Published : 06 Oct 2016 10:24 AM
Last Updated : 06 Oct 2016 10:24 AM
இந்தியில் ‘ஆக்ஷன் ஜாக்சன்’ படத்தைத் தொடங்கினப்போ வேற எந்தத் தமிழ் படமோ, டான்ஸ் ஷோவோ, மற்ற படத்தோட கதை விவாதத்திலேயோ நான் உட்காரவில்லை. கிட்டத்தட்ட ஒண்ணே கால் வருஷம் இந்த ஒரு படத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தினேன். அதுக்கு முன்னால் நான் இயக்கிய ‘வான்டட்’, ‘ரவுடி ரத்தோர்’, ‘ஆர் ராஜ்குமார்’ படங்களோட எடிட்டிங் எல்லாம் அதிகபட்சம் 5 நாளில் இருந்து 7 நாட்கள்ல முடிச்சிருக்கேன். படமும் ஹிட். அதுவே ‘ஆக்ஷன் ஜாக்சன்’ பட எடிட்டிங்ல மட்டுமே ஒரு மாதம் உட்கார்ந்திருக்கேன். குறிப்பா கதையில மட்டுமே மூணு, நாலு மாதம் உட்கார்ந்திருப்போம். ஆனா, இந்தப் படம் நினைச்ச மாதிரி போகலை.
மற்ற எந்தப் படத்துக்கும் போடாத எஃபெக்ட் போட்டு வேலை பார்த்தோம். இப்படி ஆயிடுச்சேன்னு எனக்கும், என்னோட டீமுக்கும் ஒண்ணும் புரியாம இருந்துச்சு. கிட்டத்தட்ட அந்தப் படம் ரிலீஸாகி 2 மாதம் வரைக்கும் அதைப் பத்தித்தான் பேசிட்டே இருந்தோம். ஏன், சமீபத்தில்கூட பேசியிருக்கோம்.
படம் ரிலீஸாகி கொஞ்ச நாட்கள்ல அம்மா, அப்பாவை பார்க்க மைசூருக்குப் போனேன். அப்பா படம் பார்த்திருந்தார். ‘‘நீ இன்னும் நல்லா கான்சன்ட்ரேஷன் பண்ணியிருக்கணும்டா?’’ன்னு சொன்னார். என்னோட டீம்ல முக்கியமானவரிடம், ‘‘அப்பா இப்படி சொல்றார்!’’னு சொன்னேன். ‘‘நாலு படத்தோட வேலையை நைட் அண்ட் டே நாம செஞ்சோமே சார்’’னு அவர் கேட்டார். என்னதான் நாம் கஷ்டப்பட்டு உழைச்சிருந்தாலும் படம் ரீச் ஆகலையே. அதனால அப்பாகிட்ட எதுவும் நான் சொல்லிக்கலை. நாம் இன்னும் உழைக்கணும் போலன்னு நினைச்சுக்கிட்டேன்.
பெரிய அளவுல ரீச் ஆன, ‘ரவுடி ரத்தோர்’ படம் வந்த நேரத்தில் கூட என்னோட பர்சனல் லைஃப்ல சில விஷயங்கள் நடந்துச்சு. அது சம்பந்தமான வேலைகள்ல இருந்தேன். ‘ஆக்ஷன் ஜாக்சன்’ நேரத்தில் அப்படி எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. முழுக்க அந்த ஒரு படத்தைத் தவிர நான் வேற எதுலேயும் ஈடுபடலை. இப்படிப் பெருசா எந்த டென்ஷனும் இல்லாம எடுத்தப் படம்தான் அது. எல்லாமும் நம்ம கையில மட்டும் இல்லையே!
பெரும்பாலும் என்னை, ‘நீங்க மல்டி டாஸ்கி’ னு சொல்றாங்க. ஒரு வேலைன்னு இல்லாம மாறி மாறி எல்லா வேலையிலயும் கவனம் செலுத்துறதுதான் எனக்கு செட் ஆகுமோ, என்னவோ? அதை அது மாதிரிதான் நினைச்சுக்கிட்டேன்.
‘ஆர் ராஜ்குமார்’ பண்ணும்போதும் நிறைய விஷயம் புதுசா முயற்சி செய்தேன். அந்தப் படத்தோட ஹீரோ சாகித் கபூர், இந்தியில் அதுக்கு முன்னாடி ரொமாண்டிக் படத்தில் மட்டுமே நடித்தவர். முதல்முறையா ஆக்ஷன் படத்துக்குள்ளே வந்தார். இப்போ கூட நல்லா ஞாபகம் இருக்கு. படத்தில் இன்டர்வெல் பிளாக் முன்னாடி ஒரு சண்டை வரும். அந்த இடத்துல தியேட்டர்ல அப்படி ஒரு கிளாப்ஸ். ஒரு ரொமாண்டிக் ஹீரோ ஆக்ஷன் பிளாக்ல நடித்த அந்தக் காட்சி பெரிய அளவில் ரீச் ஆனது. பட ரிலீஸ் ஆன முதல் நாள் தியேட்டருக்குப் போய் பார்த்தேன். ஹீரோ அறிமுகமாகிற இடத்தில் யாரும் பெருசா ரீயாக்ட் பண்ணவே இல்லை. அதுவே நாலாவது நாளில் சாகித் கபூர் அறிமுகம் ஆகுறப்ப அப்படி ஒரு ஆரவாரம்! மனசுக்கு சந்தோஷமா இருந்துச்சு. அப்படி ஒரு படம்தான் ‘ஆர் ராஜ்குமார்’. அப்படிப்பட்ட அந்தப் படத்தோட திரைக் கதைதான் (Screen Play) ஆஸ்கர் லைப்ரரி வரைக்கும் போச்சு. அந்த லெட்டர்தான் இங்கே இடம்பெற்றிருக்கு.
ஆஸ்கர் லைப்ரரி அனுப்பிய கடிதம்
‘ஆர் ராஜ்குமார்’ ஷூட்டிங்ல ஷாகித் கபூர், ‘‘நீங்க சொல்லிக் கொடுப்பதை நான் ஆடும்போது வேற மாதிரி இருக்கு. அதையே நீங்க ஆடும்போது அது வேற மாதிரியா இருக்கு. குறிப்பா உங்க டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் திரையில பார்க்கிற மக்களிடம் நேரடியா கனெக்ட் ஆகுது. உங்களிடம் ஏதோ ஒண்ணு இருக்கு. கண்டிப்பா, இந்த மேஜிக்கை ஃபீல்டுல இருக்கிற யார்கிட்டேயாவது கனெக்ட் பண்ணிடுங்க சார்’’ன்னு சொல்வார். நான் எதையும் மறைச்சு வைக்கிறதெல்லாம் இல்லை. ரிகர்சல்ல இருக்கிறவங்க முன்னாலதான் கம்போஸ் பண்றேன். வெளிப்படையாத்தான் கற்றுக் கொடுக்கிறேன். அதை அப்படியே ஃபீல் செய்து எடுத்துக்கோங்கன்னும் சொல்றேன். அவ்வளவுதான். மற்றபடி நான் எப்பவுமே மனசு போகிற போக்குல பண்றவன். நல்லா அமையுறது கடவுளோட கிஃப்ட்!
‘‘லவ் ஸ்டோரியில நடிச்சிட்டிருக்கிற ஹீரோவை ஆக்ஷன் படமான ‘ஆர் ராஜ்குமார்’ படத்துக்குக் கொண்டு போறீங்களே, சரியா வருமா?’’ன்னு சில பேர் என்கிட்ட கேட்டாங்க. ஆனா, ஹீரோ மேல எனக்கு பெரிய நம்பிக்கை இருந்துச்சு. அதே மாதிரி எல்லாமும் சரியா அமைஞ்சுது. நம்பிக்கையோட இறங்கினா, எதுவுமே நடக்குங்கிறதுக்கு உதாரணமா அந்தப் படத்தை எடுத்துக்கிட்டேன். இது படத்துக்கு மட்டுமில்லை; வாழ்க்கையில் கூட நம்பிக்கை பெரிய அளவுக்கு பலமா இருக்கும். நான் உணர்ந்திருக்கேன். அது கண்டிப்பா ஜெயிக்க வைக்கும்!
இந்த நேரத்தில் இன்னொரு சுவையான விஷயம் ஞாபகத்துக்கு வருது. நினைவுல வரும்போதே அதையும் சொல்லிடுறேன். ‘வான்டட்’ படம் பண்ணும்போது என் உதவியாளரைக் கூப்பிட்டு, ‘‘இந்த ஸீன்ல சல்மான் கான் சார் அந்த மரத்துக்கிட்டே இருந்து இந்த கேமரா வரைக்கும் ஓடி வரணும்’’னு சொல்லி, சொல்லச் சொன்னேன். அவரும் அப்படியே போய் சொன்னார். அதுக்கு சல்மான் சார், ‘‘என்னது? அந்ந்ந்…த மரத்துக்கிட்டேர்ந்து கேமரா கிட்டேயா… ஓடி வரணுமா? கஷ்டம்பா’’ன்னு சொல்லியபடியே என்னிடம் வந்தார். அங்கே தூரத்தில் இருந்த அந்த ஒரே ஒரு மரத்தைக் காட்டி, ‘‘பிரபு, அந்ந்ந்..த மரத்துக்கிட்டேர்ரந்து இங்கே வரணுமா?’’ன்னு கேட்டார். நான் ‘அந்ந்ந்….த’ன்னு வார்த்தையை இழுக்காம, ‘‘இல்ல சார், அந்த மரத்திலேர்ந்து இங்கதான்’’னு ஷார்ட்டா சொன்னேன். ‘‘ஓ அப்படியா!’’ன்னு சொல்லிட்டு போய்ட்டார். எந்த விஷயமா இருந்தாலும் நாம சொல்றதுலதானே இருக்கு. சல்மான் கான் ஒரு ‘குட்டி ராஜா’. அவரோட ஷூட்டிங்னா ரொம்பவே ஜாலியா இருக்கும்.
‘வான்டட்’, ‘ரவுடி ராத்தோர்’ இப்படி படங்கள் பண்ணும்போது யாருமே எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்டது இல்லை. ‘என்ன எடுக்கிறேன்?’, ‘எதுக்கு எடுக்கிறேன்!’னுகூட அவங்களுக்குத் தெரியாது. அதுக்கு ஒரே காரணம் என் மேல இருந்த நம்பிக்கைதான். ஆனா, எடிட்டிங் டேபிளில் உட்காரும் போது மட்டும் எடிட்டர் நிறைய கேள்வி கேட்டார். அது ஏன் என்று வரும் வாரம் சொல்கிறேன்.
- இன்னும் சொல்வேன்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT