Published : 06 May 2016 03:28 PM
Last Updated : 06 May 2016 03:28 PM
இயக்குநர் கௌதம் மேனன் சில படங்களை தயாரித்துள்ளார். தற்போது 'ஒன்றாக எண்டெர்டெய்ன்மெண்ட்' என்ற தனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் புது நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிவுள்ளார்.
'Uraiyaadal and stuff..' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் முதலில் தனுஷை பேட்டி எடுத்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். இப்பேட்டி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அப்பேட்டியின் இரண்டாம் பாகத்தை யூடியூப் சேனலில் பதிவேற்றி இருக்கிறார்கள்.
இப்பேட்டியில் தனுஷ் பேசும்போது, திரையுலகின் ஏற்ற இறக்கம், 'வடசென்னை', இந்தி வசனம் பேசி நடித்த அனுபவம், தன் வெற்றியில் இயக்குநர் செல்வராகவனின் பங்கு என பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அந்த உரையாடலில் சில பகுதிகள்..
கேள்வி: உங்கள் அண்ணனுக்காக நீங்கள் எந்த எல்லைக்கும் போகக் கூடியவரா?
தனுஷ்: ஆம் நிச்சயமாக, நான் இந்த அளவுக்குச் சினிமாவில் வளர்ந்ததற்கு காரணமே அவர்தான். ஒருவேளை அவர் இல்லை என்றால் நான் சினிமாவில் தோற்றுப் போய் எதுவுமே செய்யாமல், ஏதாவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்திருப்பேன். எனக்கு அடிப்படை சினிமாவை கற்றுத் தந்துள்ளார். ஒரு சகோதரனாக, செல்வராகவனின் ஒரு மாணவனாக அவருக்குத் தேவையான நேரத்தில் அவருடன் இருப்பது என்னுடைய கடமை. செல்வராகவன் இல்லையென்றால் இன்றைக்கு தனுஷ் திரையுலகில் இல்லை.
கேள்வி: எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஒரு நடிகனாக உங்களது வெற்றி தோல்விகளை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்?
தனுஷ்: வெற்றி தோல்விகள் எப்போதும் என்னைப் பெரிதாக பாதிப்பதில்லை. 2011 முதல் 2014 வரையான மூன்று ஆண்டுகள் சினிமா துறையில் எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது, ஆனால் ஒரு நல்ல படத்தின் மூலம் இதைச் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. அந்தப் படம் தான் ‘வேலையில்லா பட்டதாரி’. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தான் என் தலையெழுத்தை தீர்மானிக்கின்றது.
கேள்வி: ‘கொலவெறி’ பாடலைத் தாண்டி நீங்கள் பாடியுள்ள ‘போ இன்று நீயாக’ பாடல் என்னுள் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பாடலுக்கு நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறீங்கனு என்று நான் கேட்க விரும்பவில்லை. ஆனால் ஒரு பாடலுக்காக நீங்கள் பெரிய சம்பளம் வாங்குவதாகக் கேள்வி பட்டேன். நம் நாட்டிலேயே அதிகமான சம்பளம் வாங்குகின்ற பின்னணி பாடகர் நீங்கள்தானா?
தனுஷ்: இருக்கலாம், எனக்கு தெரியல. பொதுவாகவே அனிருத்துடன் வேலை செய்வது எனக்கு மிகவும் சௌகரியமான ஒன்று. யுவன் தான் என்னை முதல் முதலில் பாட வைத்தது. அவரைத் தாண்டி ஹாரிஸ், தேவா மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பிலும் நான் பாடியிருக்கிறேன்.
கேள்வி: நீங்க உங்களுடைய பள்ளி படிப்பை பற்றியெல்லாம் பொதுவா சொல்லும்போது, உங்களுக்கு இந்தி தெரிந்திருக்க வாய்ப்பில்லைனுதான் எனக்கு தோணுது, அப்புறம் எப்படி உங்களால ‘ராஞ்சனா’ படத்துக்கு முழுக்க முழுக்க பின்னணி குரல் கொடுக்க முடிந்தது?
