Published : 05 Oct 2016 07:40 PM
Last Updated : 05 Oct 2016 07:40 PM

நான் வந்த வழியை மறக்கவே மாட்டேன்: சிவகார்த்திகேயன் சிறப்புப் பேட்டி

'நான் வந்த வழியை எப்போதுமே மறக்க கூடாது என நினைக்கிறேன்' என்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

"முழுநீள காமெடி படமாக இல்லாமல் இதற்குள் அழகான காதல், குழந்தைகளுக்கு என ஒரு இடம், ஆள் மாறாட்ட காமெடி, அனிருத்தின் பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அனைத்து தரப்புக்குமான படமாக வந்திருக்கிறது. இது இந்த சென்டருக்கான படம் என்று உங்களால் கூறவே முடியாது" என சிரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

தொடர்ச்சியாக ஏறும் படங்களின் வர்த்தகம், எதிர்பார்ப்பு என தீவிரம் காட்டும் சிவகார்த்திகேயன் சற்றே நிதானமாக அளித்த பேட்டி:

'ரெமோ'வுக்கான உங்களுடைய பங்களிப்பு...

எனக்கு 'ரெமோ' கதையை பாக்கியராஜ் கண்ணன் சொன்ன போது, கதை என்னை மிகவும் ஈர்த்தது. ஆனால், நான் மிகவும் பயந்தேன். நமது உழைப்பு என்பதெல்லாம் தாண்டி படம் சாதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். படத்துக்கு பெரிய மெனக்கெடல் இருந்தாலுமே சாதாரணமான காதல் கதை தான். காதலுக்காக ஒருவன் எந்த எல்லை வரைப் போவான் என்பது தான் இப்படத்தின் ஐடியாவாக இருந்தது.

முதலில் நர்ஸ் உடை போட்டுப் பார்த்த போது, எடை அதிகமாக இருந்தேன். அப்போது பவுன்சருக்கு நர்ஸ் உடை போட்ட மாதிரி இருந்தது. அப்புறமாக இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க நம்மை முதலில் மாற்ற வேண்டும் என முடிவு செய்து முதலில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினேன். உடம்பை குறைக்க வேண்டும் என முடிவு செய்து குறைத்தேன். பிறகு ஒரு விக் ஒன்றை வைத்து பார்த்தார்கள். பேய் மாதிரியே இருந்தது. இப்போது நீங்கள் பார்க்கும் நர்ஸ் லுக்கிற்கு முன்பாக ஒரு லுக் இருந்தது. அதை பார்த்தவுடன் தான் மன உறுதி வந்து படப்பிடிப்புக்கான பணிகளைத் தொடங்கினோம். அப்போது கூட பிள்ளையார் சுழி போட்டிருக்கிறோம், இனிமேல் வேலை ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை.

உங்களது தற்போதைய நிலையில், புது முயற்சிகள் அவசியம் என்று நினைக்கிறீர்களா?

நான் அப்படி பார்க்கவில்லை. இயக்குநர் சொன்ன கதை எனக்கு சரியாக இருந்தது. இயக்குநர் இதே கதையை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் சொல்லியிருந்தால் இச்சமயத்தில் இது நமக்கு தேவையா என யோசித்திருப்பேன். இந்த பெண் வேடம் என்பது இப்போது தான் பண்ணமுடியும். இதைவிட்டால் பின்பு வரும் காலங்களில் என்னால் செய்ய முடியாது.

காலகட்டமாக என்னை பிரித்துக் கொள்ளவில்லை. நம்மால் முழுக்காமெடி படம் தான் பண்ண முடியும் என்ற நம்பிக்கையில் தான் திரையுலகிற்குள் வந்தேன். இந்த மாதிரியான பரிசோதனை முயற்சிகள் தான் என்னை முழுமைப்படுத்தும் என நினைக்கிறேன். மோகன் ராஜா சார் படம் அடுத்து பண்றேன். வெவ்வேறு இயக்குநர்களின் படங்களில் நடித்து முழுமைப்படுத்தப்படுவேன் என நம்புகிறேன். 'ரெமோ' ஒரு ரிஸ்க்கான படம் என்பது மட்டும் தெரியும். படம் ஆரம்பிப்பதற்கு முன்பு சரியாக பண்ணிவிட வேண்டுமே என்ற பயம் தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

'ரெமோ' ஆரம்பிப்பதற்கு முன்பு சில மாதங்கள் இருந்த நேரத்தில் ஏன் படங்களில் நடிக்கவில்லை?

சும்மா இருந்த காலகட்டத்தில் சரியான கதை அமைந்தால் பண்ணலாம் என்று நினைத்தேன். ஆனால், சரியான கதை அமையவில்லை. அந்த காலகட்டத்தை மட்டுமே முழுமைச் செய்யும் படங்களாக அமைந்தது. அது எனக்கு பிடித்த படங்களாக அமையவில்லை. நேரத்துக்காக ஒரு படம் பண்ணுவது தவறு என நினைக்கிறேன். காசு சம்பாதிப்பதற்காக படம் பண்ணும் போது, நமது எண்ணம் மாறுவிடுமோ என்ற பயம் இருந்தது. 'ரெமோ'வுக்கு இந்த உழைப்பு தேவைப்பட்டது. ஒரு மணி நேரம் பெண் வேடத்தில் வருவதால் நிறைய உழைப்புகள் தேவைப்பட்டது. இப்படம் ஆரம்பிக்கும் போது தான் முன்பு 6 மாதங்கள் பணியாற்றி இருக்கிறோம் என தெரிந்தது. அதுவரை தெரியவில்லை.

ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோருக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தான் என்ற வியாபார சூழல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே?

ஒரு புறம் சந்தோஷம் என்றாலும் மறுபுறம் கண்டிப்பாக அழுத்தம் தான். ஏனென்றால் சென்னைக்கு வந்த புதிதில் என்னை நம்பி 2500 ரூபாய் பணம் கொடுக்க மாட்டார்கள். இன்றைக்கு என்னை நம்பி கோடிகளில் கொடுக்கிறார்கள் என்றால் பெரிய பொறுப்பு என் மீது இருக்கிறது.

ரஜினி சார், கமல் சார், அஜித் சார், விஜய் சாரோடு என்னை ஒப்பிட்டுக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அவர்களுடைய பயணம் மிகப்பெரியது. அவர்களுடைய இடத்தை நிரூபித்துவிட்டார்கள். தனிப்பட்ட வியாபாரம் என்று அவர்களுக்கு இருக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. ஒரு புதிய இயக்குநர் படம் பண்றேன் என்றால் அவருடைய வாழ்க்கை, பணம் போடும் தயாரிப்பாளரின் வாழ்க்கை என பல பேருடைய வாழ்க்கை அடங்கியிருக்கிறது. அந்த பொறுப்பையும் நானே எடுத்து தான் ஆகவேண்டும்.

எனது ஒவ்வொரு படமும் விநியோகஸ்தர்கள், திரையரங்குகள் தரப்பில் வளர்ந்து வருகிறது என உணர்கிறேன். ஒரு படத்தின் வெற்றி என்பது பணத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து படங்களும் 100% மக்களுக்கு பிடித்துவிடுவதில்லை. மக்களிடையே சதவீதம் மாறும் போது வெற்றியின் சதவீதம் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் தான் ஒரு நேரத்தில் ஒரு படம் பண்றேன். அந்த படத்தை சரியாக செய்து, விளம்பரப்படுத்தி அனைவருக்கும் லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரு படம் நடித்து எனக்கு மட்டும் பெயர் சம்பாதிக்க விரும்பவில்லை. அனைவருக்கும் போய் சேருகிறதா, அனைவரும் சந்தோஷப்படுகிறார்களா என்பதை பார்க்கிறேன்.

'காக்கி சட்டை' மற்றும் 'மான் கராத்தே' ஆகிய படங்கள் சுமாராக இருந்ததாக சொன்னார்கள். வியாபாரமாக தப்பு பண்ணாத ஒரே காரணத்தால் மட்டுமே 'ரஜினி முருகன்' அவ்வளவு பெரிய லாபம் வந்தது. அப்படத்துக்கு முன்பு நான் தப்பு பண்ணியிருந்தால் 'ரஜினி முருகன்' வெளியாகாமல் போயிருக்கும். ஒரு நிறுவனத்தையே காப்பாற்றி எடுத்து வரக்கூடிய சக்தி 'ரஜினிமுருகன்' படத்துக்கு இருக்கிறது என்றால் அதற்கு முன்பு நான் தவறு பண்ணவில்லை என்று அர்த்தம். சிறந்த படங்கள் பண்ணுகிறேனா என்பதை தாண்டி தவறான படங்கள் பண்ணிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

உங்களைச் சுற்றி வரும் சர்ச்சைகளுக்கு பதில் என்ன?

என்ன உண்மைத்தன்மை இருக்கிறது என்பதை பார்ப்பேன். வெளியே என்ன சொன்னாலும், நமது மனசாட்சிக்கு எது உண்மை என்பது தெரியும். எனது பக்கம் உண்மை இருந்தாலும், நான் பேசாமல் விட்டுவிடுவேன். முடிந்தளவுக்கு சர்ச்சைகளுக்குள் நான் போவதில்லை. பிரச்சினை என்னைத் தேடி வந்தாலும் நான் தவிர்த்துவிடுகிறேன். நான் ஆசையே படாத ஒரு வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்கிறது. இதில் நான் யாரிடமும் போய் சண்டையிட விரும்பவில்லை. லட்சக்கணக்கானோர் சந்தோஷப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கும் போது, அதை நோக்கி பயணிக்கவே விரும்புகிறேன்.

தொலைக்காட்சியில் வாய்ப்பு கேட்டு நின்று, பின்பு அங்கேயே முன்னணி தொகுப்பாளர், பின்பு நாயகனாக அறிமுகமாகி இன்று முன்னணி நாயகன் நிலை... இந்த வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனது நம்பிக்கையைத் தான் பார்க்கிறேன். எனக்கு முதலில் தெரியவில்லை. தொலைக்காட்சி வாய்ப்பு கிடைத்த போது, இந்த வாய்ப்பை நாம் விட்டு விடக்கூடாது என நினைத்தேன். கஷ்டப்பட்டு உழைத்தால் நல்ல நல்ல வாய்ப்புகள் வரும் என தெரிகிறது. நல்ல வாய்ப்புகளோடு முயற்சியும் சேர்ந்தால் வெற்றியும் கிடைக்கும் என நம்புகிறேன். அதையெல்லாம் தாண்டி மக்களுமே ஒருவன் கஷ்டப்பட்டு வரும் போது கை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆரம்பித்த காலத்தில் நாம் ஒரு சரியான நடிகராக இருக்க மாட்டோம். அப்படியிருக்கும் போது பரவாயில்லை பண்ணுப்பா என தட்டிக் கொடுக்கிறார்கள். நான் வந்த வழியை எப்போதுமே மறக்க கூடாது என நினைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x