரைக்கும் என்கிட்ட அக்ஷய்குமார் சார் எதுவும் பேசவில்லை. எதுவா இருந்தாலும் ரைட்டர் சிராஜ் அகமது மூலம்தான் சொல்லி அனுப்புவார். ஷூட்டிங் ஆரம்பிச்சு ரெண்டாவதோ, மூணாவது நாளோன்னு நினைக்கிறேன், சிராஜ் அகமதுவை கூப்பிட்டு, ‘‘படத்தை நாளன்னிக்கே ரிலீஸ் பண்ணப் போறீங்களா?’’ன்னு கேட்டார். ‘‘எதுக்கு சார் இப்படி கேட்கிறீங்க?’ன்னு அவர் திரும்பி கேட்டிருக்கார். ‘‘நானே ஸ்பீடா இருப்பேன். இவர் எனக்கு மேல அதிரி புதிரி ஸ்பீடா இருக்காரே? என்ன எடுக்கிறார்னே தெரியலை!’ன்னு சொல்லியிருக்கார்.
அக்ஷய்குமார் சார் எப்போதும் என்னை ‘பிரபு சார்’னுதான் கூப்பிடுவார். நானும் அவரை ‘அக்ஷய் சார்’னுதான் கூப்பிடுவேன். ஒருமுறை என்கிட்ட ‘பிரபு சார், இந்த இடத்துல இப்படி பண்ணலாமே?’ன்னு கேட்டார். ‘‘இல்லை சார் அது வேண்டாம்’’னு சொன்னேன். இன்னொரு நாள் அதே மாதிரி வேறொரு ஸீன் செய்றப்ப, ‘‘எனக்கு இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது’’ என்றார். அப்பவும் நான் ‘‘இல்லை சார் அப்படி வேண்டாம்!’’னு சொன் னேன். முதல் 5 நாட்கள் ஷூட்டிங்ல படத்தோட அவர் முழுமையா ஒட்டவே இல்லை. அப்புறம் வழக்கம் போல 6-வது நாள் ஷூட்டிங் ஆரம்பிச்சோம். எப்பவுமே ஈவ்னிங் 6 மணிக்கு ஷூட்டிங்ல இருந்து வீட்டுக்குப் புறப்படுற அக்ஷய்குமார் சார், அன்றைக்கு இரவு 9.30 மணி வரைக்கும் இருந்தார். அது ஏன்?
‘ரவுடி ரத்தோர்’ பட விழாவில் சோனாக்ஸி சின்ஹா, அக்ஷய்குமார், பிரபுதேவா
- இன்னும் சொல்வேன்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT