Published : 30 May 2016 03:16 PM
Last Updated : 30 May 2016 03:16 PM
தமிழ் திரையுலகில் பல்வேறு இயக்குநர்கள் அறிமுகமாவதும், ஒரு படம் தோல்வியடைந்தவுடன் காணாமல் போவதும் வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. 1990ல் 'புரியாத புதிர்' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான கே.எஸ்.ரவிகுமார் இப்போதும் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
திரையுலகில் படப்பிடிப்பில் கடுமையாக திட்டுவார், கோபப்படுவார் என்று பலரும் தெரிவித்தாலும், அறிமுகமானதில் இருந்து தற்போது வரை தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்றால் அது கே.எஸ்.ரவிகுமார் மட்டுமே என்கிறார்கள் திரையுலகினர். பணம் போடுபவர்கள் எந்த ஒரு விதத்திலும் நஷ்டமடையக் கூடாது என்று தெளிவாக திட்டமிட்டு பணியாற்றுவதில் இவருக்கு ஈடு இணையே கிடையாது.
அதேநேரத்தில், சாமானிய மக்களை மூன்று மணிநேரம் நல்ல பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் என்ற வகையில் மக்களின் இயக்குநராகவும் திகழ்பவர். ரஜினி, கமல், அஜித், விஜய் என தொடங்கி அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தையும் இயக்கிவிட்டார். இன்று (மே 30) பிறந்தநாள் கொண்டாடும் கே.எஸ்.ரவிகுமாரைப் பற்றி சில அறியப்படாத பக்கங்கள்:
* ஒரு படத்தின் கதை முடிவானவுடன், படப்பிடிப்பு நாட்கள் கணக்கிடுவார். அதில் இருந்து 15 நாட்களில் டப்பிங் பணிகள் முடிக்கிறோம். அடுத்த 10 நாட்களில் சென்சார் முடிக்கிறோம் என தேதிகள் குறிப்பிட்டு இத்தனை நாட்களில் மொத்த படத்தையும் முடித்து கொடுத்துவிடுகிறேன் என்று தயாரிப்பாளரிடம் கூறிவிடுவார் கே.எஸ்.ரவிகுமார்.
* உதவி இயக்குநராகும் முன்னர், படங்களின் வெளிநாட்டு உரிமையை வாங்கி விநியோகம் பண்ணியவர் கே.எஸ்.ரவிகுமார். அதில் நஷ்டம் ஏற்படவே, உதவி இயக்குநராக திரையுலகில் நுழைந்தார். அந்த காலத்தில் உதவி இயக்குநராக இருக்கும்போது புல்லட்டில் படப்பிடிப்பு வரும் ஒரே நபர் கே.எஸ்.ரவிகுமார் மட்டுமே.
* 'நாட்டாமை' படத்தில் அதிகமாக பஞ்சாயத்து காட்சிகள் இருக்கும். அக்காட்சிகளைக் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோயிலில் படமாக்கினார்கள். அக்கோயிலில் வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் தான் கூட்டம் அதிகமாக வரும். அதனால் பஞ்சாயத்தில் நிறைய பேர் நிற்கும் காட்சிகளை எல்லாம் வெள்ளி, ஞாயிறு நாட்களில் படமாக்கிவிடுவார். அங்கு சாமி கும்பிட வருபவர்களை எல்லாம் நிற்க வைத்து படமாக்கி இருக்கிறார். நடிகர்களின் க்ளோஸப் காட்சிகளை எல்லாம் மற்ற நாட்களில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
* தன்னிடம் பணியாற்றிய மற்றும் தனக்கு ஆரம்ப காலகட்டத்தில் உதவி புரிந்த இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே உதவி என்றால் முதல் ஆளாக அதைச் செய்வது கே.எஸ்.ரவிகுமார் தான்.
* முதல் படம் வெளியாகாத காலகட்டத்தில், கே.ஆர்.ஜி நிறுவனத்திடம் இருந்து ஒரு படம் இயக்குமாறு அழைப்பு வந்திருக்கிறது. அவ்வளவு பெரிய நிறுவனத்திடம் இருந்து அழைப்பா என்று வியந்து ஒப்புக் கொண்டிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ஆனால், பொருளாதார சூழ்நிலையால் படம் தொடங்க தாமதமாகி கொண்டே போனது. அப்போது வெவ்வேறு படங்கள் இயக்க வாய்ப்பு வரும்போது எல்லாம் கே.ஆர்.ஜி அலுவலகத்திற்கு சென்று "சார்.. ஒரு படம் இயக்க வாய்ப்பு வந்திருக்கிறது. நான் போகட்டுமா" என்று கேட்டுவிட்டு தான் சென்றிருக்கிறார்.
