Published : 23 Jun 2022 02:22 PM
Last Updated : 23 Jun 2022 02:22 PM

“ரயிலைக் கொளுத்தும் இளைஞர்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்?” - பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரரசு

ராமநாதபுரம்: ''ரயிலைக் கொளுத்துகிறார்கள் என்றால் இந்த தைரியம் இளைஞர்களுக்கு எப்படி வந்தது? இந்த இளைஞர்கள் ராணுவத்திற்கு சென்று எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்? ஆகவே தேச விரோதிகளை இத்திட்டம் அடையாளம் காட்டிவிட்டது'' என்று அக்னி பாதை எதிர்ப்பு போராட்டம் குறித்து இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா பயிற்சியில் இயக்குநர் பேரரசு கலந்துகொண்டார். யோகா பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பேரரசு, ''அக்னி பாதை திட்டம் இளைஞர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதன்மூலம் ஒருவருக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, தேசப்பற்று கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ரயிலை கொளுத்துகிறார்கள் என்றால், இந்த தைரியம் இளைஞர்களுக்கு எப்படி வந்தது? இந்த இளைஞர்கள் ராணுவத்திற்கு சென்று எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்? ஆகவே தேச விரோதிகளை இத்திட்டம் அடையாளம் காட்டிவிட்டது. பொதுச்சொத்தை நாசம் செய்பவர்கள் தேசத்துரோகிதான். வன்முறை தூண்டிவிடப்படுகிறது. இந்தியாவுக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள்.

பல்வேறு நல்ல திட்டங்கள் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தேசத்தை வலிமை மிக்க நாடாக மாற்றும் நோக்கில் அக்னி பாதை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சமூக விரோதிகள் எதிர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவை வளர்ச்சி அடைய விடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் எவ்வித மத பேதமும் இல்லாமல் அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்திருப்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாரத மாதாவின் புகைப்படத்தை பதிவேற்றினாலும் விமர்சனம் செய்கிறார்கள். உண்மையான உணர்வுள்ள இந்தியன் இந்த நாட்டை காக்க இந்த திட்டத்தில் சேர்ந்து வென்று காட்ட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் இந்தியர்களாக இருக்க மாட்டார்கள்'' என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x