தனுஷ்: ஆனந்த் எல் ராய் கிட்ட எனக்கு இந்தி தெரியாது. என்னால முடியுமானு கேட்டேன், அவர் நீங்க தமிழில் நடிங்க நான் இந்தில டப் பண்ணிக்கிறேன்னு சொன்னார். அவர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்காகவே அந்த படத்தில் என்னுடைய முழு உழைப்பையும் போட்டேன். படப்பிடிப்புக்கு முதல் நாளே அந்தப் படத்தின் வசனங்களை முதலில் தமிழில் மொழிபெயர்த்து எழுதி வைத்துக் கொள்வேன், நடித்து பார்ப்பேன். அதை ரெக்கார்ட் செய்து, அதுக்கு அப்புறம் தான் இந்தி வசனங்களை மனப்பாடம் செய்து நடித்து பார்த்து அதையும் ரெக்கார்ட் செய்து இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து தவறுகளை சரி செய்து கொள்வேன். அடுத்த நாள் படப்பிடிப்பில் அதிக பட்சம் மூன்று டேக்குகளுக்குள் முடித்துவிடுவேன். பொதுவா ஒரு படத்தோட டப்பிங்கை நான் ஒரு நாளிலேயே முடித்துவிடுவேன் ஆனால் ‘ராஞ்சனா’ படத்துக்கு டப்பிங் வேலையை முடிக்க எனக்கு எட்டு நாட்களானது. இப்பவும் என்னால ஒரு அளவுக்கு இந்தியை புரிந்துகொள்ள முடியும் ஆனால் பேச முடியாது.
கேள்வி: என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்கள் வாங்கிய தேசிய விருதைத் தாண்டி உங்களுடைய சாதனையாக பார்ப்பது அமிதாப் பச்சன் அவர்களுடன் நீங்கள் நடித்தது தான். நிறைய பேரைப் போல நானும் அவருடைய மிகப் பெரிய ரசிகன். நீங்களும் அப்படி தான்னு நினைக்கிறேன், அந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க.
தனுஷ்: அது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு, என்னுடைய அதிர்ஷ்டம்னு கூடச் சொல்லலாம். ‘ஷமிதாப்’ படம் நடித்த பிறகு நிறைய நட்சத்திரங்கள் ‘எனக்கு உங்க மேல ரொம்ப பொறாமையா இருக்கு, நான் எங்க நிற்கவேண்டும்னு ஆசைபட்டுட்டு இருக்கேனோ அங்க நீங்க நிற்கிறீங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். அமிதாப் பச்சன் மாதிரியான பெரிய நடிகரோடு நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பா அதைப் பார்க்கிறேன். அவரோடு நடிக்கும்போது நான் பதட்டப்படவே இல்லை.ரொம்பவே சகஜமாகத் தான் இருந்தேன், அந்த அளவுக்கு அவர் முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். அவரை அடித்து இழுத்துட்டுப் போகிற காட்சிகளுக்கு எல்லாம் மொத்த படக்குழுவுமே என்னை உயிரோடு எரிக்கிற மாதிரி பார்த்தார்கள். ஆனா அவர் அதை ரொம்பவே எதார்த்தமாக எந்த ஒரு கௌரவ குறைச்சலாவும் அதைப் பார்க்காமல் நடித்தார். அதுவே மிகப் பெரிய விஷயம்.
கேள்வி: ‘வடசென்னை’ எந்த மாதிரியான ஒரு படம்.. அது ஒரு வரலாற்றுப் படமா?
தனுஷ்: ஆமாம், வெற்றிமாறனே சொல்லியிருக்கார். ‘வடசென்னை’ 80-களில் நடக்கக் கூடிய ஒரு சம்பவத்தை கதைக்களமாகக் கொண்டது. நான் எப்பவுமே என்னுடைய படங்களை பற்றி என்னுடைய இந்தப் படம் இப்படி இருக்க போகுது என்றெல்லாம் பொதுவா பேசமாட்டேன், ஆனால் இந்த ஒரு படத்துக்கு நான் சொல்ல போறேன். இது கேங்கஸ்டர் படங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். அந்த அளவுக்கான ஒரு நம்பிக்கையை 'வடசென்னை' படத்தின் மீது வைத்திருக்கேன். அந்த படத்தைப் பார்க்கும் போது அது உங்களுக்கே ஏன் என்று தெரியும்.
வீடியோ பதிவில் பார்க்க:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT