Published : 09 Jun 2022 12:01 PM
Last Updated : 09 Jun 2022 12:01 PM
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் சென்னையில் பிரபலங்கள் சூழ இன்று (ஜூன் 9) பிரம்மாண்டமாக நடைபெற்றது.
'நானும் ரவுடிதான்' படத்திலிருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்கத் தொடங்கினர். ஏறக்குறைய 6 வருடங்களாக காதலித்துவந்தவர்கள், இன்று மணமுடிக்க திட்டமிட்டனர். முன்னதாக திருப்பதியில் நடைபெறவிருந்த அவர்களின் திருமணம் பல்வேறு காரணங்களால் சென்னைக்கு மாற்றப்பட்டது. அந்தவகையில் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்திற்காக பிரம்மாண்டமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
பிரபலங்கள் கலந்துகொண்ட அவர்களின் திருமணம் 7.30 மணிக்கு தொடங்கியது. சரியாக இன்று காலை 10.20 மணி அளவில் நயன்தாராவுக்கு தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.
இது தவிர, அரங்குக்குள் செல்பவர்கள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது போன்ற பலத்த கட்டுப்பாடுகளுக்கு நடுவே திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வு நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக பிரத்யேகமாக பதிவு செய்யப்படுவதால் செல்போன் கேமிராக்களில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ரிசார்டின் பின்புறம் உள்ள கடற்கரைக்குச் செல்லவும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அட்லி, நெல்சன், பொன்வண்ணன், கேரள நடிகர் திலீப், மோகன்ராஜா, கலா மாஸ்டர், ரெபா மோனிகா ஜான், புகைப்படக்கலைஞர் சிற்றரசு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, போனிகபூர், கார்த்தி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
திருமண விருந்தில், பன்னீர் பட்டானிக்கறி, பருப்புக் கறி,அவியல், மோர்க் குழம்பு, மிக்கன் செட்டிநாடு கறி, உருளை கார மசாலா, வாழைக்காய் வறுவல், சென்னா கிழங்கு வறுவல், சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு, காளான் மிளகு வறுவல், கேரட் பொரியல்,பீன்ஸ் பொரியல், பலாப்பழம் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், பூண்டு மிளகு ரசம், தயிர், வெஜிடபுள் ரைதா, வடகம், ஏலக்காய் பால், பாதாம் அல்வா, இளநீர் பாயாசம், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
இதனிடையே, விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT