Published : 14 Jul 2022 04:09 PM
Last Updated : 14 Jul 2022 04:09 PM
காரைக்கால் சாந்தி தியேட்டரில் ‘தெய்வம்’ திரைப்படம் வெளியாகியிருந்த நேரம். எங்கள் பகுதியின் எல்லாத் தெருப் பெண்களும் ‘செகண்ட் ஷோ’வுக்கும் குழந்தைகளுடன் கூட்டம்கூட்டமாகச் சென்று பார்த்துவந்தனர். அதில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே முருகையா’ பாடல் குறித்து ஊரே பேசிக்கொண்டது. நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். சிறுவனாக இருந்த எனக்கு அந்தப் பாடலின் ஆதாரமாக இருந்த ராகத்தின் பெயர் தெரியாது.
இளமையின் பரவசத்துடன் காரைக்கால் டைமண்ட் தியேட்டரில் ‘இளமைக் காலங்கள்’ பார்த்தபோது, அதில் இடம்பெற்றிருந்த ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும்’ என்கிற பாடல் என்னை என்னவோ செய்தது. பாடலின் சரணத்தில் வரும் ‘நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனி எங்கும் பூ வசந்தம். கட்டிக் கரும்பு தொட்டவுடன் சாறாகும்’ என்கிற வரிகளில் நின்று சுழன்றன ஆக்ஸிடோசின் உணர்வுகள்! அப்போதும் தெரியாது, அந்தப் பாடல் என்ன ராகம் என்று!
இளையராஜா கொடுத்த உயிர்
இந்த ராகம் குறித்தும் இதை இளையராஜா தன் பாடல்களில் எப்படி வித்தியாசமாகக் கையாண்டுள்ளார் என்பது குறித்தும் திரையிசை ஆய்வாளர் டெஸ்லா கணேஷிடம் கலந்துரையாடினேன்.
தர்பாரி கானடா ராகத்தைப் பொறுத்தவரை கே.வி.மகாதேவன் காலம் வரை மோனோஃபிக் முறையிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது. மோனோஃபோனிக், பாலிஃபோனிக் முறையின் அடுத்த வடிவமான ஹார்மோனிக் முறையை எம்.எஸ்.விஸ்வநாதன் சிறிய அளவில் தொடங்கிவைத்தார்.
தர்பாரி கானடாவில் இளையராஜா நிகழ்த்திய இசை அற்புதங்களுக்கு உதாரணங்களாக, அதற்குப் பிறகு வெளிவந்த ‘கல்யாணத் தேன் நிலா’, ‘ஆகாய வெண்ணிலாவே’, ‘மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா’, ‘உனக்குப் பிடித்த பாடல் அது எனக்கும் பிடிக்குமே’ ஆகிய பாடல்களைக் குறிப்பிடலாம்.
தர்பாரியின் பயணம்
1942இல் வெளியான ‘மனோன்மணி’ திரைப்படத்தில் பி.யூ.சின்னப்பா பாடிய ‘மோஹனாங்க வதனி’ என்கிற பாடலிலிருந்து தமிழ்த் திரையிசையில் தர்பாரி கானடா ராகம் கோலோச்சத் தொடங்கியது. தொடர்ச்சியாக ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள் தர்பாரி கானடாவை விதவிதமான அழகுடன் கையாண்டுள்ளனர்.
சில முக்கிய தர்பாரி கானடா ராகப் பாடல்கள்: ‘முல்லை மலர் மேலே’ (உத்தம புத்திரன்), ‘சின்னஞ் சிறிய வண்ணப் பறவை’ (குங்குமம்), ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு’ (நீதிக்குத் தலை வணங்கு), ‘பூமாலை வாங்கி வந்தான்’ (சிந்து பைரவி), ‘புது வெள்ளை மழை’ (ரோஜா), ‘காற்றே என் வாசல் வந்தாய்’ (ரிதம்), ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (கருத்தம்மா), ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ (கன்னத்தில் முத்தமிட்டால்), ‘மலரே மௌனமா’ (கர்ணன்), ‘நீ காற்று நான் மரம்’ (நிலாவே வா).
ஒரு வசீகர அழகு கொண்ட ராகம் இது. கேட்கிற கணங்களில் எல்லோரையும் ஈர்த்து, எளிதில் நினைவில் பதிந்துவிடும் தன்மை கொண்டது. நாடி நரம்புகளில் உடனடிப் பரவசத்தைப் பரவச்செய்வதாலேயே, இது உலகின் ஜனரஞ்சகமான ராகமாகக் கருதப்படுகிறது. மீண்டும் ஒரு முறை இந்தப் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். தர்பாரி கானடா என்னும் ராக தேவதை இன்னும் வசீகரமாக உங்கள் இதயத்தைத் தழுவி ஆனந்தம் தருவாள்.
> இது, இயக்குநர் எஸ்.ராஜகுமாரன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT