Last Updated : 01 Jun, 2022 10:16 AM

3  

Published : 01 Jun 2022 10:16 AM
Last Updated : 01 Jun 2022 10:16 AM

இவற்றைப் பாடியது நீங்கள்தானா? - கேகே... உங்களைக் கொண்டாட மறந்ததற்கு மன்னியுங்கள்!

அடர்ந்த இருளொன்றில் வெண் ஆகாய நீலவெள்ளத்தில் தொற்றும் தனிமையைப் பற்றிக்கொண்டு, வற்றிக்கிடக்கும் மகிழ்ச்சித் துளிகளை எட்டிபிடிக்கும் கனங்களில் மெய் முழுக்க விரவிக்கிடக்கும் சோக வெம்மையை அங்குலம் அங்குலமாக நீவி துடைத்தெடுக்கும் அந்த ஈரக்குரல் கேகே-வுடையது. 'உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே... முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே' என 'நினைத்து நினைத்து பார்த்தேன்' பாடலை அவர் பாடி முடிப்பதற்குள் விவரிக்க முடியாத மென்சோகம் நம்மை ஆட்கொண்டிருக்கும்.

அப்பொழுதில் கணத்த மௌனம் நம்மைச் சூழ்ந்திருக்கும். உண்மையில், 'உள்ளத்தில் வெப்பம் சேர்க்கும் குரல் இன்று எங்கே?' என கேட்க வைத்துவிட்டு காற்றில் கரைந்துவிட்டார் கேகே.

பல அற்புதமான பாடல்களை கடந்த தலைமுறைக்கும், இந்த தலைமுறைக்கும், எதிர்வரும் ஆயிரம் தலைமுறைகளுக்கும் சேர்த்தே கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவரிடம் நமக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது அது. 'தேங்க்யூ கேகே'.

கேகே மறைந்ததும் ஒருவித குற்ற உணர்ச்சியையும் சேர்த்தே கொடுத்துச் சென்றுவிட்டார். அவரது பாடல்களின் பட்டியலை எடுத்துப் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துச் சென்றிருக்கிறார்.

தமிழின் ஆகச் சிறந்த பாடல்களுக்குச் சொந்தக்காரனை தமிழ் கூறும் நல்லுலகு கொண்டாட மறந்ததேன்? என குற்ற உணர்வை கொடுத்திருக்கிறார். அவரது மிகச் சிறந்த பாடல்களை மட்டும் பட்டியலிடலாம் என வடிகட்டினால், ஒட்டுமொத்த பாடல்களும் தேங்கிவிடுகிறது. நிச்சயம் அது வடிகட்டியின் பிழையில்லை. கொண்டாட மறந்த நம் பிழை.

நம் பள்ளி, கல்லூரி, காதல் நாட்களை தன் குரலால் அழகாக்கியவர் கேகே. சொல்லப்போனால், அவரது குரலின் விரல் பிடித்து நடந்தவர்கள் தான் இன்றைய 90ஸ், 2கே கிட்ஸ்கள் அனைவரும். முதலில் அவரது பாடல்களின் பட்டியலைப் பார்த்துவிடுவோம்.

  • 'காதல் ஒரு தனிக்கட்சி' (ஷாஜஹான்)
  • 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்' (உயிரோடு உயிராக)
  • 'காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும் வரை' (செல்லமே)
  • 'உயிரின் உயிரே' (காக்க காக்க)'
  • ’என் காதல் சரியோ தவறோ' ( குட்டி)
  • 'ஒரு புன்னகை பூவே' (12பி)
  • 'வார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு கொல்லப்பாக்குதே' (தாமிரபரணி)
  • 'லேலக்கு லேலக்கு லேலா' (ஆதி)
  • 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' (மின்சார கனவு)
  • 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்' (7ஜி ரெயின்போ காலனி)
  • 'பட்டாம்பூச்சி கூப்பிடும் போது' (காவலன்)
  • 'காதல் வளர்த்தேன்' (மன்மதன்)
  • 'அப்படிப்போடு போடு' (கில்லி)
  • 'நீயே நீயே' (எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி)
  • 'நிஜமா நிஜமா' (போஸ்)
  • 'அண்ணனோட பாட்டு' (சந்திரமுகி)
  • 'அண்டங்காக்கா கொண்டக்காரி'(அந்நியன்)

