Published : 23 Aug 2022 02:51 PM
Last Updated : 23 Aug 2022 02:51 PM
சென்னை: 'கிடுகு - சங்கிகளின் கூட்டம்' திரைப்படத்தை தடை செய்ய கோரி சென்னை காவல் ஆணையரிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை திரைப்படத் தயாரிப்பாளர் ராமலட்சுமி தயாரிப்பில் இயக்குநர் வீர முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் `கிடுகு - சங்கிகளின் கூட்டம்'. இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியானது. திரைப்பட முன்னோட்டக் காட்சிகளில் பெரியார் குறித்தும், திமுக அரசு குறித்தும் அவதூறாக சித்தரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் எனவும் இந்த திரைப்படத்தை தடை செய்யக் கோரி வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் புகார் அளித்தனர்.
பின்னர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி,செய்தியாளர்களிடம் கூறியது: '‘கிடுகு - சங்கிகளின் கூட்டம்’ என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளில் பல இடங்களில் திமுக அரசையும், தந்தை பெரியாரையும் அவதூறாக சித்தரித்து இயக்குநர் காட்சிப்படுத்தி உள்ளார்.
இந்த திரைப்படம் வெளியானால் தமிழகத்தில் சாதி, மத மோதல்கள் ஏற்பட்டு அமைதி சீர்குலையும். எனவே இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். மேலும், திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராமலட்சுமி மற்றும் இயக்குநர் வீர முருகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT