Published : 19 Jul 2022 09:31 AM
Last Updated : 19 Jul 2022 09:31 AM
இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி நடந்துவந்த வெளியீட்டுப் பணிகளில் மணிரத்னம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளே இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்னூட்டங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
செப்., 30ல் ரிலீஸ்: கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. வரலாற்று நாவலை தழுவி உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.
எங்களுக்காக எம்ஜிஆர் விட்டுச் சென்றுள்ளார்: முன்னதாக படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசிய மணிரத்னம், "எனது முதல் நன்றி கல்கிக்கு. நான் கல்லூரி செல்ல ஆரம்பித்த போது பொன்னியின் செல்வனைப் படித்தேன். அன்றிலிருந்து அது என் மனதை விட்டு போகவில்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தப்படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்திருக்கவேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் பொன்னியின் செல்வன் படம் நடிப்பதாக இருந்தது.
ஏதோ ஒரு காரணத்தால் அந்தப்படம் நின்றுவிட்டது. இன்றுதான் எனக்கு அந்தப் படம் ஏன் நின்றது எனப் புரிந்தது. எங்களுக்காக எம்ஜிஆர் இந்தப் படத்தை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT