Published : 17 Jul 2022 11:18 AM
Last Updated : 17 Jul 2022 11:18 AM
கற்கிமுகி (பிரபுதேவா) ஓர் ஆண் பூதம். அதன் மகன் கிங்கினி, ஒரு முனிவரின் தவத்தை விளையாட்டாக கலைக்கப்போய், அவரது சாபத்தை பெறுகிறான். மகனுக்கு பதிலாக அந்த சாபத்தைகற்கிமுகி ஏற்றுக்கொண்டு, சிலையாக மாறி பூமியில் வந்து விழுந்து கிடக்கிறது. அதை தொட்டு துடைப்பவர்கள் மூலம் சாப விமோசனம் அடைந்து மீண்டும் உயிர்பெறலாம். கற்கிமுகி சிலையை எதிர்பாராதவிதமாக தொட்டு விமோசனம் அளிக்கிறான் பள்ளிச் சிறுவனான திருநாவுக்கரசு (‘சூப்பர் டீலக்ஸ்’ படப் புகழ் அஷ்வந்த்).
ஆனால், உயிர் கொடுத்தவர்கள் ஒரு மந்திரத்தை 48 நாட்களுக்குள் சொன்னால் மட்டுமே கற்கிமுகி மீண்டும் பூத உலகத்துக்கு திரும்பி மகனுடன் சேர முடியும். சிறுவன் திருநாவுக்கரசுவுக்கோ திக்கிப் பேசும் பிரச்சினை. அவனால் அந்தமந்திரத்தை சரியாக உச்சரித்து பூதத்துக்குஉதவ முடிந்ததா என்பது மீதி கதை.
ஃபேன்டசி பூதம் கதாபாத்திரத்தில் நச்சென்று பொருந்தி நடித்திருக்கிறார் பிரபுதேவா. அவரது கற்கிமுகி பூதத் தோற்றம் பழமை - நவீனம் இரண்டின் கலவையாக கவர்கிறது. சிறுவர் உலகத்துக்கு ஏற்ற அப்பாவித்தனமான உடல்மொழி மற்றும் வசன நகைச்சுவை, அவர்களுக்கு பிடித்தமான மாயங்களை புரிவது என அவரது கதாபாத்திர வடிவமைப்பு குழந்தைகள், பெரியவர்களை ஈர்க்கின்றன.
பூதம் - சிறுவன் இடையே உருவாகும் தோழமையும், அதன்வழி உருவாகும் சென்டிமென்ட் காட்சிகளும்தான் படத்தின்ஈர்ப்பான அம்சம். சிறுவன் அஷ்வந்தின் உணர்வுப்பூர்வ நடிப்பு பல காட்சிகளில் பிரபுதேவாவையே மிஞ்சிவிடுகிறது. குறிப்பாக, திக்கிப் பேசுவதால் எதிர்கொள்ளும் கேலிகள், அதனால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றை மிக நேர்த்தியாக தனது நடிப்பில் கொண்டுவந்து அசத்துகிறான் அஷ்வந்த். சிறுவனின் அம்மாவாக வரும் ரம்யா நம்பீசன், கொடுத்த வேலையை குறை வைக்காமல் செய்கிறார்.
படத்தில் நிறைந்திருக்கும் ஃபேன்டசி காட்சிகளின் கற்பனை, ‘ஓகே’ ரகம். அவற்றுக்கு கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸில் முழுமையான தரத்தை எட்டியிருந்தால், படம் இன்னும் ஒருபடி மேலே சென்றிருக்கும். பிரபுதேவா நடனமும், டி.இமான் இசையும் இந்த குறையை ஈடுகட்டிவிடுகின்றன. குறிப்பாக ‘மாஸ்டர் ஓ மை மாஸ்டர்’ பாடல், குழந்தைகளை மொத்தமாக வசீகரம் செய்யும் மாயத்தை நிகழ்த்துகிறது.
திக்கிப் பேசுவது உடல் குறைபாடு அல்ல. அது மனம் சார்ந்த பிரச்சினை. அதற்கு மருத்துவ சிகிச்சையைவிட, பிரச்சினை உள்ளவர்கள் சொல்ல வருவதை காதுகொடுத்துக் கேட்டு, மனக்குறையை போக்கி, அவர்களது தன்னம்பிக்கையை மீட்டெடுத்தாலே அதில் இருந்து எளிதாக வெளியே வரலாம் என்கிற உயர்ந்த செய்தியை, ஃபேன்டசி கதை வழியே கொண்டாட்டமாக சொன்ன விதத்துக்காக இப்படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT