Last Updated : 15 Jul, 2022 08:23 PM

1  

Published : 15 Jul 2022 08:23 PM
Last Updated : 15 Jul 2022 08:23 PM

முதல் பார்வை | கார்கி - சாய் பல்லவியின் அட்டகாச நடிப்பில் ஓர் அழுத்தமான ஆக்கம்!

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, அது தொடர்பான வழக்கு, பின்புலத்தை மையமாகக் கொண்டு அழுத்தமான திரைக்கதையால் தாக்கம் தரும் படைப்பு தான் 'கார்கி'.

பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் கார்கி (சாய்பல்லவி). அவரது அப்பா பிரம்மானந்தா (ஆர்.எஸ்.சிவாஜி), அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட, அதில் பிரம்மானந்தாவின் பெயரும் சேர்க்கப்படுகிறது.

தனது தந்தை குற்றவாளியில்லை என கூறி சட்டப் போராட்டத்தில் இறங்கும் மகள் கார்கி இறுதியில் வென்றாளா? உண்மையான குற்றவாளி யார் என்பதை சமரசமின்றி வலுவான திரைக்கையுடன் சொல்லும் படைப்புதான் 'கார்கி'.

சந்தேகமேயில்லாமல் சமகால சினிமாவின் மிகச் சிறந்த நடிகருக்கான இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார் சாய் பல்லவி. மென்சோகத்தை சுமந்தபடி, திக்குத்தெரியாத காட்டில் சிக்கித்தவிக்கும் மானைப்போல, தந்தையை மீட்க திசையறிமால் ஓடுகிறார். அவரைவிட அந்தக் கதாபாத்திரத்தை யாரும் சிறப்பாக செய்துவிட முடியாது என சவால் விடும் அளவிற்கு நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்.

அடுத்தாக காளிவெங்கட்டை குறிப்பிட்டாகவேண்டும். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு இந்தப் படத்தின் மூலமாக ஓர் அழுத்தமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. டைமிங்கில் கவுன்ட்டர் டையலாக் கொடுப்பது, பயத்துடன் வாதாடுவது, திக்கிப் பேசுவது, சாய் பல்லவியின் திட்டுகளை அப்பாவியான முகபாவனைகள் மூலம் சமாளிப்பது என நடிப்பில் நயம் சேர்க்கிறார். தவிர, ஜெயப்பிரகாஷ், சரவணன், ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, கவிதாலயா கிருஷ்ணன், லிவிங்க்ஸ்டன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ஏனோ தானோ என எழுதப்படாமல் தேவைக்கேற்ப எழுதப்பட்டுள்ளதால் அதையொட்டிய அவர்களின் நடிப்பும் கவனம் பெறுகிறது.

ஹரிஹரன் ராஜூவுடன் இணைந்து எழுதியும், படத்தை தனியாக இயக்கியும் இருக்கிறார் கௌதம் ராமசந்திரன். படம் தொடங்கியதிலிருந்து எந்த சமரசத்துக்குள்ளும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல் நேரடியாக கதைக்குள் நுழையும் போக்கே படத்தின் சூட்டை பார்வையாளர்களுக்கு பரிமாறிவிடுகிறது. மகளாக சாய் பல்லவியின் போராட்டம் தொடங்கியதிலிருந்து கண்களை திரையிலிருந்து விலக்க முடியாத படி பார்த்துக் கொள்கிறது திரைக்கதை. காதல் இருக்கிறது என்றபோதிலும், அது வந்து போகிறதே தவிர, அதற்காக காதல் பாடல்களை வைத்தோ, ஓவர் டோஸ் கொடுத்த பார்ப்பவர்களை சோதிக்காத வகையில் இயக்குநருக்கு நன்றிகள். படம் நிறைய விஷயங்களை பேச முயற்சிக்கிறது.

குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கப்படதாதற்கு முன்பாகவே ஒருவர் பொதுசமூகத்தால் குற்றவாளிக்குண்டில் நிறுப்படுகிறார். அப்படி பொது சமூகம் தீர்மானிக்கும் ஒருவரின் குடும்பம் எப்படியெல்லாம் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படும் என்பதை அண்மையில் வெளியான மாதவனின் 'ராக்கெட்ரி நம்பி விளைவு' படத்தில் பார்த்தோம். அதேபோன்றதொரு குடும்பத்தின் பாதிப்பை இந்தப் படமும் உணர்த்துகிறது. இதுபோல பொது சமூகத்தால் ஒருவர் குற்றவாளியாக்கப்பட முக்கிய மூல காரணமாக ஊடகங்கள் இருப்பதை படம் தோலுரிக்கிறது. 'சொல்ல விரும்புறது நியூஸ் இல்ல.. நடந்தத சொல்றது நியூஸ்' என அழுத்தமான வசனங்கள் மூலம் ஜர்னலிசத்தின் தற்போதைய நிலை குறித்து படம் பேசுகிறது.

நீதிபதியாக திருநங்கை நியமிக்கப்பட்டு, அதற்கான காரணமாக 'ஆணின் ஆணவமும் பெண்ணின் வலியும் எனக்குத் தெரியும், எனவே, இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க நான் சரியான நபர்" என விளக்கும் காட்சி மாஸ்டர் ஸ்ட்ரோக். படத்தின் மிகப் பெரிய பலம், நீண்ட வசனங்கள் மூலமாக காட்சிகளை கடத்தாமல், வசந்த் கோவிந்தாவின் வயலின் மூலம் காட்சிகளை கடத்தியிருப்பது திரைமொழியின் ஆற்றலை கூட்டுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தை காட்டாமல் வைத்திருந்தது, காவல் அதிகாரிக்கு பென்னிக்ஸ் ஜெயராஜ் என பெயரிட்டிருப்பது, சாய் பல்லவியையும் ஒரு விக்டிமாக காட்டியிருந்த விதம், ஆழமான வசனங்கள், இலவச சட்ட ஆலோசனை மையம் பயனற்று இருப்பது, குற்றவாளி மீதான முன்முடிவுகள் என காட்சிக்கு காட்சி கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல, தன் கணவர் சிறையிலிருக்கும்போது மனைவி ஒருவர் எந்தவித பதற்றமும் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வழக்கறிஞர் திக்கிப் பேசுபவராக காட்சிப்படுத்தி, அதை ஒரு டெம்ப்ளேட்டாக மாற்றியிருப்பது அயற்சியைத் தருகிறது.

முன்பு கூறியது போலவே, வசனங்களுக்கான இடத்தில் நிரம்பிக்கொள்ளும் கோவிந்த் வசந்தாவின் பிண்ணனி இசை சிறந்த காட்சிமொழியை கடத்த உதவியிருக்கிறது. ஸ்ரையந்தி, பிரேம்கிருஷ்ணா அக்காட்டு இருவரின் ஒளிப்பதிவில் வரும் ப்ரேம்கள் காட்சியின் தரத்தை கூட்டுகின்றன. ஷபீக் முகமது அலியின் ஷார்ப் கட்டிங்குகளை படத்தில் நன்றாக உணர முடிகிறது.

மொத்தத்தில் ஆழமான விஷயங்களை அழுத்தமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கும் விதத்தில் கண்டிப்பாக 'கார்கி' படத்தை தவறாமல் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x