* சிம்பு நடித்த 'சரவணா' ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக். அப்படம் தொடங்கப்பட்டபோது கே.எஸ்.ரவிகுமாரிடம் பலரும் "அவர் சரியாக படப்பிடிப்புக்கு வரமாட்டார்" என்று கூற, இக்கதைக்கு அவர் மட்டுமே சரியாக இருப்பார். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளரிடம் ஒரு கணிசமான தொகையை கேட்டு வாங்கினார். அப்போது தயாரிப்பாளரிடம் "இப்போது கொடுங்கள். உங்களுக்கு தயாரிப்பு செலவில் இதை விட ஒரு பெரும் தொகையை நான் குறைத்து தருகிறேன்" என்றார். படம் முடிவடைந்து போட்டுப் பார்த்தவுடன் அனைவருக்குமே அதிர்ச்சி. என்னவென்றால் அந்த தெலுங்கு படத்தின் நெகடிவ்வை வாங்கி, அதில் வரும் ரயில் போகும் காட்சிகள், சண்டைக் காட்சிகள் சுமோ வருவது போன்றவற்றை அப்படியே எடுத்து தமிழில் சேர்த்துவிட்டார். இதனால் தயாரிப்பாளருக்கு பல்வேறு வகைகளில் லாபம் கிடைத்தது.
* 'லிங்கா' படப்பிடிப்பின்போது லைட்மேன் ஒருவர் நேராக கே.எஸ்.ரவிகுமாரிடம் "சார். சாப்பாடு சரியில்லை. சிக்கன் துண்டுகள் கம்மியாக இருக்கிறது" என்று புலம்பி இருக்கிறார். ரவிகுமார் உடனடியாக தயாரிப்பு நிர்வாகியை அழைத்து "இவர்கள் செய்யும் வேலையை வேறு யாரும் செய்ய முடியாது. உன்னால் இவர்கள் தூக்கும் எடையை தூக்க முடியுமா? இனிமேல் சாப்பாட்டில் எந்த ஒரு குறையும் இருக்கக் கூடாது" என்று கடுமையாக சாடியிருக்கிறார். படப்பிடிப்பில் பணியாற்றும் ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதனை தன் பிரச்சினையாக பார்ப்பவது இவருடைய வழக்கம்.
* இவருடைய படப்பிடிப்பில் ஒரு காட்சி படமாக்கி வருகிறார் என்றால், அடுத்த படப்பிடிப்புக் காட்சிக்கான பணிகள் இன்னொரு பக்கம் நடைபெறும். அந்தளவுக்கு வேகமாகவும், துல்லியமாகவும் படப்பிடிப்பு நடத்துபவர். இந்தி திரையுலகில் சஞ்சய் தத்தை வைத்து 'சாமி' ரீமேக்கை 47 நாட்களில் முடித்தவர் கே.எஸ்.ரவிகுமார் என்பது நினைவுகூரத்தக்கது.
* சில மாதங்களுக்கு முன்பு கே.எஸ்.ரவிகுமாரின் மூத்த மகள் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் வருவார்கள் என்றவுடன் கூட்டம் அதிகமாக இருக்குமே, அவர்களை பத்திரமாக அனுப்ப வேண்டுமே என்று ஆலோசனை செய்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். மண்டபத்தில் OUT மற்றும் IN என்று இருக்கும் இடங்களை அப்படியே IN மற்றும் OUT ஆக உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து தன்னுடன் இருக்கும் அனைவருக்கும் தெரிவித்திருக்கிறார். இதனால் ஒருவரும் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் அனைத்து நடிகர், நடிகைகளும் வந்து சென்றிருக்கிறார்கள். அதே போல சாப்பாடும் இடத்தில் கூட்டம் கூடிவிடுமோ என்று மாடியில் நடிகர், நடிகைகளுக்கு என்று தனியாக ஒரு சாப்பாடு கூடத்தை உருவாக்கி பரிமாற வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT