Published : 10 Jun 2022 12:18 PM
Last Updated : 10 Jun 2022 12:18 PM
'பீஸ்ட்' படத்திலிருந்து தொடங்கி 'கேஜிஎஃப்2'-ஐ கடந்து இன்று 'விக்ரம்' வரை வந்து நின்றிருக்கிறது இணையவாசிகளின் வசைமொழிகள். இயக்குநர் நெல்சன் மீதான வன்மங்கள். இணையவாசிகளின் புரிதலுக்காக இந்தக் கட்டுரை. குறிப்பாக, இது நெல்சனுக்காக மட்டுமல்ல.. தோல்விகளால் மீண்டெழும் நெல்சன்களுக்காக.
இங்கே எல்லாமே ஒரு முடிவிலித் தொடர்தான். வெற்றியைப்போல தோல்வியும், தோல்வியைப்போல வெற்றியும் ஒரு முடிவிலிகளாக சுற்றிக்கொண்டேயிருக்கிறது. முடிவிலிக்கு ஒரு முற்று கிடையாது. முடிந்துவிட்டது என எண்ணி கடிவாளமிடவும் முடியாது. அது ஒரு தொடர் பயணம். அந்தப் பயணத்தின் வேகத்திற்கேற்ப நம்மை தயார்படுத்திக்கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் ஒரு 'ரோலர்காஸ்ட்' க்கு ஒப்பானது தான் இந்தப் பயணம். எவராலும் ஒரே இடத்தை எக்காலத்திற்கும் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை 'ரோலர்காஸ்ட்' நின்றுவிட்டால் சாத்தியப்படலாம்.
ஆனால், அது நம் பூமிப்பந்தைப்போல நிற்காமல் சுழன்றுகொண்டேயிருக்கும் என்பதால் திருப்பங்கள் வந்துகொண்டேயிருக்கும். அந்த திருப்பங்களுக்கு நம்மை தயார்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும். இந்த வாழ்க்கை ஒன்றும் ஓட்டபந்தயமல்ல. இங்கே அனைவரும் வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் அல்ல. மேற்சொன்ன சுழலில் உங்களுக்கான திருப்பங்கள் வரும்போது வெற்றியும் கைகூடும். போலவே தோல்வியையும் சந்தித்துதான் ஆக வேண்டும்.
மேற்சொன்ன சுழல்களுக்கும், திருப்பங்களுக்கும் இயக்குநர் நெல்சன் (நெல்சன்கள்) மட்டும் விதிவிலக்கல்ல. இங்கே நெல்சன்கள் எளிதாக இணைய உலகிற்கு இலக்காகிவிடுகிறார்கள். உண்மையில் ஒருவரின் ஒரு தவறு முந்தைய வெற்றிகளையும், அதனுடன் தொடர்புடைய மொத்த உழைப்பையும் மறக்கடிக்கச் செய்துவிடுகிறது. மீண்டும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். வேறு வழியேயில்லாமல் அவர் தன்னை நிரூபித்தாகவேண்டியிருக்கிறது.
சச்சின் 99 ரன்களை எடுத்தது முக்கியமில்லை. 100 ரன்களை குவிக்காமல் ஆட்டமிழந்தது தான் பிரச்சினை. தோனியின் முந்தைய ஏராளமான ஆட்டங்களின் பினிஷிங் ஷாட்களால் விளைந்த வெற்றியை அவரது இன்றைய விக்கெட் எளிதாக மறக்கடிச் செய்துவிடுகிறது.
அது எத்தனை துயரம். முந்தைய எல்லா உழைப்புகளும் கடலில் கரைந்த உப்பாக கரைந்து ஒன்றுமேயில்லாமலாகிவிடுகிறது. ஒரு கலைஞனோ, ஒரு வீரனோ, தன்னை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏன் தொடர்ந்து தள்ளப்பட வேண்டும். எல்லா வேளைகளிலும் வெற்றிகளை அறுவடை செய்துவிட முடியாது என்பது தானே இயற்கையின் நியதி; பிரபஞ்சத்தின் கணக்கு. தொடக்கத்திலிருந்தே தோல்வியை பெரும் பாரமாக கற்பித்ததால் தான் தேர்வில் தோல்வி என்றதும் அடுத்த தேர்வாக மறுதேர்வை நாடாமல் தற்கொலையை நாடுகின்றனர் மாணவர்கள். இந்த கற்பிதங்கள் ஆபத்தானவை.
