Published : 17 Jul 2022 11:11 AM
Last Updated : 17 Jul 2022 11:11 AM
ஒரு சிறுமி, அவள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கூட்டுப் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாகிறாள். குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் ஒருவர் என்ற அடிப்படையில், அங்கு காவலாளியாக பணியில் இருந்த முதியவர் பிரம்மானந்தம் (ஆர்.எஸ்.சிவாஜி) கைதாகிறார். அப்பா ஒரு பாலியல் குற்றவாளியாக இருக்க முடியாது என்று நம்பும் அவரது மகள் கார்கி (சாய் பல்லவி), தன் தந்தையை காப்பாற்ற, சமூகத்துடனும், சட்டத்துடனும் நடத்தும் போராட்டமும், அதன் முடிவும்தான் கதை.
ஒருவர் குற்றவாளியா, இல்லையா என்பதை தீர்மானிப்பதில், அவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பும், பாசமும், உறவின் முக்கியத்துவமும் தாக்கம் செலுத்தக் கூடாது என்பதை பொட்டில் அறைந்து சொல்கிறது படம். உரிமைகள் படிப்படியாக கிடைத்தாலும், பெண்கள் எப்படிப்பட்ட போராட்டத்துக்கும் தயாராக வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. ஆண் குழந்தைகளை மிகுந்த ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டியதன் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத்துகிறது.
படத்தின் இறுதியில் நிகழும் திருப்பம்கதாபாத்திரங்களை மட்டுமின்றி, பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் உறையவைக்கிறது சாய் பல்லவியின் நடிப்பு பயணத்தில் இப்படம் மற்றொரு மகுடம்.ஒவ்வொரு காட்சியிலும் கார்கியாகவே தெரிகிறார். அவருக்கு உதவும் வழக்கறிஞராக காளி வெங்கட், சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையாக வரும் சரவணன், குற்றம்சாட்டப்பட்ட முதியவராக ஆர்.எஸ்.சிவாஜி, காவல் துறை விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் இளைஞர், திருநங்கை நீதிபதியாக நடித்துள்ள திருநங்கை சுதா என பலரும் கதாபாத்திரங்களாக உணர வைக்கும் நடிப்பை தருகின்றனர்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்படும் காட்சிகளில் ஊடகங்களின் பரபரப்பும், ஆர்வமும், மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பும் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அற்புதமாக கடத்துகிறது ஸ்ராயந்தி பிரேமகிருஷ்ண அக்கட்டுவின் ஒளிப்பதிவு.
கொடூர பாலியல் குற்றங்களுக்கு உடனடி நீதியை எதிர்பார்க்கிறது நம் பொது சமூகத்தின் கூட்டு மனநிலை. இந்தஉணர்ச்சிப் பெருக்கை தங்கள் செய்திப்பசிக்கு பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் பல காட்சி ஊடகங்களின் அணுகுமுறை, தங்களது பொறுப்பு, செய்தி தரும்முறைமை ஆகியவற்றில் அவர்கள் கடைபிடிக்கும் அறமற்ற தன்மை போன்றவற்றை சமூக விமர்சனமாக பதிவு செய்கிறது கவுதம் ராமச்சந்திரனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம். அதையெல்லாம் தாண்டி, ஆண்களின் உலகத்துக்கு ‘கார்கி’ விடுக்கும் செய்தியும், அவர்களிடம் கோரும் மனமாற்றமும்தான் இப்படத்தை பெரும் படைப்பாகவும், பாடமாகவும் ஆக்குகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT