Published : 10 Aug 2022 05:38 PM
Last Updated : 10 Aug 2022 05:38 PM

‘கடாவர்’ படம் வெளியாகக் கூடாது என பலரும் மறைமுகமாக உழைத்தனர்: அமலா பால்

'கடாவர்' படத்திற்காக தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளுக்கு நடிகை அமலாபால் நேரடியாக சென்று பார்வையிட்டதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் வெளியாகக் கூடாது என பலரும் மறைமுகமாக உழைத்தாக நடிகை அமலா பால் கூறியுள்ளார்.

அமலாபால் தயாரித்து நடிக்கும் திரைப்படம் 'கடாவர்'. ஆகஸ்ட் 12-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இயக்குநர் எஸ்.அனூப் பணிக்கர் பேசுகையில், ''2016-ஆம் ஆண்டில் இந்த கதையினை கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையுடன் இணைந்து திரைக்கதை எழுதினேன். பல்வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து இந்தக் கதையை கூறியபோது ஒவ்வொருவரும் பல ஆலோசனைகளை வழங்கி, படத்தின் மைய நோக்கத்தை திசை திருப்பவே முயற்சித்தார்கள். இதனால் சோர்வு ஏற்பட்டது.

இந்த தருணத்தில் நண்பர் ஒருவர் மூலமாக அமலா பாலை சந்தித்தோம். அவரிடம் கதையைக் கூறியதும், 'பிடித்திருக்கிறது. நடிக்கிறேன்' என்றார். அதன் பிறகு தயாரிப்பாளரை தேடினோம். அமலா பால் நாயகி என்றதும் அவர்களின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில் இந்த படைப்பை நானே தயாரிக்கிறேன் என அமல பால் நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் முதல் இந்த தருணம் வரை அவர் எனக்கு கடவுளாகவே காட்சித் தருகிறார்.

2018-ஆம் ஆண்டில் இதற்கான பணிகளை தொடங்கினோம். இடையில் கரோனா பாதிப்பு காரணமாக படத்தின் பணிகள் மிக மெதுவாக நடைபெற்றது. இருப்பினும் படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். படத்தை வெளியிட நினைத்த போது, தவிர்க்க இயலாத பல தர்ம சங்கடங்களை எதிர்கொண்டோம். பிறகு ஒரு வழியாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார், எங்களது 'கடாவர்' திரைப்படத்தினை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டு, எங்களது கனவை நனவாக்கியத்து.

இந்த கதாபாத்திரத்திற்காக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் இடம்பெற்றிருக்கும் பிணவறைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார் நடிகை அமலா பால். அவரது கதாபாத்திரம் திரையில் நேர்த்தியாக தோன்றுவதற்கு, அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியும் ஒரு காரணம்'' என்றார்.

'கடாவர்' படத்திற்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளை பேசுகையில், ''நான் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றினாலும், என்னுடைய கனவு சினிமா தான். 2010-களில் என்னுடைய சகோதரர் இறந்தார். அவரது உடல், உடற்கூறாய்வு செய்வதற்காக பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று பார்வையிட்ட போதுதான் இப்படத்திற்கான கதை கரு உருவானது. அதன் பிறகு இயக்குநர் அனூப் எஸ் பணிக்கருடன் இணைந்து ஓராண்டு திரைக்கதையை எழுதினோம். பிறகு இந்த கதையை அமலா பால் தயாரிக்க விருப்பம் தெரிவித்த போது, எங்களுக்கு இருந்த கவலை அகன்றது. அவர் இந்த திரைப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கியுள்ளார்'' என்றார்.

நடிகை அமலா பால் பேசுகையில், ''கரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களையும் பார்வையாளர்களையும் நேரில் காணும் போது உற்சாகம் பிறக்கிறது. அபிலாஷ் பிள்ளை பிள்ளையும், இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கரும் என்னை சந்தித்து 'கடாவர்' படத்தின் கதையை கூறியதும், என்னுடைய கதாபாத்திரம் புதுமையானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதை கண்டு, தயாரிப்பாளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன். நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டபோது பல வடிவங்களில் தடைகள் உருவானது. இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x