திரைத்துறையை எடுத்துக்கொண்டால் வெற்றிக்கான அளவுகோல்களை நிர்ணயிப்பதிலேயே பல தடுமாற்றங்கள் நிலவுகின்றன. ஒரு படம் வணிக ரீதியாக வசூல் வேட்டை நடத்தினால், அது வெற்றி பெற்ற படமா? வணிகத்தில் தோல்வியடைந்த நல்ல கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வெற்றிக்கான பார்முலாக்களில் வராதா? தரமான கதையம்சமும் கொண்டாடப்படாமல், வணிகத்திலும் தோல்வியடைந்து, பத்தாண்டுகளுக்கு பிறகு 'கல்ட்' சினிமா என போற்றப்படும் படங்களை எங்கே கொண்டு போய் சேர்ப்பது?
ஆக, வெற்றி என்பதற்கான அளவுகோலே இங்கே வெவ்வேறாகத்தான் இருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது வெளியான முதல்நாளே ரூ60 கோடியை வசூல் செய்த நெல்சனின் 'பீஸ்ட்' தோல்வியடைந்த படமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
நெல்சனை பொறுத்தவரை (இங்கே நெல்சன் என்பது நெல்சன் மட்டுமல்ல.. சினிமாவில் போராடத்துடிக்கும் நெல்சன்கள்) ஆயிரமாயிரம் சினிமாக்கனவுகளோடு, சின்னத்திரைக்குள் நுழைந்து, ஸ்கிரிப்ட் ரைட்டராக முன்னேறி, பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
அதைவைத்து திரைத்துறைக்குள் நுழைய முயன்றவருக்கு சிம்பு நடிப்பில் 'வேட்டை மன்னன்' முதல் படமாக வந்திருக்க வேண்டியது. முதல் படமே முழுக்குபோடப்பட்டது. சோர்ந்துவிடமால், தொடர்ந்து 'கோலமாவு கோகிலா'வை சாத்தியமாக்கினார். ரசிகர்களிடையே படம் நல்ல வரவேற்பை பெற்றது. கதையும், டார்க் காமெடியும் கைகொடுத்தது. அடுத்த படமே 'டாக்டர்' சிவகார்த்திகேயேனை வைத்து மிரட்டலான ஹிட். இம்முறையும் டார்க் காமெடி. சிறப்பாகவே அவருக்கு கைகொடுத்தது.
சொல்லப்போனால் கரோனாவால் மகிழ்ச்சியை தொலைத்த குடும்பங்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்களுக்கும் ஒன்று சேர புத்துணர்ச்சி அளித்து மீட்ட படம் 'டாக்டர்'. கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு நுழைந்த ரசிகர்கள், பேமிலி ஆடியன்ஸ்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வீட்டுக்கு அனுப்பினார் 'நெல்சன்'.
படிப்படியாக முன்னேறி திரைத்துறையில் குறிப்பிட்ட இடத்தை அடைய போராடிக்கொண்டிருக்கும் அவர் கையில் வந்து சேர்ந்தது 'பீஸ்ட்'. உண்மையில் நெல்சனின் வெற்றி என்பது திரையுலகில் கவனிக்கப்பட்ட வெற்றி. மூன்றாவது படமே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனுடன். நான்காவது படம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருடன். இப்படியான அபரிவிதமான வளர்ச்சியில் கூடவே சறுக்கல்களும் இருக்கத்தான் செய்யும்.