இப்படி தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையலாக ஊறிக்கொண்டேயிருக்கிறது கேகேவின் பாடல்கள். ஒரு தலைமுறையின் ரிங்க்டோன் பாடல்கள் இவை. அவருக்கு 'அப்படிப்போடு' என குத்தாட்டம் போடவும் தெரியும், அதே சமயம், 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்' பாடல் வழியே உருகி கரையவும் தெரியும். இரண்டு எல்லைகளையும் லாவகமாக தன் குரல் வழியே கையாளத் தெரிந்த மகா கலைஞன். 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்' பாடலில் ஸ்ரேயே கோஷல் குரலுக்கு டஃப் கொடுத்து மிரட்டியிருப்பார். மென்சோகத்தை அப்படியே குரல் வழியே கடத்தி மொத்த பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார் கேகே.

1997 முதல் தற்போது வெளியான 'லெஜண்ட்' படத்தின் இரண்டு பாடல்கள் வரை இந்திய திரையுலகிற்கு மிகப் பெரிய பங்களிப்பு கொடுத்தவர் கேகே. குறிப்பாக இந்தி பாடல்களில் கேகேவைத் தவிர்த்த ஒரு ப்ளேலிஸ்டை உருவாக்கிவிட முடியாது. இசையமைப்பாளர் பிரித்தம், நடிகர் இம்ரான் ஹாஷ்மி, கேகே கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு கொள்ளைப் பிரியம். அவர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அத்தனையும், வெறும் ஹிட் ரகமல்ல. வெறித்தனமான ஹிட் பாடல்கள். 'ஜன்னத்' படத்தில் 'ஜராசா தில் மே தே ஜகா' பாடல் தொடங்கி, 'கேங்க்ஸ்டர்' படத்தின் 'துஹி மேரி சப் ஹை' பாடல் என காலத்துக்குமான பாடல்களை கொடுத்தவர்.

இம்ரான்ஹாஸ்மியின் 'கேங்க்ஸ்டர்' படம் அடையாளம் பெற்றதே கேகேவின் குரலால் என்றால் மிகையாகாது. காரணம் 'து ஹி மேரி சப் ஹை'பாடல் அப்படியான ஒரு ஹிட் கொடுத்தது. படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும், பாடல் ஹிட். 'தில் இபாதத்' (தும் மிலே) பாடலில் சோஹா அலிகான் கண்களில் கண்ணீர் வடியும், அதைக் கட்டுப்படுத்திகொண்டிருப்பார். அதைப்போலத்தான் இந்தப் பாடலைக்கேட்கும் நமக்கும் சொல்ல முடியாத உணர்வு பொங்கிவழியும்.. 'பஜ்ரங்கி பைஜான்' படத்தில் 'து ஜோ மிலா' பாடல் புதிய உறவின் பரிமாணத்தை பேசும் அழகிய பாடல். 'ஆஷிகி 2' படத்தில் 'பியா ஆகேனா' பாடல் பிரிவின் துயரை பேசும். இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு யுகத்துக்கான பாடல்களை மொத்தமாக பாடிவிட்டு சென்றிருக்கிறார் கேகே. நம் தனிமையும், காதல் தோல்வியும், குதூகலமும், கேகே இல்லாமல் நிறைவு பெறாது. கேகேவின் குரல் தண்ணீர்போல எதில் ஊற்றினாலும், அந்த சம்பந்தப்பட்ட உணர்வுகளுக்கு ஏற்றார்போல வடிவமைத்துக்கொள்ளும் வகைமையைச் சேர்ந்தவை.

'உயிர் போகும் உருவம் போகுமா' என அவரது பாடல் வரியே இந்தக் கட்டுரையை முடிப்பது சாலச்சிறந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக கேகேவுக்கு சொல்ல நம்மிடம் இருப்பது ஒன்று தான்... 'தேங்க்யூ கேகே ஃபார் எவர்திங்'.. வி மிஸ் யூ!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x