Published : 04 Jul 2022 12:25 PM
Last Updated : 04 Jul 2022 12:25 PM

3 நாட்களில் 8.40 கோடி ரூபாயை வசூலித்த மாதவனின் ராக்கெட்ரி நம்பி விளைவு

'ராக்கெட்ரி: நம்பி விளைவு' திரைப்படம் 3 நாட்களில் 8.40 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு'. இந்தப் படத்தை நடிகர் மாதவனே நடித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, 1994-ல் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ள படம், 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' என பெயரிடப்பட்டது. தமிழில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடித்துள்ளார். சிம்ரன், பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே , ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 1-ம் தேதி வெளியான இப்படம், வெளியான 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.8.40 கோடி வரை வசூலித்துள்ளது. ஜூலை 2-ம் தேதி 3 கோடியும், நேற்று 3.70 கோடியும் படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x