முதல் நாள் முதல் காட்சிக்காக விடிய விடிய காத்திருந்து, பணத்தை செலவிட்டு, தன் நடிகனை திரையில் காண வரும் ரசிகனுக்கு, படம் தன்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாமல் போனால் நிச்சயம் அதிருப்தி இருக்கும். அந்த ஏமாற்றம் இயக்குநர் மீதான கோபமாக மாறுவது இயல்பு. ஆனால், வன்மமாக மாறுவது தான் பிரச்னை. இணைய உலகில் உலாவரும் மீம்ஸ்களும், மற்ற இயக்குநர்கள், படங்களுடனான ஓப்பீடு, தொடர்ந்து ஒரு கலைஞனை அழுத்தத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது. அவனது முந்தைய வெற்றிகள் எதுவும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. உழைப்பு மொத்தமும் வீணாகி, அடுத்த முறை தன்னை நிரூபித்தேயாகவேண்டும் என்ற அழுத்தம் தொற்றிக்கொள்கிறது.
அந்த அழுத்தமே ஒருவனுக்கு அடுத்த படைப்புக்கான தரத்தை குலைக்க காரணமாகிவிடுகிறது. 'பீஸ்ட்' கூட அப்படியான பதற்றத்தைத்தான் நெல்சனுக்கு கொடுத்திருக்க கூடும். குறிப்பாக முன்னணி நடிகர் ஒருவரை வைத்து படம் இயக்கும் அனைத்து இயக்குநர்களும், நடிகரின் ரசிகர் பட்டாளத்தை திருப்திபடுத்த வேண்டும் என்றுதான் உழைப்பை கொட்டுகிறார்கள். அந்த அதீத உழைப்பில், நிகழும் தவறுகள், சினிமாத்தனமான காட்சிகள், ஓவர் டோஸ் மாஸ் காட்சிகள், ஏமாற்றத்தை கொடுத்துவிடுகின்றன. முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக எடுக்கவேண்டிய கட்டாயத்தால் தான் பெரிய படங்கள் சொதப்பிவிடுகின்றன.
'விக்ரம்' படத்துடன் ஒப்பிட்டு ’பீஸ்ட்’டுக்காக நெல்சன் கலாய்க்கப்படுகிறார். இரண்டு படங்களே முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்டவை. இரண்டு படங்களின் ஆக்ஷன்கள்தான் இங்கே கேலிக்கான மையமாக பெரிதும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 'பீஸ்ட்' உடன் ஒப்பிடாமல் 'விக்ரம்' படத்தை தனித்துப் பார்த்தால், 'விக்ரம்' படத்தின் பல காட்சிகளிலும் அபத்தங்கள் தென்படும். இதுபோன்ற சினிமா அனைத்துமே உண்மையானப் பொய்களைக் கொண்டவை. அந்தப் பொய்கள் எந்த அளவுக்கு உண்மையாக காட்டப்படுகின்றன என்கிற இடத்தில்தான் வர்த்தக வெற்றி இருக்கிறது. அதில்தான் 'விக்ரம்' சற்று முன்னோக்கி காணப்படுகிறது. 'பீஸ்ட்' படத்தில் உண்மையானப் பொய்கள் சரியாகக் கையாளப்படவில்லை என்பது மட்டுமே குறை. இதற்காக மலிவான பாணியில் கலாய்ப்பது எந்த வகையில் சரி?
திரையுலகம் என்பது பெரும்பாலும், ஒட்டுமொத்தமாக வணிகத்தையும், ரசிக மனப்பான்மையையும் முன்வைத்தே இயங்குகிறது என்பதில் மாற்றமிருக்க முடியாது. அப்படியாக ரசிகர்களுக்காக உருவாக்கப்படும் படங்கள் தவறும் போது குறைகளை சுட்டிக்காட்டாலாம், அதிருப்தியை வெளிப்படுத்தலாம், ஆனால், வன்மத்தையும் வெறுப்பையும் விதைப்பதை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான விமர்சனமாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
அடக்கம் அமரருள் உய்க்கும்
0
0
Reply