Published : 27 Jun 2022 10:17 PM
Last Updated : 27 Jun 2022 10:17 PM

புகழஞ்சலி | நடிகர் ‘பூ’ ராமு - “அதுவரைக்கும் ராமு சார் இங்கே இருப்பார்!”

சென்னை: தமிழ் சினிமாவின் யதார்த்த நடிகர்களில் ஒருவரான நடிகர் 'பூ' ராமு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.

பூ, நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், நெடுநால்வாடை, சூரரைப்போற்று, கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் தந்தையாக நடித்து கவனம் ஈர்த்திருப்பார். நாடகங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுச் செய்தியை அறிந்து திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு இணையத்தில் புகழஞ்சலி செலுத்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே…

"தன் வாழ் நாளை மக்களுக்காக மட்டுமே அர்ப்பணித்த மகா கலைஞன் எங்கள் தோழன் பூ ராமு. இன்றைய மாலை நேரத்தில் இப்படி ஒரு இடிச் செய்தி என் இதயத்தில் இறங்குமென நினைக்கவில்லை. எத்தனை கூட்டங்களில் எத்தனை போராட்டங்களில் ஒன்றாய் பயணித்திருக்கிறோம். ஒருவன் சாவது சகசமானது தான். ஆனால் ஒரு தோழன் சாவது என்பது ஒரு ஊர் சாவதற்குச் சமமானது. எண்ணற்ற நாடகங்களில் நடித்து மக்களுக்கு சேதி சொன்னவர்.

தனது எதார்த்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்து நின்றவர். நான் எழுதுவதா அழுதுவதா.. புதிய இயக்குநர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான "கிடா" எனும் திரைப்படத்தில் தோழர் ராமு தான் கதை நாயகன். அந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் நானே எழுதியிருக்கிறேன். படத்தை பாராமல் போய் விட்டாயே தோழா.. அண்ணன் இயக்குநர் சீனு ராமசாமியின் "இடம் பொருள் ஏவல்" படத்தில் சிவப்புச் சட்டை மாரியப்பனாக வருவாயாமே.. இப்படி எத்தனை உன் படங்களை இனி நீயின்றி நாங்கள் பார்த்தழுவது. ஆனால் ஒன்று நீ சுதந்திரமாக வாழ்ந்தாய் சுதந்திரம் இல்லாதவர்களுக்காக வாழ்ந்தாய்.. போய் வா நதியலையே!" - மீளா துயருடன் ஏகாதசி.

"நீர்ப்பறவை மீனவா
இடம் பொருள் ஏவல்
சிகப்புத் துண்டு மாரியப்பா
கண்ணே கலைமானே விவசாயி
இனி நான் காண வைத்திருக்கும் பாத்திரங்கள் எப்படி நிறையும்?
My Darling
Pretty young old man
Comrade..
Ramu love you" என இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

"தோழர் என்றழைத்தபோது 'தோழா' என்றழைக்கச் சொன்னது முதல் எண்ணிலடங்கா எண்ணங்களையும், அனுபவங்களையும், தந்ததோடன்றி அண்ணனாய், தந்தையாய், தோழனாய் அளவளாவி, வாதித்து, விவாதித்து, உன்னோடு இருந்த நாட்களை பொட்டலம் கட்டி வைத்துக்கொள்வேன். ஆனால் இனிமேல் எப்படி உனை அழைப்பேன் 'தோழா'" என பதிவு செய்துள்ளார் நடிகர் காளி வெங்கட்.

"தமிழ் சினிமால படிப்பு தான் முக்கியம் அழுத்தமா சொல்லற காட்சிகளில் முக்கியமான வரிசையில பரியேறும் பெருமாள் படத்துல principal சொல்லற சீன் என்னைக்கும் இருக்கும். அதுவரைக்கும் ராமு சார் இங்கே இருப்பார்.." என மற்றொரு பதிவர் தெரிவித்துள்ளார்.

"தமிழ் சினிமாவில் என்றும் நினைவில் இருக்கும் கதாபாத்திரத்திற்கு சொந்தக்காரர் பூ (பேனாகாரார்), நீர்ப்பறவை (லூர்து சாமி), சூரரை போற்று ( ராஜாங்கம்), கர்ணன் ( கர்ணனின் தந்தையாக) இப்படி பல படங்களின் வாயிலாக நம் மனதில் இடம் பிடித்தவர் இப்போது நம்மோடு இல்லை" என காமன்மேன் என்ற பெயரில் பதிவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"தோழர் 'பூ' ராமு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. திரைத்துறையில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து நம்மையெல்லாம் ரசிக்க வைத்தவர். சிறந்த முற்போக்கு சிந்தனையாளருக்கு எங்களது செம்மார்ந்த வீரவணக்கம் தோழர்" என பதிவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"கண்களுக்குள் இருந்து இன்னும் மறையவே இல்லை தோழரே நீங்கள்..." என கவுதமராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x