Published : 05 May 2016 10:50 AM
Last Updated : 05 May 2016 10:50 AM
இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசையமைப்பு என பிரிக்க தேவை என்ன இருக்கிறது என இசையமைப்பாளர் இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 63-வது தேசிய விருதுகளை வழங்கினார். தாரை தப்பட்டை படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த விருதினை பெற்றுக்கொள்ள இளையராஜா செல்லவில்லை.
இது குறித்து திருவண்ணாமலை ஸ்ரீ ரமண ஆசிரமத்தில் இருந்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு இளையராஜா அளித்த பேட்டியில், "கடந்த 2010-ம் ஆண்டு வரை சிறந்த இசையமைப்புக்கான தேசிய விருது என்று ஒரு பிரிவு மட்டுமே இருந்தது. சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீணா போன்ற படங்களுக்காக சிறந்த இசையமைப்புக்கான விருதினை நான் பெற்றிருக்கிறேன்.
அந்த நடைமுறையை மாற்றி சிறந்த இசையமைப்பு (பாடல்), சிறந்த பின்னணி இசையமைப்பு என இரு பிரிவுகளில் தற்போது தேசிய விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு எனக்கு சிறந்த பின்னணி இசைக்கும், ஜெயச்சந்திரனுக்கு சிறந்த இசையமைப்புக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படி இசைக்கான விருதை இரண்டாக பிரித்துள்ளது நான் ஏதோ பாதி வேலையை மட்டுமே சிறப்பாக செய்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த இசையமைப்பு (பாடல்) என பிரிக்க தேவை என்ன இருக்கிறது? ஒருவேளை தேசிய விருது வழங்கும் கமிட்டி இசையமைப்பாளர்கள் பாதி வேலையை மட்டும் சிறப்பாக செய்தால் போதும் என்பதை ஊக்குவிக்கிறதா?" என்றார்.
இளையராஜா கடிதம்
இது தொடர்பாக இளையராஜா மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு இரண்டு கடிதங்களை எழுதியிருக்கிறார்.
அக்கடிதத்தில், "சினிமா இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற துறையினருக்கு வழங்கப்படுவதுபோல் இசையமைப்புக்கும் ஒரே ஒரு விருது மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஒரு இசையமைப்பாளரின் திறமையை அவர் ஒரு படத்திற்காக படைத்த பாடல்கள், அமைத்த பின்னணி இசை என எல்லாவற்றையுமே ஒருசேர சீர்தூக்கி பார்த்து விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும். அதைவிடுத்து பாதி வேலைக்கும் மட்டும் அங்கீகாரம் அளிக்கும் முறை எதற்காக? தேசிய விருதுகள் வழங்கப்படுவதற்கான இலக்கும் இதுவல்ல என்றே கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT