Published : 26 Jul 2022 01:28 PM
Last Updated : 26 Jul 2022 01:28 PM
வெவ்வேறு காலக்கட்டத்தில் நிகழும் இரு வேறு நிகழ்வுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும்போது, அதற்கான தீர்ப்பு எப்படி அமைகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
18-ம் நூற்றாண்டில் வாழும் மன்னர் ஒருவருக்கு தீராத விக்கல் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. தண்ணீர் குடித்தும், மதுபானம் அருந்தியும் இன்னும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் விக்கல் நின்றபாடில்லை. அப்படியே கட் செய்தால், சாமியரான நிவின் பாலி மீது சிலை திருட்டு புகார் வைக்கப்படுகிறது.
வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் இந்த இரண்டு விவகாரங்களும் நீதிமன்ற படியேற, அங்கு என்ன நடக்கிறது? மன்னரின் விக்கலுக்கு தீர்வு கிடைத்ததா, இல்லையா? நிவின் பாலி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? - இதை ஃபான்டஸி பாணியில் சொல்லும் படம்தான் 'மஹாவீர்யர்'.
எம்.முகுந்தன் கதையை, இயக்கியிருக்கிறார் அப்ரிட் ஷைன். ஒரு ஜாலியான ஃபான்டஸி சினிமா என சுருக்கிவிட முடியாத வகையில் பல நுட்பமான விஷயங்களை பேசியிருக்கிறார்.
சாமானிய திரை ரசிகர்களுக்கு எளிதில் அகப்படாத திரைக்கதையை எழுதியிருக்கிறார். அதேசமயம், ரசிக்கவும், சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். 18-ம் நூற்றாண்டில் நிலவும் ஒரு பிரச்சினையை நிகழ்கால சட்ட அமைப்புடன் இணைத்து காட்டியிருந்த விதம் கவனம் பெறுகிறது.
இன்றும் கூட ராஜாக்கள் வந்தால், அவர்களுக்குதான் நீதிபதிகள் முதன்மையான மரியாதை வழங்குவார்கள் என்பதையும், நீதித்துறையில் உள்ள சிக்கல்களை பகடியாகவும், சில இடங்களில் சீரியஸாகவும் படம் பேசுகிறது.
தீர்ப்புகள் வழங்கப்படும் விதத்தை படம் அழுத்தமாக சாடுகிறது. நீதிபதி, மன்னருக்கு கட்டுபடும் காட்சியில், மன்னர் என்பது ஆட்சியாளராகவும், நீதிபதி அவருக்கு கட்டுப்பட்டவராக இருப்பதையும் நுணுக்கமான காட்சிகளால் விவரிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், பெண்களை உடைமைகளாக பயன்படுத்தும் போக்கும் படத்தில் நிலவுவதைக் காண முடிகிறது. முதல் பாதியில் பொறுமையாக நகரும் திரைக்கதை சற்று அயற்சி.
ஒருவித மர்மத்துடனேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. சாமியராக குறைந்த ஸ்கிரீன் ஸ்பேஸுடன் நடித்திருக்கிறார். ஆசிஃப் அலியும் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. போர் வீரனைப்போல உடைகளை அணிந்துகொண்டு நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டுகிறார். இருவரைத் தாண்டி, லாலையும், சித்திக்கையும் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.
எல்லாருமே தேர்ந்த நடிகர்கள் என்பதால் நடிப்பு படத்திற்கு பெரும் பலம். விக்கலுடன் லாலின் நடிப்பும், சர்காஸ்டிக் மற்றும் சீரியஸாக சித்திக்கின் நடிப்பும் கவனம் பெறுகிறது. இறுதியில் ட்விஸ்ட்டை உடைத்த விதம் பார்வையாளர்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையிலேயே இருந்தது. அதுவரை, வேறொரு எண்ணத்திலிருக்கும் பார்வையாளர்களை படத்தின் ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது. இருப்பினும், இந்த நுணுக்கமான, குழப்பமான திரைக்கதை அமைப்பு எல்லாருக்கும் புரியுமா என்பது கேள்விக்குறியே.
தவிர ஆடை, ஆணிகலன்கள், செட் டிசைன், இடங்கள், இசை அரசர் கால சினிமாவுக்கான உணர்வை கொடுக்கிறது. இஷான் சாப்ராவின் பின்னணி இசை 18-ம் நூற்றாண்டுக்கும், நிகழ் காலத்துக்கும் மாற்றி மாற்றி காலத்துக்கு தகுந்தாற்போல அமைத்த விதம் படத்திற்கு பலம். அனீஸ் நாடோடின் கலை இயக்கம் படத்தின் அச்சாணி. செல்வராஜ் சந்துரு ஒளிப்பதிவு காவிய காட்சியனுபவத்தை கொடுக்க உதவியது.
மொத்தத்தில் புதுமையான கதை சொல்லி முறை ஈர்த்தாலும், அது எளிமையான திரை ரசிகனை முழுமையாக சென்றடையுமா என்பது சந்தேகம் தான். வித்தியாசமான திரையனுபவத்திற்காக 'மஹாவீர்யர்' படத்தை திரையரங்கில் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT