Published : 15 Jul 2022 09:24 PM
Last Updated : 15 Jul 2022 09:24 PM
சென்னை: செஸ் ஒலிம்பியாட் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடல் படப்பிடிப்பு கடந்த 7-ம் தேதி இந்த சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது. இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த டீசரை நடிகர் ரஜினிகாந்த் இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், டீசரை வெளியிட்டதோடு, ''கரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும். 44-வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை. அதனை எதிர்வரும் 28-ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். போட்டி குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வீடியோ தயாரித்துள்ளனர். அதன் டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி'' என தெரிவித்துள்ளார்.
#ChessChennai2022 pic.twitter.com/tiZeCN0a5v
— Rajinikanth (@rajinikanth) July 15, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT