Published : 22 Jul 2022 07:16 PM
Last Updated : 22 Jul 2022 07:16 PM
சென்னை: 'மண்டேலா' திரைப்படத்தை எழுதி, இயக்கி இருந்த அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதைப் பிரிவில் வசனத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்தப் படத்தை இயக்கி கவனம் ஈர்த்திருந்தார் அவர்.
கடந்த 2021 ஏப்ரலில் வெளியாகி இருந்தது மண்டேலா. நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இது. பஞ்சாயத்து தேர்தலை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி இருந்தது. நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்திலும் வெளியாகி இருந்து. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரியாக்ஷனை பெற்றிருந்தது.
ரசிகர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்திருந்தது. சிறந்த வெளிநாட்டு படமாக அகாடமி விருதுகளுக்கு ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட 14 படங்களில் இதுவும் ஒன்று. வாசிக்க>> கடைசீல பிரியாணி முதல் கடைசி விவசாயி வரை | தமிழில் கவனிக்கத்தக்க சமீபத்திய படைப்புகள் - ஒரு பார்வை
இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கதை என்ன? - எதிரும் புதிருமாக வாழும் இரண்டு கிராமங்கள். அவர்களுக்கான ஒற்றைப் பஞ்சாயத்துத் தலைவரைத் தேர்வு செய்ய உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இருதரப்பிலும் தலா ஒரு வேட்பாளர். தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரேயொரு ஓட்டுக்குச் சொந்தக்காரரான இளிச்சவாயன் என்கிற ‘சாமானிய’னை, இரு ஊர்களும் வி.ஐ.பியாக மாற்றுகின்றன.
இதை, அசலான அரசியல் பகடியின் துணைகொண்டு, ‘ஓட்டுக்குத் துட்டு’ அரசியலை வெட்ட வெளிச்சமாக்கிய படம். இரு கிராமங்களைச் சித்தரித்தாலும் இன்றைய கட்சி அரசியலில் புரையோடிக் கிடக்கும் சாதி, பணநாயகம், வாக்கின் மதிப்பை மறந்த குடிமக்கள் ஆகிய கள யதார்த்தங்களைக் குறியீடாக்கி பகடி செய்து, அரசியல் நையாண்டி படம் என்கிற வகைமைக்கு செழுமை சேர்ந்துவிட்டது.
“நீ ஜெயிச்சா என்ன செய்வ?”, “நான் பதவிக்கு வந்தா ஊர் மக்கள் எல்லார் அக்கவுன்டுலையும் 12 ஆயிரம் பணம் போடுவேன்”, “ஓட்டு மட்டும் இல்லன்னா உன்ன அறுத்துப் போட்ருவோம்” என யதார்த்த வசனங்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த படைப்புக்காக தான் இப்போது மடோன் அஸ்வின் சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
தற்போது அவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்தை இயக்குகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT