Published : 15 Jun 2022 11:47 AM
Last Updated : 15 Jun 2022 11:47 AM
‘டான்’ படத்தில் காட்டப்பட்டுள்ள தந்தை - மகன் உறவை கடந்த கால திரைப்படங்கள் வழி நின்று சற்றே விரிவாகப் பேசுவோம்.
இயக்குநர் விக்ரமனின் 'சூர்ய வம்சம்' படத்திலிருந்து தொடங்குவோம். தன்னுடைய உத்தரவையும், விருப்பத்தையும் மீறி செயல்பட்டதால் மகன் சின்ராசிடம் பேசாமல், அவரை தள்ளிவைத்திருப்பார் சக்திவேல் கவுண்டர். இதன் உச்சமாக மீண்டும் தன் கௌரவத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தன் மகன் நந்தினியை (தேவயானி) திருமணம் செய்ததால், வீட்டை விட்டே வெளியேற்றிவிடுவார் சக்திவேல்.
மகனின் விருப்பத்தையும், அவனது சூழ்நிலையையும் புரிந்துகொள்ள முடியாத தந்தையாக, பெரும்பாலான தந்தையர்களின் முகமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பார் சரத்குமார்.
அதுவரை பிரச்சினையில்லை. ஆனால், தன் தந்தையின் அத்தனை அடக்குமுறைகளையும் ஏற்றுக்கொண்டு, ஒருகட்டத்திற்கு பிறகு அவரை புகழ்ந்து தள்ளுவார். 'அப்பாவால தான் நான் இந்த அளவுக்கு வந்தேன்' என்ற ரொமான்டிசைஸ் அவரது தந்தையின் ஒட்டுமொத்த அடக்குமுறையையும், புரிதலற்றதன்மையையும் புனிதமாக்கிவிடுகிறது.
'தவமாய் தவமிருந்து' போன்ற படங்களை எடுத்துக்கொண்டால் அது தங்கள் கஷ்டங்களை வெளிப்படுத்தாத அப்பாக்கள் வகையாறவைச் சேர்ந்தவை. இதையொட்டியது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படங்களில் வரும் தந்தைகள். 'இங்க இருக்கு அமெரிக்கா..' என காதலியை தேடிப்போக சொல்லி வழிகாட்டும் தந்தைகள் திரையில் தோன்றுவது அபூர்வம்.
இது ஒரு வகையறா என்றால் மீண்டும் வந்து சேர்கிறது 'எம் மகன்' மாதிரியான படங்கள். ஒரு தந்தையின் மிகப் பெரிய அடக்குமுறையை அழுத்தமாக காட்சிப்படுத்திருக்கும் படம். அந்த வகையறாவைச் சேர்ந்த தந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இறுதியில் தன் தந்தையின் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில், 'நீங்க தான்ப்பா என்னைய செதுக்குன சிற்பி' என பரத் பேசுவதுதான் அபத்தம்.
சென்டிமென்ட் காட்சிகளை வைத்து ஓர் ஆபத்தை விளைவிக்கும் முயற்சி அது. அப்படியென்றால், தனது மகனை சிற்பியாக்க தாம் அனுபவித்த அதே கஷ்டத்தை கொடுத்து வளர்க்கப்போகிறாரா பரத்? - இந்தக் கேள்வியும் எழாமலில்லை.
'சந்தோஷ் சுப்ரமணி' படத்தைப் பற்றி, 'கேட்டத விட அதிகமாக கொடுக்குறத சந்தோஷம் என்னான்னு உங்களுக்கு தெரியும். ஆனால, கேட்டது கிடைக்காம போறதுல இருக்குற வேதனை எனக்கு தான் தெரியும்' என 'ஜெயம்' ரவி பேசும் வசனம் தான் மொத்த படமே. இறுதியில் தன் தவறை பிரகாஷ்ராஜ் புரிந்துகொள்வார்.
அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படத்தின் வெற்றிக்கே க்ளைமாக்ஸ்தான் காரணம் என கூறப்படுகிறது. அந்தப் படம் பேசுவதும் இதைத்தான். அது ஒரு வகையான 'அப்யூசிவ் பேரன்டிங்'. மகனை முடிந்த அளவுக்கு மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்திவிட்டு, இறுதியில் 'எல்லாம் உன் நல்லதுக்கு' என முடிப்பது அபத்தமானதுதானே.
'டான்' படத்தில் தன் மகனுக்காக தேடித் தேடி விருப்பமாய் கறிவாங்கும் சமுத்திரகனி, அதை அவர் சாப்பிட விடாத வகையில் தட்டில் கொட்டி, வார்த்தைகளால் காயப்படுத்துவார். 'எம் மகன்' படத்தில் வரும் 'ஈரல் சாப்பிடு' காட்சியைப்போல. 'நீ நல்லாருக்கத்தான் செய்றேன்' என மகனின் விருப்பத்திற்கு மாறாக முடிந்த அளவுக்கு காயப்படுத்திவிட்டு, இறுதியில், 'உங்க அப்பா உனக்காக தான் உழைச்சாரு' என தாய் பேசும் வசனம் சென்டிமென்ட்டால் எளிதில் கடந்துவிடுகிறோம்.
இந்தப் படத்தை பார்க்கும், சமுத்திரகனி மாதிரியான, நாசர் வகையறாவைச் சேர்ந்த அப்பாக்களால் தினம் தினம் பல வலிகளை அனுபவிக்கும் குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும். குறிப்பாக அவர்களின் தந்தைக்கு இதுபோன்ற படங்கள், 'நாம் செய்யும் அப்யூசிவ் பேரன்டிங் சரியானதே' என்ற அவர்களுக்கு கொடுமைக்கு இன்னும் வலிமையை சேர்க்குமே தவிரே தளர்த்தாது. இதே சமுத்திரகனி தான், 'பசங்கள அவங்க போக்குல விடுங்க' என 'அப்பா' படத்தில் பக்கம் பக்கமா வசனம் பேசுவது முரண்.
தந்தை - மகன் உறவை 'நார்மலைஸ்' செய்ய வேண்டிய தேவையை 'டான்' புறந்தள்ளுகிறது. படம் முழுக்கவே மகனுக்காக வாழ்கிறேன் என கூறிய அப்பா ஒருபோதும் நிம்மதியாக இருந்திருக்கமாட்டார்.
அப்பா கொடுத்த சித்ரவதையால், 'அப்பா பேச்ச எடுக்காத' என எல்லா இடங்களிலும் அப்பாவை புறந்தள்ளியே இருப்பார். இறுதியில் இருவரும் உன்னதமான உறவை இழந்திருப்பர். அந்த வகையில், இந்த அப்யூசிவ் பேரன்டிங் மனநிலையை சமூகத்தில் கெட்டிப்படுத்தும் வேலையை இனியும் தமிழ் சினிமாக்கள் தவிர்க்க வேண்டியது அவசியம்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 5 Comments )
படத்தில் வரும் இரண்டு மூன்று சீன்கள் கொண்டு இப்படி கூறுவது தவறு. ஒரு அப்பா தன்னுடைய கஷ்டம் தன்னோடு போகட்டும் என்று தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைப்பர். அவர்களுடைய அறிவுக்கு அவர்கள் சரியாக நடந்து கொள்கிறார்கள். படம் எடுத்ததில் கறை கூறலாமே தவிர படத்தின் தந்தையின் எண்ணமும் ஆற்றலும் சரியே.
0
0
Reply
இதே சமுத்திரகனி தான், 'பசங்கள அவங்க போக்குல விடுங்க' என 'அப்பா' படத்தில் பக்கம் பக்கமா வசனம் பேசுவது முரண். இக்கருத்தை பதிபிப்பதற்கு முன் திரை உலகத்தின் ஆழத்தை உணர்ந்து எடுத்துரைத்திருக்கலாம். அந்த நடிகர் கதாப்பாத்திரத்தை திரம்பட எடுத்தியம்பி இருக்கிறாரே தவிர, வேறு எந்த வகையிலும் பெரும்பாலான கலைஞர்கள் திரைக்கதை வசனத்திற்கு வாழ்வளிக்கவோ, முழு பொறுப்பேற்க வேண்டியதோ இல்லை. ஒரு கலைஞரின் வெவ்வேறு கதாப்பாத்திரங்கள் வேறுபட்ட அல்லது முற்றிலும் புறம்பான அம்சங்களை கொண்டிருப்பது வெகு இயல்பு.
0
0
Reply